பத்துமலை பந்தம் |6 – காலச்சக்கரம் நரசிம்மா

 பத்துமலை பந்தம் |6 – காலச்சக்கரம் நரசிம்மா

6. மர்ம வளையம்..!

நல்லமுத்து தனது மாப்பிள்ளை சரவணப்பெருமாளின் அலைபேசி எண்ணுக்கு அழைக்க முயற்சிக்க, பதில் இல்லாமல் போக, எரிச்சலுடன், மகள் குணசுந்தரியின் அலைபேசி எண்ணுக்கு முயற்சி செய்து, அதுவும் தோல்வியில் முடிய, வேறுவழியின்றி வீட்டு லாண்ட் லைனுக்கு முயற்சி செய்தார். ஆனால் பணிப்பெண்தான் போனை எடுத்தாள்.

“அம்மா, அய்யா இரண்டு பெரும் வெளியே போயிருக்காங்க..!” –என்றதும் சலிப்புடன் போனை வைத்தார்.

“என்னோட அவசரம் பிள்ளைங்களுக்கு எங்கே புரியுது..? ரெண்டு பேரும் மொபைல் போனை அணைச்சு வச்சிருக்காங்க..!” –நல்லமுத்து புலம்ப, அவரை எச்சரிக்கையுடன் பார்த்தார் சஷ்டி சாமி.

“நீ ஒவ்வொரு தடவை தப்பு செய்யற போதும், நான் உன்னை எச்சரிக்கலை’னு மட்டும் சொல்லாதே. நீ செய்த முதல் தப்பின் போதே நான் தலைப்பாடமா அடிச்சுக்கிட்டேன்.” என்றவர், மெதுவாக நடந்து சென்று ஜன்னலோரம் நின்று, தொலைவில் தெரிந்த கொடைக்கானல் மலைகளை வெறிக்கத் தொடங்கினார்.

நல்லமுத்து குழப்பத்துடன் அவரது முதுகையே வெறித்து பார்த்தார். எந்தத் தவறை சொல்கிறார் சஷ்டி சாமி..? இவர் செய்த தவறுகள் எண்ணிலடங்கா. இதில் முதல் தவறு என்று எதைக் குறிப்பிடுகிறார், சஷ்டி சாமி..?

“எந்தத் தவறைச் சொல்லுறீங்க சாமி..?” –நல்லமுத்து தனது இமைகளின் பிளவின் வழியாக சஷ்டி சாமியை வெறித்தார்.

“ஆராதனை இல்லாம, நவ பாஷாணச் சிலையை வச்சுக்காதே’னு உன்னை நான் எச்சரிக்கலையா..? எங்கேயாவது பத்திரப்படுத்தி, அதுக்கு அன்றாட பூஜைகளைச் செய்’னு உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கலியா..? நீதான் குருக்கள் தினமும் அபிஷேகம் செஞ்சு நவபாஷாணச் சிலையை தேய்ச்சுடுவாங்கனு சொல்லி, மலைக்குகையில பத்திரப்படுத்தினே..! மந்திர உச்சாடனம் இல்லாமதான் நவபாஷாணக் கட்டுகள் தளர்ந்து போச்சு.” –சஷ்டி சாமி கூறினார்.

“சாமி..! அபூர்வமா எங்க குடும்பத்துக்குக் கிடைச்ச சிலையைப் பாதுகாக்கணும்னு நான் நினைச்சது தப்பா.? நீங்க சொல்லுற அந்த மூணு பாஷாணக் கட்டுகள் தானே தளர்ந்து போச்சு..? எப்பாடு பட்டாவது அந்த மூணு பாஷாணங்களைத் தேடிக் கண்டுபிடிச்சு, மீண்டும் சிலையை உங்க கையாலேயே கட்டிடுங்க சாமி..! தளர்ந்து போன பாஷாணக் கட்டுகள் என்னன்னு சொன்னீங்க..?”

”சங்கு பாஷாணம், கச்சால பாஷாணம் மற்றும் தொட்டிப் பாஷாணம்..! இந்த மூணு பாஷாணங்களையும் சித்தர்கள் ரகசியமாக வச்சிருக்காங்க. எங்கேன்னு போயித் தேடுவே..?” –சஷ்டி சாமி கேட்க, அவரையே சற்று நேரம் வெறித்துப் பார்த்த நல்லமுத்து, நிதானமாக அவரை நோக்கி நடந்தார்.

