30th July 2021
 • தொடர்
 • படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

3 weeks ago
282
 • தொடர்
 • படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

6. சம்மதம் கிட்டுமா..?

ந்திவர்மர் மாறன்பாவையை சந்தித்து, தனது மனதை வெளிப்படுத்திய பின்னர், ஏரிக்கரை மண்டபம் நோக்கி நடந்தார். அவரது மனதில் ஒருபுறம் மாறன்பாவையின் உடலிலிருந்து வெளிப்பட்ட சுகந்தமும், மறுபுறம் சங்காவின் காதலின் ஆழமும் போட்டியிட்டு சஞ்சலப்படுத்தின.

“ஐயனே. அந்தப் பெண்ணை அவளது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டீரா?” சங்கா கேட்டது அவரது செவிகளில் விழவில்லை.

“என்ன யோசனை ஐயனே? நான் கேட்பது கூட செவிகளில் விழாத அளவு யோசனையில் உள்ளீரே..?” நந்திவர்மரது தோளில் கை வைத்துக் கேட்டாள் சங்கா. அவளது ஸ்பரிசத்தில் சுயநினைவுக்கு வந்த நந்திவர்மர் யோசனையுடனேயே பேசினார்.

“என்ன கேட்டாய் சங்கா?”

“அந்தப் பெண்ணை அவளது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டீரா என முதலில் கேட்டேன். அதன் பின்னர், நான் கேட்பது கூட செவிகளில் விழாத அளவு என்ன யோசனை என கேட்டேன்”

“முதல் வினாவிற்கு ஒரே வார்த்தையில் பதில் உள்ளது தேவி. ஒப்படைத்து விட்டேன்.” சொன்ன நந்திவர்மர் அடுத்த வினாவிற்கு விடை கூறாமல் தயங்கி நின்றார். அவரது மௌனம் சங்காவிற்கு எதையோ உணர்த்தியது.

“அடுத்த வினாவிற்கு நான் விடை நான் கூறுகிறேன் ஐயனே” கூறிய சங்காவின் விழிகளில் கண்ணீர் திரண்டது.

“இரண்டாவது வினாவிற்கும் அதே விடை தானே ஐயனே? தங்களைப் பாண்டிய இளவரசியிடம் ஒப்படைத்து விட்டீர் தானே..?” நேரடியாக வந்த வினாவிற்கு, என்ன சமாதானம் சொல்வதெனத் தெரியாமல் திகைத்து நின்றார் நந்திவர்மர்.

“சில நாட்களுக்கு முன்னர் தாங்கள் விளையாட்டாகக் கேட்டீர். அது இன்று நிஜமாக நடக்கும் தருணம் வந்துவிட்டது போலும்.” சங்காவின் விழிகளில் திரண்டிருந்த கண்ணீர், இப்போது அவளது கன்னத்தைத் தழுவியது.

“தாங்கள் அன்று சொன்ன விடை நினைவுள்ளதா ஐயனே..? தாங்கள் கூறியவாறு அரச குடும்பத்தில் பலதார மணமென்பது சகஜம் தானே ஐயனே. எனவே நான் தடை சொல்ல எந்த வாய்ப்பும் இல்லையல்லவா..?”

“அப்படிச் சொல்ல இயலுமாயின், என் மனம் இப்போது வேதனை அனுபவிக்காமல் இருக்கும் தேவி.” சொல்லியபடி சங்காவை நெருங்கி, அவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டார்.

“தேவி… எனது தவறை மன்னிப்பாயா..?”

“ஐயனே, பெரிய வார்த்தைகள் பேசவேண்டாம். தாங்கள் ஒரு முடிவெடுத்தால், அதில் பல்லவ நலமே பெரிதாக இருக்குமென நான் அறிவேன்”

“இல்லை சங்கா. அவள் பாண்டிய இளவரசியாக அல்லாமல், ஏதேனும் சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவள் மீது எனது உள்ளம் சென்றிருக்கும். அதற்கு காரணமும் உன் மேல் கொண்ட மையல் தான் சங்கா.” சொல்லிவிட்டு, சங்காவின் நுதலில் ஒரு மெல்லிய முத்தத்தை பதித்து, மீண்டும் தொடர்ந்தார்.

