பேய் ரெஸ்டாரெண்ட் – 6 | முகில் தினகரன்

 பேய் ரெஸ்டாரெண்ட் – 6 | முகில் தினகரன்

அடுத்த நாள் வெளி வந்த அனைத்து செய்திதாள்களிலும் தலைப்புச் செய்தியாக வந்திருந்தது “பேய் ரெஸ்டாரெண்ட்” திறப்பு விழா செய்தி. கூடவே படங்களும்.

தொலைக்காட்சிக்காரர்களும் தங்கள் வீடியோ காமிராவில் சுட்ட சில அமானுஷ்ய காட்சிகளை கொஞ்சமாய்ப் போட்டு “பேய் ரெஸ்டாரெண்ட்”டுக்கு பெரிய விளம்பரத்தை செய்து கொடுத்தனர்.

ஆனந்தராஜ் அண்ட் கோ எதிர்பாராத அளவில் கூட்டம் குவிய, வியாபாரம் “கிர்ர்ர்ர்”ரென்று ஜெட் வேகத்தில் பறக்க,

கல்லா வழிந்தோடியது.

ஒரு சில கஸ்டமர்கள் மட்டுமே பேய் ரெஸ்டாரெண்டின் ஹாரர் நிகழ்ச்சிகளுக்கு பயந்து அலறினர். அவர்களும் சிறிது நேரத்தில் அதெல்லாம் செயற்கை ஏற்பாடுகள் என்பதைப் புரிந்து கொண்டு சந்தோஷமாயினர்.

சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒவ்வொரு பணியாட்களையும் தனியாக அழைத்து, அவர்களது ஆர்வமான செயல்பாட்டிற்குப் பாராட்டு தெரிவித்து கூடுதல் ஊக்கத் தொகை வழங்கினான் ஆனந்தராஜ்.

புதிய உத்தியாக, “இங்கு நடைபெறும் வித்தியாச நிகழ்வுகளில் உங்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி எது?” என்று ஒவ்வொரு வாடிக்கையாளரிடம் விவரம் பெற்று, மாதக் கடைசியில் அதை ஆராய்ந்த போது, வாஷ் பேசின் அருகே பாதி எரிந்த சவம் போன்ற கெட்டப்பில் குழந்தைகளின் கழுத்தைக் கடிக்கும் நிகழ்வே அதிகம் பாராட்டுப் பெற, அந்த வேடமிடும் சிவாவிற்கு ஸ்பெஷல் ஊக்கத் தொகை வழங்கியது ரெஸ்டாரெண்ட் நிர்வாகம்.

தங்களது முந்தைய வியாபாரங்களில் பெருத்த நஷ்டங்களையே சந்தித்துக் கொண்டிருந்த ஆனந்தராஜும்…அவன் நண்பர்களும் உற்சாகத்தில் மிதந்தனர்.

தொடர்ந்து இன்பங்களையே சந்தித்து வந்த பேய் ரெஸ்டாரெண்டிற்கு, முதன் முதலில் துன்பத்தைக் கொண்டு வந்து சேர்த்தவன் சங்கரன். கேரளத்தைச் சேர்ந்த செந்நிற இளைஞன். அங்குள்ள நம்பூதிரிகளோடும், மாந்திரீகர்களோடும் சில காலம் பழகியதில் குட்டிச்சாத்தான் ஒன்றை தன் வயப்படுத்தி வைத்திருந்தான்.

வெள்ளைத் துணிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட மரப்பாச்சி போன்ற ஒரு சிறிய பொம்மையை கையோடு கொண்டு வந்திருந்தான். அதன் முகத்தில் இரண்டு பெரிய கண்களும், கோரைப் பற்களோடு சிரிக்கும் வாயும், வரையப்பட்டிருந்தது.

அவன் மேஜை மீது அந்த பொம்மையை எடுத்து, அது காலை நீட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல் உட்கார வைத்தான்.

அதைக் கூர்ந்து பார்த்த ஆனந்தராஜ், “இது என்ன?” கேட்டான்.

“எந்தா சாரே?…இது எந்தானு நிங்கள் அறியில்லையோ?…இது தன்னே சாரே எண்டே குட்டிச்சாத்தான்” என்றான்.

“இதை வெச்சு இங்க என்ன பண்ணப் போறே?” அலட்சியமாய்க் கேட்டான் விஜயசந்தர்.

“சாரே….இது வள்ளாதொரு சேட்டைக்காரனானு…இதுக்குள்ளார ஒந்து ஜீவன் இருக்கு சாரே”

“யோவ்…உனக்கு தமிழ் தெரியுமா?” எரிச்சலாய்க் கேட்டான் திருமுருகன்.

