படைத்திறல் பல்லவர்கோன் | 5 | பத்மா சந்திரசேகர்

 படைத்திறல் பல்லவர்கோன் | 5 | பத்மா சந்திரசேகர்

5. காதல் மனம்

ன்னை அணைத்து, தனது இதழ்களில் முத்தமிட்ட நந்திவர்மரை பிடித்துத் தள்ளிய அந்த பெண்ணை நிமிர்ந்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார்.

“யார்.. யார் நீ?”

பதிலேதும் வரவில்லை. எனினும், அந்த பெண்ணின் மெல்லிய உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தது.

“என்னை மன்னித்து விடு பெண்ணே. என் மனைவி என நினைத்தே உன்னை அணைத்து விட்டேன். மன்னிப்புக் கேட்பதால் நான் செய்த தவறு சரியாகிவிடாது. எனினும், அதைத் தவிர என்னால் வேறு எதுவும் செய்ய இயலுமெனத் தோன்றவில்லை” மெல்லிய குரலில் கூறினார் நந்திவர்மர். இப்போதும் அந்தப் பெண்ணிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

“நீ யார்? இந்த வனப்பகுதியில் இந்த நேரத்தில் தனியே ஏன் வந்துள்ளாய்? உன்னுடன் வந்தவர்கள் எங்கே?” அடுக்கடுக்காக வினாக்களைத் தொடுத்தார் நந்திவர்மர்.

“ஐயா, நான் பாண்டிய இளவரசி. மாறன்பாவை என்பது எனது பெயர். காஞ்சிக்கு ஏகாம்பரநாதரைத் தரிசிக்க வந்தேன். இங்கு ஒரு மான்குட்டியைக் கண்டேன். அதைப் பிடிக்க வந்தேன், வனத்திற்குள் வழிதவறி விட்டேன். தயைகூர்ந்து என்னை என் தமையனாரிடம் சேர்ப்பித்து விடுங்கள்” இருட்டு நேரத்தில் வழிதவறிவிட்டதில் அச்சமடைந்திருந்த அந்தப் பெண், தான் பத்திரமாக தனது இருப்பிடம் செல்ல உபாயம் தேடி தன்னைப் பற்றிய உண்மைகளை நந்திவர்மரிடம் மறைக்காமல் கூறினாள்.

தான் முத்தமிட்ட பெண் பாண்டிய இளவரசி என அறிந்ததும் நந்திவர்மர் சற்று அதிர்ந்தார். ஒரு கணம் அந்தப் பெண்ணை என்ன செய்வதென சிந்தித்தார்.

‘எவரேனும் வீரனை அனுப்பி, பாண்டிய இளவரசியை அவள் இருப்பிடம் சேர்த்துவிடு’ என்றது அவரது ஒரு மனம். ‘இந்தப் பெண்ணின் அருகாமை மனதிற்கு உற்சாகமளிக்கிறதே…. அதைத் தொடர்ந்து அனுபவிக்கும் ஏக்கம் எழுகிறதே…. நாமே கொண்டு சென்று விட்டு வரவேண்டும்’ இன்னொரு மனம் மாறன்பாவையை எண்ணி ஏங்கியது. உள்ளத்தை மறைத்து, உதடுகளைத் திறந்து பேசத்தொடங்கினார்.

“எனது மனைவி ஏரிக்கரையில் எனக்காகக் காத்திருப்பாள். அங்கு சென்று, அவளை மண்டபத்தில் விட்டுவிட்டு, பின்னர் உன்னை உன் தமையனாரிடம் ஒப்படைக்க ஏற்பாடு செய்கிறேன் தேவி. என்னுடன் வா” சொல்லிவிட்டு ஏரிக்கரை நோக்கி நடந்தார் நந்திவர்மர். பின்னாலேயே நடந்தாள் மாறன்பாவை.

ஏரிக்கரையில் சங்கா, நந்திவர்மருக்காக காத்திருந்தாள். அவர் வருவதைக் கண்டு, கையில் மான் இருக்கிறதாவென ஆவலுடன் பார்த்தவள் அதிர்ந்து போனாள். நந்திவர்மருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த பெண்மானைப் பார்த்ததும் ஏனோ அவள் உள்ளம் கலங்கியது.