“சாமி..! எங்கப்பாரு கிட்டே நவபாஷாண சங்கல்பம் எடுத்துக்கிட்டபோது, போகரை பத்திப் பல விஷயங்களைச் சொல்லியிருக்காரு. ரொம்ப அபூர்வமா, மனுஷனுக்குக் கிடைக்காத அரிய வகை மூலிகைகளைத் தேடி எடுக்க ஒரு மந்திரத்தைப் போகர் சொல்லுவாராமே..! அது பெயர் தம்பணா மந்திரம்..! அது உங்களுக்கு தெரியுமா..?” –நல்லமுத்து கேட்டதும், அதிர்ந்து போய் நல்லமுத்துவை நோக்கினார் சஷ்டி சாமி.

“தம்பணா மந்திரத்தைப் பத்திக் கேட்கிற அளவுக்கு நீ வளர்ந்துட்டியா..? பொதுவாவே, எல்லா மூலிகைகளும், குறிப்பா… சஞ்சீவி மூலிகை, யார் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. ஹனுமான் எதற்கு சஞ்சீவி மலையைத் தூக்கிட்டு வந்தாரு..? அவர் கைக்குச் சிக்காம சஞ்சீவி மூலிகை நழுவிகிட்டே இருந்தது. தம்பணா மந்திரத்தை ஜெபிச்சு, அதைக் கையகப்படுத்தற அளவு அவருக்கு கால அவகாசமில்லை. அங்கே லட்சுமணன் ஆபத்தான நிலையில இருந்தான். அதனால அவரு மலையையே தூக்கிட்டுப் போனாரு. இதைத் தெரிஞ்சுக்கிட்ட போகர், எல்லா பாஷாணங்களையும் தம்பணா மந்திரத்தால் கட்டி, பின்பு அதைக் கைப்பற்றி கட்டினார். போகர் தம்பணா மந்திரத்தை வச்சுதான் 64 பாஷாணங்களைத் தனது வசம் வச்சிருந்தார். எனக்கு தம்பணா மந்திரம் உபதேசம் ஆகலை..!” –என்றார் சஷ்டி சாமி.

“அதைத்தான் நான் சொல்ல வரேன் சாமி..! போகர் பாசறையில் இருக்கிற நவபாஷாணச் சிலையைக் கட்ட, சங்கு பாஷாணம், கச்சாலை பாஷாணம், தொட்டி பாஷாணம் தேவைன்னு சொல்றீங்க. இந்த மூணு பாஷாணத்தைத் தனித்தனியாத் தேடறதுக்கு அவகாசம் இல்லை. யாராவது தம்பணா மந்திரத்தை* தெரிஞ்சவங்களைத் தேடிப் பிடிச்சு அவங்க மூலமா, இந்த மூணு பாஷாணங்களைத் தேடிப் பார்க்கலாமே..!” –நல்லமுத்து கூற, திகைப்புடன் அவரைப் பார்த்தார் சஷ்டி சாமி.

“நான் தடுப்புக்குக் கீழே போகப் பார்க்கிறேன். நீ கோலத்துக்குக் கீழே போறே..! உனக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சிருக்கு..! இது நல்லதுக்கா கெட்டதுக்கான்னு தெரியல. ஆனா, நீ எதையாவது செய்யப் போய், வம்பை விலைக்கு வாங்கப் போறியோன்னு கவலையா இருக்கு.” –சஷ்டி சாமி கூறினார்.

“நீங்களே பல தடவை சொல்லியிருக்கீங்க..! போகர் ஆசீர்வாதம் இருக்கிறதாலதான் எனக்கு நவபாஷாணச் சிலை கிடைச்சுதுன்னு..! அந்த ஆசிர்வாதத்துல ஒரு பகுதியா, தம்பணா மந்திரம் தெரிஞ்ச ஒருத்தர் எனக்கு கிடைக்காமலா போவாரு..? நான் தேடிப் பார்க்கிறேன்..!” —நல்லமுத்து கூறினார்.

“நான் உன்னைத் தடுக்கலை..! ஆனா நீ கையாளும் விஷயங்கள் எல்லாம் பிரபஞ்ச ரகசியங்கள். இது நம்ம உலகத்துக்கு மட்டுமான விஷயம் இல்லை. ஜாக்கிரதை..! அவ்வளவுதான் சொல்லுவேன். உன் மேலகூட எனக்கு நம்பிக்கை இருக்கு. ஆனா உன் குடும்பத்தினர் மேல எனக்கு லவலேசமும் நம்பிக்கை இல்லை. அவங்க வரைக்கும் இந்த விஷயம் எல்லாம் போகாமல் பார்த்துக்க. எதுவாக இருந்தாலும், நீயே எல்லா விஷயங்களையும் கையாளு..! இன்னொருத்தர் கிட்ட பணியை ஒப்படைக்காதே..!” -சஷ்டி சாமி சொல்ல, தலையசைத்தார் நல்லமுத்து.