“நான் மானைப் பிடித்து வரும் வழியில் அந்த பெண் எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்தாள். உன்னை போலவே சிகப்பு வண்ணச் சீலையணிந்திருந்தாள். ஆதவன் மங்கி, நிலவு தோன்றாத அந்நேரத்தில் அவளை நீயென நினைத்து அணைத்து முத்தமிட்டு விட்டேன்…” சங்காவின் விழிகளில் கண்ணீர் வழிந்து, அவள் கன்னங்களைக் கடந்து தரையில் வழிந்தது.

“ஒரு பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு, அவளை கைவிட என்னால் இயலவில்லை சங்கா. அதற்காக உனது உணர்ச்சிகளுடன் விளையாடுவதும் தவறு தான். என் தவறுக்காக என்னை மன்னிப்பாயா சங்கா..?” மௌனமாக நின்றாள் சங்கா.

“சங்கா, நீ ஒப்புக்கொள்வாய் என்ற நம்பிக்கையில் நான் அவளுக்கு வாக்குக் கொடுத்துவிட்டேன்”

“என் பதி வாக்குத் தவறத் தேவையில்லை ஐயனே…” கண்ணீருடன் சொன்ன சங்கா, நந்திவர்மர் மார்பில் சாய்ந்து கொண்டாள்.

“நீ என் மேல் கொண்ட அன்புக்கு இணையேயில்லை சங்கா. எனக்காக இந்த வலியும் தாங்க முடிவெடுத்துள்ளாய். இந்த ஒரு செயலுக்காகவே உன் மேல் எல்லையில்லாக் காதலைப் பொழிவேன்” சங்காவை இறுக்க அணைத்துக்கொண்டார் நந்திவர்மர்.

• • •

பாண்டிய இளவரசியைக் குறித்து சங்காவிடம் கூறி அவள் சம்மதம் பெற்ற மறுநாளே தனது ஆளுகைக்குட்பட்ட சிற்றரசர்களை அழைத்தார். சோழ குலத்தை சேர்ந்த குமராங்குசர், முத்தரையர் வம்சத்தை சேர்ந்த சாத்தான் பழியிலி, வாணர் பரம்பரையைச் சேர்ந்த விக்கிரமாதித்தன், நரசிங்க முனையதரையர் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

“உங்களிடம் ஒரு முக்கியமான தகவலை பேசவே வரச்சொல்லி அழைத்தேன்”

நந்திவர்மர் தொடர்ந்து பேசட்டுமென சிற்றரசர்கள் அமைதி காத்தனர்.

“பாண்டியர்கள் தொண்டை மண்டலத்தின் பல பகுதிகளை ஊடுருவியுள்ளது தாங்கள் அறிந்ததே. இப்போது அவற்றை மீட்க எண்ணுகிறேன்” ஒரு முறை அனைவர் முகத்தையும் பார்த்து விட்டு, மீண்டும் தொடர்ந்தார். “என்ன செய்யலாமென தங்கள் கருத்தை அறிய எண்ணுகிறேன்”

“பல்லவப் படை இப்போது தான் குறுக்கோட்டில் போர் புரிந்து வெற்றி எக்காளம் முழங்க உற்சாகமாகத் திரும்பியுள்ளது” வாண அரசர் விக்கிரமாதித்தர் கூறினார்.

“அதை வேறு வார்த்தைகளிலும் கூறலாம். பல்லவப்படை தற்போது தான் குறுக்கோட்டில் போர் புரிந்து, களைப்பாக வந்துள்ளது” நந்திவர்மர் கூற, வாண அரசர் அமைதியானார்.

“எனில், இப்போது இன்னொரு படையெடுப்பிற்கு பல்லவப் படை தயாராக இல்லையென்று கொள்ளலாமா?” முத்தரையர் கேட்டார்.

“மூலப்படை எப்போதும் தயாராகவே உள்ளது முத்தரையரே. எனினும், ஒரு சிந்தனை” சொல்லிவிட்டு மௌனமாக சிறுநடை பயின்றார் நந்திவர்மர். மன்னரே பேசட்டுமென காத்திருந்தனர் சிற்றரசர்கள்.