“ஐயனே. இவள் யார்?”

“பாண்டிய இளவரசியாம். வழி தவறி வந்துவிட்டாளாம். அவளது உறவினர்களுடன் சேர்க்க வேண்டும். வா மண்டபத்திற்குப் போகலாம்” சங்காவிடம் சொல்லிவிட்டு, மாறன்பாவையிடம் திரும்பினார்.

“நீயும் தான் பெண்ணே. வா. இவளை மண்டபத்தில் விட்டு, பின்னர் உன்னுடன் வருகிறேன்” சொல்லிவிட்டு மண்டபத்தை நோக்கிக் கை காட்டினார். முதலில், நந்திவர்மரும் சங்காவும் நடக்க, அவர்களைத் தொடர்ந்து மாறன்பாவை சென்றாள்.

நந்திவர்மர் சங்காவுடன் நடந்து வந்த போதும், சற்று முன்னர் தான் நுகர்ந்த மாறன்பாவையின் மேனி வாசம் அவர் மனதில் வந்து சென்றது. மாறன்பாவையின் அதரங்களின் வாசமும், மேனி மணமும் அவர் மனதை விட்டு அகல மறுத்தன. எதுவும் பேசாமல் மண்டபம் வரை சென்று, மண்டபத்தை அடைந்தார்.

“சங்கா. நான் இந்தப் பெண்ணை இவளது உறவினர்களிடம் ஒப்படைத்துவிட்டு வருகிறேன்” அவள் விழிகளைக் காணாமல், எங்கோ பார்த்த படி கூறினார்.

“ஐயனே, கோட்புலியாரை அனுப்பலாமல்லவா?” தயக்கத்துடனும், அச்சத்துடனும் வந்தது சங்காவின் குரல்.

“இல்லை சங்கா. இவள் பாண்டிய இளவரசி. தெரியாமல் நம்மிடத்திற்கு வந்து, என்னிடம் தஞ்சமடைந்துவிட்டாள். இவளை நான் அழைத்துச் சென்று விடுவதே நல்லது” சொல்லிவிட்டு புறப்பட்டார் நந்திவர்மர்.

“மன்னரே. தீவர்த்தி எடுத்து வரச் சொல்கிறேன். இருளில் தீவர்த்தியின்றிச் செல்ல வேண்டாம்” கோட்புலியார் கூற கையில் தீவர்த்தியுடன் வீரனொருவன் முன்னே சென்றான். ‘மன்னரே’ என விளிக்கப்பட்டவர் யாராக இருக்கக்கூடுமெனப் புரிந்து கொண்டாள் மாறன்பாவை.

தீவர்த்தி வீரன் முன்னே செல்ல, பாண்டிய இளவரசி மாறன்பாவையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார் பல்லவ மன்னர் நந்திவர்மர். எதுவும் பேசாமல் மௌனமாக நடந்த போதும், நந்திவர்மரின் மனம் மாறன்பாவையிடம் பேசியபடியே வந்தது. வெகுநேரம் பொறுக்காத நந்திவர்மர், மெல்லப் பாண்டிய இளவரசியிடம் பேச்சு கொடுத்தார்.

“பெண்ணே. உன் பெயர் என்ன கூறினாய்?”

“மாறன்பாவை”

அடுத்து என்ன பேசுவதென தெரியாமல், நந்திவர்மர் பேசாமலிருக்க, மீண்டும் மௌனம் நிலவியது. அதே நேரம் ஒரு மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த வௌவால் ஒன்று மாறன்பாவையின் அருகாமையில் வேகமாக பறந்து சென்றது. அதில் அச்சம் கொண்ட மாறன்பாவை கால் தடுமாறி கீழே சாய்ந்தாள். கீழே விழவிருந்த அவளைத் தாங்கிப் பிடித்தார் நந்திவர்மர். மீண்டும் அவளது இடையை அணைத்தது அவரது கரங்கள். முன் தெரியாமல் நடந்ததை இப்போது தெரிந்தே செய்யச் சொல்லி ஆணையிட்டது அவரது மனம். முன்போலவே அவளது கரத்தை பற்றி, தன் பக்கமாகத் திருப்பி, மார்போடு அணைத்தார். இப்போதும் முன் போலவே மாறன்பாவை திமிறவே செய்தாள்.