“அறியும்”

“அப்பத் தமிழ்ல பேசுய்யா…நீ பேசற மலையாளத் தமிழ் சகிக்கலை…புரியலை”

“சார்…இது பார்த்தால்தான் பொம்மை…இதுக்குள்ளார உசுரு இருக்கு…இப்பக் கூட நாம பேசறதைக் கேட்டுட்டுத்தான் இருக்கு” என்றான் அவன் திடீரென்று தமிழுக்கு மாறி.

“ஓ”என்றான் ஆனந்தராஜ் மேவாயைத் தடவிக் கொண்டே.

“சரி…என்ன பண்ணப் போறே இதை வெச்சு?” மறுபடியும் அழுத்திக் கேட்டான் விஜயசந்தர்.

“ம்ம்ம்ம்” என்று சுற்றும் முற்றும் பார்த்தவாறே யோசித்த அந்த சங்கரன், “சார்…நீங்க எல்லோரும் ஒரு ரெண்டு நிமிஷம் கண்ணை மூடுங்க” என்று சொல்ல,

“எதுக்கு?” திருமுருகன் பயத்தோடு கேட்டான்.

“சாரே…ஒரு சின்ன விளையாட்டை என்னோட குட்டிச்சாத்தான் இங்க செஞ்சு காட்டும்”

ஆனந்தராஜ் மற்ற இருவரையும் பார்த்து கண் ஜாடை காட்ட, அவர்கள் கண்களை மூடிக் கொண்டனர்.

இரண்டு நிமிட முனகலுக்குப் பின், “ம்…இப்பத் திறங்க” என்றான் சங்கரன்.

மூவரும் திறந்தனர். மேஜை மேல் குட்டிச்சாத்தான் பொம்மை இப்போது படுத்திருந்தது.

“சார் உங்க மொபைல் போன் எங்கே?” கேட்டான் சங்கரன்.

சட்டைப் பாக்கெட்டின் மீது கையை வைத்த ஆனந்தராஜ் அது அங்கே இல்லாமல் போக, மேஜை டிராயரைத் திறந்து உள்ளே பார்த்தான். அங்கும் இல்லை. “இப்ப இருந்திச்சே?…நான் கூட ஒரு கால் பேசிட்டு…இங்க…இந்த மேஜை மேலேதான் வெச்சேன்…எங்க போச்சு?” சங்கரனை சந்தேகமாய்ப் பார்த்தான் அவன்.

“சாரே…நீங்க என்னை சந்தேகப்படறீங்க!..சத்தியமா அதை நான் எடுக்கலை…இதோ இந்தக் குட்டிச்சாத்தான் தான் எங்கியோ கொண்டு போய் ஒளிச்சு வெச்சிட்டு வந்திருக்கான்!…இருங்க அவனையே கேட்டுச் சொல்றேன்” என்ற சங்கரன், அந்த வெள்ளை பொம்மையைக் கையிலெடுத்து அதனுடன் பேசினான். “சொல்லிடு எசக்கி…எங்க கொண்டு அதை வெச்சிட்டு வந்தே?”

சில நிமிடங்களுக்குப் பிறகு, மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று, தூரத்தில் தெரியும் பொள்ளாச்சி சாலையைப் பார்த்து, “ஆமாம்…ஒரு மரம் இருக்கு…ஆமாம்…அதுல நிறைய சாப்பாட்டுக் கூடைகள் தொங்குது…அதுல மஞ்சள் கூடைல மொபைல் இருக்கா?…சரி…சரி” என்றவன், ஆனந்தராஜைப் பார்த்து, “சார் இங்க வாங்க” என்று அழைத்தான்.

மூவருமே எழுந்து ஜன்னலருகே வந்து நின்று பார்த்தனர்.

“அதோ அந்த மரம் இருக்கு பாருங்க…நிறைய சாப்பாட்டுக் கூடைகள் தொங்குதே?”

“ஆமாம்…பக்கத்துல எங்கியோ பில்டிங் வேலை நடக்குது போலிருக்கு..அந்த ஆளுங்களோட சாப்பாட்டுக் கூடைக” என்றான் விஜயசந்தர்.
“அதுல ஒரு மஞ்சள் கலர் கூடை இருக்காம்…அதுக்குள்ளார உங்க மொபைல் இருக்காம்!…நான் சொல்லலை…இதோ…இந்தக் குட்டியப்பான் சொல்றான்”

நம்ப முடியாமல் அவன் முகத்தைப் பார்த்த ஆனந்தராஜ், “யோவ்…நீ உள்ளார வரும் போதுதான் நான் ஒரு போன் பேசி முடிச்சிட்டு மொபைலை இந்த டேபிள் மேலே வெச்சேன்….மூணு நிமிஷம் நாங்க கண்ணை மூடித் திறப்பதற்குள்ளே அது எப்படியய்யா அங்கே போகும்?” கேட்க,

