வரலாற்றில் இன்று – 24.06.2021 உலக இளம் மருத்துவர்கள் தினம்
மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது.
எனவே, இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டு, ஜூன் 24ஆம் தேதி இத்தினம் அறிவிக்கப்பட்டது.
கவியரசு கண்ணதாசன்
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் நெஞ்சத்தில் நீங்கா இடம்பெற்ற கவியரசு கண்ணதாசன் 1927ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முத்தையா.
காரை முத்துப்புலவர், வணங்காமுடி, கமகப்பிரியா, பார்வதிநாதன், ஆரோக்கியசாமி ஆகியவை இவருடைய புனைப்பெயர்கள் ஆகும்.
இவர் 5000-க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியுள்ளார். பராசக்தி, ரத்தத்திலகம், கருப்புப் பணம், சூரியகாந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயேசு காவியம், பாண்டிமாதேவி உள்ளிட்ட காப்பியங்கள், அம்பிகை அழகு தரிசனம், தைப்பாவை உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள், அர்த்தமுள்ள இந்துமதம் ஆகியவற்றை படைத்துள்ளார்.
ஆழமான வாழ்க்கை ரகசியங்களை தன்னுடைய எளிமையான வரிகள் மூலம் மக்களுக்கு கொண்டு சேர்த்த கவியரசர் 54வது வயதில் (1981) மறைந்தார்.
எம்.எஸ்.விஸ்வநாதன்
பழம்பெரும் இசையமைப்பாளரான திரை இசை சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதன் 1928ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி, கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்தார். இவரது முழுப்பெயர் மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன்.
1953ஆம் ஆண்டு வெளிவந்த ஜெனோவா படத்திற்கு முதன்முதலாக இசையமைத்தார். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, இசைப்பேரறிஞர் விருது, ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றார்.
லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை தொட்ட மெல்லிசை மன்னர் தனது 87வது வயதில் (2015) மறைந்தார்.
முக்கிய நிகழ்வுகள்
1907ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி தமிழ்நாட்டு மொழியியல் வல்லுநர் பன்மொழிப்புலவர் கா.அப்பாதுரை பிறந்தார்.
1980ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரான வி.வி.கிரி மறைந்தார்.