“தேவி. நான் யாரெனத் தெரியுமா?” கிசுகிசுப்பாக மாறன்பாவையின் செவியில் கேட்டார் நந்திவர்மர்.

“தாங்கள் பல்லவ மன்னர் நந்திவர்மராக இருக்கலாமென யூகிக்கிறேன் ஐயா”

“ஆம் தேவி. உன் யூகம் சரியானதே. இப்போது கூறு தேவி. இந்த நந்திவர்மனை விவாகம் புரிந்து, தெரியாமல் சுவைத்த உன் இதழை தெரிந்தே சுவைக்கும் பாக்கியத்தை எனக்குத் தருவாயா?” மாறன்பாவையிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. ஆயினும், நந்திவர்மர் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும் இல்லை.

சில கண நேரங்கள் மாறன்பாவையை அணைத்தபடி அவளது பதிலுக்காக காத்திருந்த நந்திவர்மர், தொடர்ந்த மௌனத்தைக் கண்டதும், மெல்லத் தனது கரங்களை விடுவித்தார். மீண்டும் இருவரும் நடக்கத் தொடங்கினர். அரை நாழிகை நேரம் நடந்த பின்னர் சற்று தொலைவிலிருந்த ஒரு மண்டபத்தில் தீவர்த்திகள் ஏற்றப்பட்டு, வீரர்களின் நடமாட்டம் தெரிந்தது.

“தேவி. அதுதான் உங்கள் இருப்பிடமா?”

“ஆம் ஐயா..!”

“தாங்கள் சென்று விடுவீர்களல்லவா..? நான் வர வேண்டிய அவசியமில்லையே..? தங்களுக்கு அச்சமாக இருந்தால், தீவர்த்தி வீரனை உன்னுடன் வரச் சொல்கிறேன்”

“இல்லை. நானே சென்று விடுவேன் ஐயா” சொல்லிவிட்டு முன்னால் நடக்கத் தொடங்கினாள் மாறன்பாவை. அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தார் நந்திவர்மர். சில அடிகள் சென்றுவிட்ட மாறன்பாவை மீண்டும் திரும்பி வந்தாள்.

“ஐயா. தாங்கள் ஒரு வினா கேட்டீர்”

“தாங்கள் அதற்கு விடையளிக்கவில்லை”

“சற்று மனம் விட்டுப் பேசலாமா?”

“காத்திருக்கிறேன் தேவி”

அங்கிருந்த மரம் ஒன்றின் பருத்த அடிப்பாகத்தில் அமர்ந்தார் நந்திவர்மர். அவர் பக்கத்தில் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து கொண்டாள் மாறன்பாவை.

“சொல்லுங்கள் தேவி” நந்திவர்மர் கூற, ஒரு கண அமைதிக்குப் பின்னர் பேசத்தொடங்கினாள் மாறன்பாவை.

“ஐயா. தெரிந்தோ, தெரியாமலோ, தங்கள் கரங்கள் என்னைத் தீண்டி விட்டன. அப்போதே எனது மனம் தங்கள் பால் சென்று விட்டது. எனினும், தாங்கள் மணமானவர் என்பதை உணர்ந்து அமைதியானேன். பின்னர் தங்கள் பல்லவ மன்னரென தெரிந்ததும் எனது உள்ளத்தை மறைக்கவே எண்ணினேன்” கண்கள் கலங்க பேசிக் கொண்டிருந்தாள் மாறன்பாவை. இடைமறிக்காமல் கேட்டுக் கொண்டிருந்தார் நந்திவர்மர்.

“தாங்கள் தங்கள் மனத்தை உரைத்த பின்னர், ஏனோ என்னால் தங்களை பிரிந்து செல்ல இயலவில்லை. அதே நேரம், என் தந்தையார் நம் விவாகத்திற்கு ஒப்புக்கொள்ளா விட்டால் என்னவாகும் எனவும் அச்சமாக உள்ளது” மாறன்பாவை பேசிக் கொண்டே செல்ல, இப்போது இடைமறித்தார் நந்திவர்மர்.