“உங்களில் ஒருவருக்கு மதுரை சென்று வரும் பொறுப்பை அளிக்கிறேன்” நந்திவர்மர் சொல்ல, ஏனென்று தெரியாமல் திகைத்துப் பார்த்தனர் மூவரும்.

“பல்லவப்படை தற்போதுதான் போரை முடித்து வந்துள்ளதென்பதால், மீண்டுமொரு போரை உடனே தொடங்கவேண்டாமென எண்ணுகிறேன். அதற்காகப் பாண்டிய நாட்டுடன் சமாதானம் செய்வதாக பொருளில்லை. பல்லவ நாட்டின் பகுதிகள் பல்லவர்களுக்கு வரவேண்டும். எனவே, நம்மிடமிருந்து சென்ற பகுதிகளைக் கைப்பற்றியே தீருவேன். அது போரில்லாமலிருந்தால், இரு நாட்டிற்கும் நலம் பயக்கும் என்பதாலேயே இந்த உபாயம்”

“என்ன உபாயமெனக் கூறுங்கள் மன்னா.” சோழ அரசர் குமராங்குசர் கேட்டார்.

“கூறுகிறேன் குமராங்குசரே.” சொன்ன நந்திவர்மர், தனது தொண்டையைக் கனைத்துக்கொண்டு தொடர்ந்தார்.

“பாண்டிய இளவரசி மாறன்பாவையை நான் விவாகம் புரிய விரும்புகிறேன். இந்த விவாகம் எனக்கும், பாண்டிய வேந்தர் ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபருக்குமிடையே ஒரு நல்லுறவை வளர்க்குமென கருதுகிறேன். எனவே, உங்களில் யாரேனும் ஒருவர் மதுரை சென்று, ஸ்ரீவல்லபரிடம் பேச வேண்டும்”

“நான் செல்கிறேன் மன்னா” குமராங்குசர் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறினார்.

“நல்லது குமராங்குசரே. தாங்கள் சென்று, என் சார்பாக பாண்டிய இளவரசியை பெண் கேட்டும், பல்லவத்தின் சார்பில் போரில்லாமல் பல்லவப் பிரதேசங்களைத் திரும்ப அளிக்க மணவினைத் தொடர்பு என்னும் சங்கிலியால் இரு தேசங்களையும் பிணைக்குமாறும் கேட்டுக் கொள்ளுங்கள்” நந்திவர்மர் கூற, உத்தரவை வணங்கி ஏற்றார் குமராங்குசர்.

போரை உறவெனும் கேடயம் கொண்டு தடுக்க எண்ணினார் நந்திவர்மர். ஆனால் விதியின் விளையாட்டை எவரால் மாற்ற இயலும்..?

–தொடரும்…

< ஐந்தாம் பகுதி

14 thoughts on “படைத்திறல் பல்லவர்கோன் | 6 | பத்மா சந்திரசேகர்

 1. முதல் அத்தியாயத்தில் ஆரமித்த வேகம் சிறிதும் குறையாமல் ஆறாம் அத்தியாத்திலும் வருகிறது.

  அந்த பெண்ணை அவளது உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டீர்களா ..

  தாங்களை பாண்டிய இளவரிசியிடம் ஒபப்படைத்து விட்டீர்களா…

  ஒப்படைப்பு என்ற வார்த்தையில் இரு வேறு அர்த்தங்களில் சொல்ல வந்ததை அழகாய் சொல்லி விட்டீர்கள்.

  இப்போ போர் நடக்குமா இல்லையானு தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கேன்.

 2. அருமையான தொடர்ச்சி
  அடுத்த வாரம் என்ன என்ற ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்

 3. நல்ல ஒரு விறுவிறுப்பாக போகிறது.. அடுத்த என்ன எனும் ஆவலுடன் நான்…

 4. கதை சூடு பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு.. விதி செய்த சதி என்னவென்று இப்பவே மண்டை குழம்புது… எழுத்தின் ஓட்டம் நன்று 👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

July 2021
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031