வரலாற்றில் இன்று – 21.07.2021 உமாசங்கர் ஜோஷி
சுதந்திரப் போராட்ட வீரரும், இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியுமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) 1911ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா கிராமத்தில் பிறந்தார்.
காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, 1930ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். இவருடைய ‘விஷ்வசாந்தி’ என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.
அதை தொடர்ந்து இவர் இயற்றிய படைப்புகள் குஜராத் இலக்கியத்திற்கு வளம் சேர்த்தன. ஞானபீட விருது, சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
இலக்கிய களத்தில் பன்முகப் பரிமாணம் கொண்ட உமாசங்கர் ஜோஷி 77வது வயதில் (1988) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1899ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற சிறந்த எழுத்தாளரும், பத்திரிக்கையாளருமான எர்னஸ்ட் ஹெமிங்வே (Ernest Hemingway) அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம் ஓக் பார்க் நகரில் பிறந்தார்.
1998ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி விண்வெளி வீரர் அலன் ஷெப்பர்ட் மறைந்தார்.
2001ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் மறைந்தார்.