“சாரே…நிங்களுக்கு குட்டிச்சாத்தானைப் பற்றித் தெரியாது போலிருக்கு…அதைக் கைல வெச்சிருக்கறது பெரிய ரிஸ்க்!…கொஞ்சம் ஏமாந்தா வெச்சிருக்கற ஆளையே சாய்ச்சிடும்!…ரொம்ப வேகமானது…ஒரு செகண்ட்ல நூறு மைல் போயிட்டு வந்திடும்…மின்னலை விடவும் வேகம்!…அதனால….அதை ஒரு வினாடி கூட சும்மா இருக்க விடக் கூடாது!…அப்படி விட்டா…அது வெச்சிட்டிருக்கற என்னையே தாக்க ஆரம்பிச்சிடும்…நான் ரத்தம் கக்கித்தான் சாகணும்!…அதுக்கு எப்பவும் ஏதோ ஒரு வேலை குடுத்துக்கிட்டே இருந்தா தப்பிச்சுக்கலாம்!” விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு சங்கரன் சொல்ல,

“இத்தனை நேரம் அது இந்த மேஜை மேலே சும்மாத்தானே ப்டுத்துக் கிடந்தது?”திருமுருகன் கேட்டான்.

“அப்படின்னு நீங்க நெனச்சிட்டிருக்கீங்க!…அது சும்மா கிடக்கலை…அதுக்கு ஒரு வேலை குடுத்திருந்தேன் அதைத்தான் செஞ்சிட்டிருந்தது”

“என்ன வேலை?”

“ம்…உங்க காம்பௌண்டுக்கு வெளிய ஒரு புளிய மரம் இருக்குது பாருங்க?…அந்தப் புளிய மரத்துல எத்தனை இலைகள் இருக்கு?ன்னு எண்ணச் சொல்லியிருந்தேன்…அதைத்தான் எண்ணிக்கிட்டிருந்திச்சு”

“இங்க படுத்திட்டேவா?”

“ஆமாம்…அதோட உடம்புதான் இங்கே…ஆனா…அது வெளிய!…நான் கூப்பிட்டா உடனே இங்க வரும்…நான் சொல்ற வேலை அவசர வேலையை முடிச்சிட்டு மறுபடியும் போய் மரத்தோட இலைகளை எண்ண ஆரம்பிச்சிடும்…இதுல சிறப்பு என்ன?ன்னா…மறுபடியும் போய் ஒன்றிலிருந்து ஆரம்பிக்கும்”

அமைதியாய் யோசித்த ஆனந்தராஜ், “இப்ப…என்னோட மொபைல் அந்த மரத்துல தொங்கற லன்ச் மேக்ல இருக்கு!ன்னு சொல்றீங்க!…அப்படித்தானே?”

தலையை மேலும், கீழுமாய் ஆட்டினான் சங்கரன்.

“டேய்….திருமுருகா…போடா…போய்..அதை எடுத்திட்டு வாடா”

“போகாதே….போகாதே” திருமுருகன் காதருகில் அந்தப் பெண் குரல் கத்தியது.

“நா…நானா?” அவன் பயத்து தயங்க,

“ம்ம்ம்…இவனொரு பயந்தாங்கொள்ளிப் பயல்…”என்று முணுமுணுத்த ஆனந்தராஜ், “டேய் விஜயசந்தர்…நீ போ” என்றான்.

சற்றும் யோசிக்காமல் உடனே சென்ற விஜய்சந்தர், ஐந்தே நிமிடத்தில் அந்த மரத்தடியை அடைந்து, கைக்கு எட்டும் உயரத்திலிருந்த அந்த மஞ்சள் நிற வயர் கூடையை எடுக்க,

“அய்யோ…சாமி…அது என்ர கூடை” ஓடி வந்தாள் ஒரு சித்தாள் பெண்.

“அம்மா தாயி…நான் உன்னோட சாப்பாட்டைத் திருட வரலை!…என்னோட மொபைல் போன் இதுக்குள்ளார இருக்கு அதை எடுக்கத்தான் வந்தேன்” என்றான் விஜயசந்தர்.

“என்ன சாமி சொல்றே?…உன்ர மொபைல் போனு என்ர கூடைக்குள்ளார இருக்கா?…அதெப்படி அது இங்க இருக்கும்?” என்று இவனைப் பார்த்துச் சொன்னவள் திரும்பி அவளுடைய சக பணியாளர்களைப் பார்த்து, “ஏய்…தங்கா…சோமு…இங்க வாங்கடா” என்று கத்தினாள்.

கிட்டத்தட்ட பத்து பேர் ஓடி வந்தனர்.

“என்ன புள்ளே?…என்னாச்சு?”

