• தொடர்
 • படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

5 months ago
835
 • தொடர்
 • படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

4. ஏரிக்கரை

காஞ்சிபுரம் அரண்மனை பரபரப்பாக இருந்தது. பணிப்பெண்கள் இங்குமங்கும் ஓடியாடி ஏதோ செய்து கொண்டிருந்தனர். வீரர்கள் பணியாட்களிடம் ஏதோ கட்டளைகள் பிறப்பித்துக் கொண்டிருந்தனர். அரண்மனை வாயிலில் ஒரு சிவிகை கொண்டுவரப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது. உள்ளே பட்டுத்துணி விரிக்கப்பட்டிருந்த அந்த சிவிகையின் இருபக்கமும் திரையிட்டு மூடப்பட்டிருந்தன. சிவிகைக்கு பக்கத்தில் அதைச் சுமப்பவர்கள் நின்றுக கொண்டிருந்தனர்.

“எல்லாம் தயாரா..?” அரண்மனையின் உள்ளிருந்து வந்த நந்திவர்மர் கேட்டார்.

“அனைத்தும் தயார் மன்னா. தங்கள் உத்தரவு கிடைத்தால் புறப்படத் தயாராக உள்ளோம்.” பதில் சொன்னார் சேனாதிபதி கோட்புலியார்.

“விரைந்து புறப்படவேண்டும் கோட்புலியாரே. மாலை மங்கி வருகிறது. இருட்டுவதற்குள் ஏரிக்கரை மண்டபத்தை நாம் அடைந்துவிட வேண்டும்” சொல்லிக்கொண்டே அருகிலிருந்த பணிப்பெண்ணைக் கைகாட்டி அழைத்தார் நந்திவர்மர்.

“சங்காவை வரச்சொல்.” அடுத்த கணம் அரசியார் இருந்த அறை நோக்கி ஓடினாள் அந்த பணிப்பெண். திரும்ப வருகையில் அவளுடன் இராஷ்டிரகூட இளவரசியும், நந்திவர்மரின் தேவியுமான சங்கா வந்துகொண்டிருந்தாள்.

சங்கா தேவி தன்னை அழகாக அலங்கரித்துக்கொள்ளுவதில் மிக்க ஆர்வமுள்ளவள். அன்றும் தன்னை அழகாவே அலங்கரித்துக் கொண்டிருந்தாள். சிவப்பு வண்ண பட்டுச் சீலையணிந்து, அதே சிவப்பு வண்ணத்தில் கச்சை அணிந்திருந்தாள். கழுத்தில் பவழ மாலை அணிந்திருந்தாள். கைகளில் சிவப்புக் கற்கள் பதிக்கப்பட்டிருந்த வளையல்கள் அணிந்திருந்தாள். கைகளில் முன்தினம் இட்டிருந்த மருதாணி, நன்கு சிவந்து சீலையின் வண்ணத்தை ஒத்ததாக இருந்தது.

“புறப்படலாம் தேவி.” நந்திவர்மர் கூறியதும் சிவிகையில் ஏறி அமர்ந்தாள். பணியாளர்கள் சிவிகையைத் தூக்கி நடக்கத் தொடங்கியதும், தனது புரவியில் ஏறி, சிவிகையை ஒட்டியவாறு சென்றார் நந்திவர்மர்.

சிவிகைக்கு முன்னால் ஒரு ரிஷப வண்டி சென்று கொண்டிருந்தது. அதில் சமையல் செய்வதற்கான பாத்திரங்களும், பணிப்பெண்களும் இருந்தனர். சிவிகையைத் தொடர்ந்து வந்த ரிஷப வண்டியில் பணியாட்கள் அமர்ந்திருக்க, சில ஆயுதங்களும் இருந்தன.

நந்திவர்மர், கோட்புலியார் உள்ளிட்ட வீரர்கள் புரவியில் வந்து கொண்டிருந்தனர். இரு நாழிகை நேரம் தெற்கே பயணித்து, ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். வனத்தின் வெளிப்பகுதியிலேயே ஒரு ஏரி இருந்தது. அதன் கரையில் ஒரு மண்டபம் இருந்தது. மண்டபத்தை அடைந்ததும், பணிப்பெண்கள் சமையலைத் தொடங்க, வீரர்கள் வனத்தினுள் சென்றனர்.