பாண்டிய இளவரசியை நெருங்கி அமர்ந்துக் கொண்ட நந்திவர்மர், இப்போது துணிவு பெற்று அவளை அணைத்து தன் மார்பில் அணைத்துக் கொண்டார். எந்த தயக்கமுமின்றி, அவளது இதழ்களை சுவைத்தார். மெல்ல விலகி, அவளது செவிகளில் பேசினார்.

“இது போதும் தேவி. உனக்கு என்னைப் பிடித்திருக்கிறது. இந்த ஒரு நம்பிக்கை போதும். எப்பாடு பட்டேனும் உன்னை விவாகம் செய்வேன். அதுவரை…” சொல்லி நிறுத்தி, பின், தொடர்ந்தார். “அதுவரை, என்ன நடந்தாலும், எனக்காகக் காத்திருக்க வேண்டும்”

“நிச்சயம் காத்திருப்பேன் ஐயனே” மாறன்பாவை சொன்னதும் தனது அணைப்பிலிருந்து அவளை விடுவித்தார் நந்திவர்மர்.

“இப்போது புறப்படு தேவி. கூடிய விரைவில் பல்லவ தூதுவன் மதுரை வருவான்” நந்திவர்மர் கூற, தளர்ந்த நடையுடன் விலகினாள் மாறன்பாவை. அவள் தன் இருப்பிடம் செல்லும்வரை அவளையே பார்த்தபடி நின்றிருந்த நந்திவர்மர், திரும்பி ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். இப்போது அவர் மனதில் மாறன்பாவை இல்லை, சங்கா நிறைந்திருந்தாள். எப்படி அவளை சமாளிக்கப் போகிறோம் என்பதே அவரது சஞ்சலமாக இருந்தது.

–தொடரும்…

< நான்காவது பகுதி | ஆறாம் பகுதி >

ganesh

15 Comments

  • மிக அருமை. சங்கா பாவம். அவள் சஞ்சலம் உண்மையாகிவிட்டது. பாண்டிய மன்னன் என்ன செய்ய காத்திருக்கிறானோ

    • ஆமாம்… சங்கா பாவம்.. மாறன்பாவையும் தான்.. 😒😒

  • அச்சோ!! சங்கா பாவம்.. ராணி என்ற வார்த்தைக்கு எவ்வளவு பீத்திக்கொள்கிறோம்.. ராணிகள் பாவம் பா 😭 😭

    • ஆமா ப்பா.. 😒😒

  • கதையோட்டம் மிக அழகாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரம் காத்திருக்க வைத்து விட்டீர்களே அக்கா!!

    • நன்றி ப்பா..🙂🙂

  • சங்காவிடம் சயனித்த நந்தி வர்மனின் அன்பு மாறன் பாவையிடமும் சென்றது!
    காஞ்சனாவைக் காதலித்த இளையபல்லவன் மஞ்சள் அழகியிடமும் மனதைப் பறிகொடுத்தான்.
    பத்மா பெண் சாண்டில்யன்!

    • நன்றி அண்ணா… ☺️☺️🙏🙏

  • இந்த வார பகுதி எதிர்பார்த்தது போலவே இருந்தது. இனி வரும் வாரங்களில் திகில்கள் இருக்கும் என நினைக்கிறேன்.

    உரிமையோடு ஒரு கருத்து, மாறன்பாவை-நந்திவர்மனின் இந்த வார காட்சிகளை இன்னும் கொஞ்சம் விரிவாக விளக்கி இருக்கலாம் என தோன்றுகிறது. கதையே இப்போது தான் ஆரம்பமாவதால் இவர்களின் காதல் தொடங்கும் இடத்தில் இன்னும் கூடுதல் வர்ணனைகள் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்னு தோனுது.

    • நன்றியுடன் கருத்தை ஏ‌ற்று‌க்கொள்கிறேன்.. 🙂🙂

  • ட்விஸ்ட் எப்படியெல்லாம் கொண்டுவாரீங்க… 😳😳

    • மகிழ்வுடன் நன்றி.. 🙂🙂

  • The story begins here

    • Will run faster in coming weeks… 🙂🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...