“இதா இந்தாளு…என்னோட சாப்பாட்டுக் கூடையைத் திருடப் பாக்கறான்…கேட்டா…அவனோட மொபைல் போன் இதுக்குள்ளார இருக்கு…அதை எடுக்கத்தான் எடுத்தேன்!னு பொய் சொல்றான்”

“யோவ்!….யாருய்யா நீ?…உன்னோட மொபைல் எப்படிய்யா அவ கூடைக்குள்ளார போகும்?…நீ என்ன பைத்தியமா?” சற்று வயதில் பெரியவரான ஒருத்தர் மிரட்டலாய்க் கேட்க,

“அய்யா…மொதல்ல…அவங்க கூடையை செக் பண்ணுங்க…செக் பண்ணிட்டு அப்புறம் சொல்லுங்க”

“யோவ்…என்னைய என்ன திருடின்னு நெனச்சியா?” அந்தப் பெண் சாப்பாட்டுக் கூடையைத் தர மறுக்க,

அந்தப் பெரிய மனிதர், “ஏய்..நீ ஏன் பயப்படறே?….குடு உன் கூடையை நான் பார்க்கறேன்” என்று சொல்லிக் கொண்டு, அவள் கையிலிருந்த சாப்பாட்டுக் கூடையை “வெடுக்”கென்று பறித்து உள்ளே கையை விட்டுத் தேட,

ஆனந்தராஜின் மொபைல் உள்ளே இருந்தது.

“ஏய்…சரசு.…இதென்னடி உள்ளார ஒரு மொபைல் போன் இருக்கு” அந்தப் பெரியவர் மொபைலைக் காட்டியவாறே கேட்க,

“அய்யோ…சாமி சத்தியமா எனக்கு ஒண்ணுமே தெரியாது!…அது எப்படி என்ர கூடைக்குள்ளார வந்திச்சு?ன்னே தெரியலையே?” கிட்டத்தட்ட அழுதே விட்டாள் அவள்.

தன்னை ஒரு திருடி என்று தன் சக பணியாட்கள் நினைத்து விடக் கூடாது, என்பதற்காக, அவள் விஜயசந்தரைப் பார்த்து, “யோவ்…சொல்லுய்யா..இதை எப்பய்யா என் கூடைக்குள்ளார போட்டே?” கண்களை அகல விரித்துக் கொண்டு கேட்டாள்.

“அது…வந்து” என்று தயங்கிய விஜயசந்தர், “அதோ அந்த ஹோட்டலின் மொட்டை மாடில நின்னு பேசிட்டிருந்தப்ப…போன்ல ஒரு கெட்ட செய்தி…அந்தக் கோபத்துல தூக்கி வீசிட்டேன்…அது நேரா…இங்க வந்து…இந்தக் கூடைக்குள்ளார விழுந்திடுச்சு” ஒரு வழியாக பிரச்சினைவை வளர்த்தாமல் உடனே அங்கிருந்து கிளம்பினான் விஜயசந்தர்.

உண்மையிலேயே அந்த சாப்பாட்டுக் கூடையிலிருந்து விஜய்சந்தர் மொபைலை எடுத்து வந்து தர,

வியப்பின் உச்சிக்கே போனான் ஆனந்தராஜ். “இதை வெச்சு ஏகப்பட்ட வேலைகள் செய்யலாம் போலிருக்கே?” என்றவன், அந்த சங்கரனை நேருக்கு நேர் பார்த்து, “இங்க பாருங்க சங்கர்…உங்களை இங்க சேர்த்துக்கிட்டு…உங்க மூலமா இன்னும் புதுப் புது வித்தைகளை காட்ட நான் முடிவு பண்ணிட்டேன்!…அதே நேரத்துல எனக்கு ஒரு சந்தேகம்” என்றான்.

“கேளுங்க சார்”

“இதனால் வேற எந்த விதமான பிரச்சினையும் வந்திடாதே?” கீழ்ப் பார்வை பார்த்தபடி கேட்டான் ஆனந்தராஜ்.

“நிச்சயமாயிட்டு வராது சாரே”

“ஓ.கே…நீ…வர்ற புதன் கிழமையிலிருந்து வேலைக்கு வந்திடு” என்ற ஆனந்தராஜ் தன் நண்பர்கள் பக்கம் திரும்பி, “என்ன பார்ட்னர்ஸ்…இவரை அப்பாயிண்ட் பண்ணிடலாம்தானே?” கேட்டான்.

விஜய்சந்தர் உடனே “தாராளமா” என்று சொல்ல,

திருமுருகன் தயங்கினான். காரணம், அவன் காதோரம் “அது” வந்து, “வேண்டாம்…குட்டிச்சாத்தான் சகவாசம்” என்றது.

(தொடரும்)

< ஐந்தாவது பகுதிஏழாவது பகுதி >

கமலகண்ணன்

4 Comments

  • Really interesting super

  • Interesting…. 😍

  • இந்த வாரம் இன்னும் வரலையே… 😢

Leave a Reply to கமலகண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...