நந்திவர்மர், சங்காவை அழைத்துக்கொண்டு மெல்ல ஏரிக்கரையோரம் நடந்தார். வானில் சதுர்த்தி நிலவு இன்னும் உதித்திருக்கவில்லை. நட்சத்திர ஒளியில் நதிக்கரை, கரி கொண்டு தீட்டப்பட்ட ஓவியம் போலத் தெரிந்தது. சுற்றியிருந்த மரங்களிலிருந்த மலர்கள் மற்றும் கனிகளின் வாசம் புதுவித அனுபவத்தைத் தந்தது. ஏரியின் ஓரிடத்தில் படித்துறை காணப்பட்டது.

“இங்கே அமரலாம் வா சங்கா.” படிகளில் அமர்ந்தார் நந்திவர்மர். இன்னும் ஒரு படி கீழிறங்கி, நந்திவர்மர் அமர்ந்திருந்த படிக்குக் கீழ்ப்படியில் அமர்ந்து கொண்டாள் சங்கா. சங்காவின் கைகளைப் பற்றிக்கொண்டு எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தார் நந்திவர்மர். பறவைகள் கூடடைந்து விட்ட பின் மாலை நேரத்தில், மண்டபத்தை விட்டு சற்றுத் தள்ளியிருந்த அந்தப் படித்துறையில் நந்திவர்மரும், சங்காவும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்ததால் பேரமைதி நிலவியது.

நந்திவர்மர் மடியில் தலை வைத்தபடி அமர்ந்திருந்தாள் சங்கை. அவளது சிரத்தில் தனது முகத்தை வைத்தபடி ஏரி நீரையே பார்த்தபடி அமர்ந்திருந்தார் நந்திவர்மர். அவரது கைகள் சங்காவின் முதுகை வருடியபடி இருந்தது.

ஒரு மான் கூட்டம் நீரருந்த வந்தது. புதிதாக இரு மனிதர்களை படித்துறையில் கண்டதும் திகைத்து நின்று, அவர்களிடம் அசைவே காணப்படாததைக் கண்டு, ஆபத்து எதுவுமில்லையென அச்சம் தெளிந்து நீரருந்திச் சென்றன. அவற்றில் ஒரு மான் குட்டி சங்காவின் அருகில் வந்து, அவள் மடியில் தலைவைத்துப் பார்த்துவிட்டு ஓடியது. திடீரென உடலெல்லாம சிலிர்த்தது சங்காவிற்கு.

“என்னவானது சங்கா..?”

“அந்த மான்குட்டியின் ஸ்பரிசம் ஏதோ செய்கிறது ஐயனே.”

“என்ன செய்கிறது சங்கா..?”

“இந்த மான்குட்டியைப் போலவே நமக்கொரு மதலை ஜனிக்குமல்லவா..?” வெட்கத்துடன் கேட்டாள் சங்கா. அவளது முகம் நாணத்தில் கையிலிருந்த மருதாணியின் வண்ணத்தை நிகர்த்து சிவந்தது.

“ஆஹா… சிறு மான்குட்டியைப் பார்த்து, இப்படி ஒரு மனநிலையில் நீ இருக்கும் போது….” சற்று நிறுத்திய நந்திவர்மர் தொடர்ந்தார். “இன்று அதற்கு வேண்டியதை செய்து விட்டால், கூடிய விரைவில் நம் மகன் நம் கரங்களில் தவழுவான்” கூறியபடி சங்காவின் இடையில் கைவைத்து, அவளை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார் நந்திவர்மர். அவரது அதரங்கள் சங்காவின் இதழை நெருங்கின. இதழ்கள் இணைந்து பேச, வார்த்தைகள் தடைபெற்றன.

மான்குட்டி வந்து சென்றதில் சற்று நேரம் கலைந்திருந்த அமைதி மீண்டும் இப்போது தொடர்ந்தது. இப்போது சங்கா ஏதேதோ பேச எண்ணினாள். ஆனாலும் அதற்கு வாய்ப்பில்லாத படி அவளது இதழ்களைத் தனது இதழால் தழுவியிருந்தார் நந்திவர்மர். பல யுகங்கள் எனத் தோன்றிய சில கணநேர முத்தத்தைத் தடுப்பதற்காகவே வந்தது போல, மீண்டும் ஓடி வந்தது அந்த மான் குட்டி. சங்காவை நெருங்கி அவளது பாதங்களை உரசியது.

சற்று அச்சப்பட்ட சங்கா தனது இதழ்களை விளக்க முயற்சி செய்ய, நந்திவர்மர் இதழ்கள் இன்னும் அழுத்தமாகப் பதிந்தது. இப்போது ஆளை மாற்றி, நந்திவர்மரின் கால்களை நக்கி, அவரைச் சுயநினைவிற்கு அழைத்து வந்தது அந்த மான்குட்டி.

இருவரின் இதழ்களும் விலகியதும் வந்த வேலை முடிந்தது என்பது போல விலகி ஓடியது அந்த மான்குட்டி.

“ஐயனே, எனக்கு அந்த மான்குட்டியை பிடித்து தருகிறீர்களா..?” சங்கா கேட்டதும் அந்த மான் ஓடிய திசை நோக்கி ஓடினார் நந்திவர்மர். சில கண நேரத்தில் அவரது கரங்களில் சிறைப்பட்டிருந்தது அந்த மான்குட்டி.

“எங்கள் இதழ்களைப் பிரித்து விட்டாயல்லவா..? இப்போது பார். உன்னை ஓரிடத்தில் பிணைத்து விட்டு, மீண்டும் இதழமுதத்தைப் பருகுகிறேன்.” காதல் மயக்கத்தில் மான்குட்டியிடம் பேசியபடி வந்தார் நந்திவர்மர். வழியில் தென்பட்ட கொடி ஒன்றை எடுத்து, மானின் முன்னங்கால்களைப் பிணைத்தார்.

முன்னே யாரோ செல்வது போல தோன்ற, நிமிர்ந்து பார்த்தார். சிவப்பு வண்ண சீலை, சிவப்பு கச்சை, முதுகைத் தாண்டி பயணித்த கூந்தல், அதில் சூட்டப்பட்டிருந்த இருவாச்சி பூச்சரம். அவளைப் பார்த்ததும் நந்திவர்மரின் இதழ்கள் மீண்டும் துடித்தன. அவளை நோக்கி விரைந்து நடந்தார்.

“சங்கா, இந்த இருளில் என்னைத் தேடி வந்துவிட்டாயா..? இதோ நானும் வந்து விட்டேன்.” மனதிற்குள் கூறியபடி வேகமாக நடந்தார். சிலகண நேரத்தில் அந்த உருவத்தை நெருங்கியவர், மானை கீழே விட்டுவிட்டு, ஓசை காட்டாமலும், அதே சமயம் சற்று வேகமாகவும் நடந்தார் நந்திவர்மர்.

பின்னாலிருந்து அவளது வலக்கையை பற்றியிழுத்து, முன்பக்கமாக திருப்பி, தனது மார்போடு அவளை அணைத்தார். அதே வேகத்தில் அவளது இதழ்களை மூடியது நந்திவர்மமரின் இதழ்கள். அவள் உடலிலிருந்து வந்த ஒருவித மணம் அவர் மனதைக் கவர்ந்தது.

அவள் திமிறத் தொடங்க, அவளது முதுகில் கைவைத்து இன்னும் இறுக்கி அணைக்க, அவளது மென்கொங்கைகள் நந்திவர்மரின் உறுதியான மார்பில் பதிந்தது. அவள் திமிறத்திமிற, அழுத்தம் அதிகரித்தது. மிகுந்த பிரயத்தனம் செய்து, அவள் நந்திவர்மரை தன் கைகளால் பிடித்து தள்ளினாள். அதில் சற்று கோபம் கொண்ட நந்திவர்மர், அவளது இதழ்களை விட்டு தனது இதழ்களை விளக்கினார்.

தன்னை தள்ளி விட்ட கோபத்தில் அவளை நிமிர்த்து பார்த்த நந்திவர்மர் அதிர்ந்தார். சங்காவை போலவே சிவந்த உடை உடுத்தி, சங்காவின் உயரமேயிருந்த அந்த பெண், சங்கா இல்லை.

–தொடரும்…

< மூன்றாவது பகுதி | ஐந்தாவது பகுதி >

15 thoughts on “படைத்திறல் பல்லவர் கோன் | 4 | பத்மா சந்திரசேகர்

 1. இதழ்கள் இணைந்து காதலை வசியம் செய்தது.
  எழுத்தாளர் தனது எழுத்துக்களால் வாசகர்களை வசியம் செய்து விட்டார் .

  வரலாறு என்னும் கடலில் தேர்ந்தெடுக்கப்பட்ட நன்முத்தாய் பத்மா அவர்கள் காட்சி தருகிறார்.

  அடுத்த வாரம் என்ன என்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்.

 2. கதையில் திருப்புமுனை வந்தாச்சு போலயே.. வர்ணனைகள் அருமை!! 👌👌

 3. சங்கா வா இல்லை என்றால் என்ன? எல்லாம் முடிந்து விட்டதே….

 4. பத்மா காதல் வசனத்தை உன்னை தவிர இவ்வளவு அழகாக யாரும் இதழ் .. இல்லை.. இல்லை.. இடம் பதிக்க முடியாது.. என்ன ஒரு அற்புதம்.. ஆஹா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

post by date

November 2021
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930