“நான் பார்த்துக்கறேன் சாமி..!” என்றவர், சஷ்டி சாமியை மௌனமாகப் பார்த்தார்.

“நான் என்ன செய்தாலும், அதனை நீங்கள் தடுக்காமல் இருந்தால் போதும்..!” –என்பது போன்ற அவரது பார்வை இருக்க, சஷ்டி சாமி பெருமூச்சு ஒன்றைச் சிந்திவிட்டுப் புறப்பட்டார்.

“இதோ பாரு, நல்லமுத்து..! நவபாஷாணச் சிலையோட கட்டு தளர்ந்து போச்சுன்னு சொன்ன உடனே, நீ கலங்கி போயிட்டே. எனவேதான் தைரியத்துக்கு நான் உன் கூட வந்தேன். உனக்குத் தொந்தரவு கொடுக்கிறதுக்கு இல்லை. நீதான் என்னைத் தேடிட்டு வந்தே. எனக்கும் ஏதோ பிரச்சனைன்னு மனசுல பட்டதால உன் கண்ணுல பட்டேன்.. ஆனால் வெயில்ல வர்ற நிழல், நிழலுல பிரிஞ்சுடும். அதுபோல, எப்ப நீ தடம் புரண்டு போறியோ, அப்பவே உன்னோட சங்காப்தம் வேண்டாம்ன்னு நான் போயிடுவேன்.” –என்றவர், உடனே படியிறங்கிச் செல்ல ஆரம்பித்தார்.

அவரது எச்சரிக்கையை நல்லமுத்து செவிமடுக்கவில்லை. காரணம், ஏற்கனவே அவரது சிந்தை இறக்கை கட்டிப் பறந்து கொண்டிருந்தது. தம்பணா மந்திரத்தை வச்சு மூணு பாஷாணங்களைத் தேடி எடுத்து, அப்புறம் சஷ்டி சாமியைக் கூப்பிட்டு அந்தச் சிலையைக் கட்டி… எதற்கு மூக்கை வளைத்துச் சுற்றித் தொட வேண்டும்..? அகப்படாமல் நழுவுகின்ற பாஷாணங்கள் தம்பணா மந்திரத்தை உச்சரித்தால், தானாகக் கிடைக்கும் என்றால், 64 பாஷாணங்களும்தானே அந்த மந்திரத்திற்கு கட்டுப்படும்..? அப்படி என்றால், மூன்று பாஷாணங்களைத் தேடுவானேன்..? இந்த மந்திரத்தைத் தெரிந்தவரைக் கொண்டு, மூன்றாவது நவபாஷாணச் சிலை எங்கே இருக்கிறது என்பதைத் தேடிக் கண்டுபிடிக்கலாமே..! –என்று நல்லமுத்து நினைக்க, அவரைத் திடீர் உற்சாகம் பற்றிக்கொண்டது.

சரியாக போன் மணி அடிக்க, உற்சாகம் குறையாமல் ரிசீவரை எடுத்தார், நல்லமுத்து. மருமகன் சரவணப்பெருமாள் தான் சென்னையிலிருந்து அழைத்தான்.

“மாப்பிள்ளை..! நான் ரொம்ப நேரமா உங்ககிட்டே பேச முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தேன். ஒண்ணுமில்லை..! இந்த வருஷம், தைப்பூசம் பூஜை கிடையாது. எனவே யாரும் பள்ளங்கி வரவேண்டாம். ஆனால் நான் சென்னைக்கு வரேன். ரொம்ப முக்கியமான விஷயம்… நம்ம ஈசிஆர் ரோட்டில் இருக்கிற ‘குறிஞ்சி பார்ம் ஹவுஸ்’ல நம்ம குடும்பத்தினர் எல்லோரும் சந்திக்கணும். ரொம்ப முக்கியமான விஷயம். ஒருத்தரும் வராம இருக்கக் கூடாது.” –அடுத்த ஞாயிற்றுக் கிழமை எல்லாரும் குறிஞ்சியில கூடணும்..! எல்லா விஷயங்களையும் நேரே பேசலாம்..! இப்ப போனை வச்சுடுங்க..!” –என்றவர், சஷ்டி சாமி புறப்பட்டு விட்டாரா என்பதை ஊர்ஜிதம் செய்து கொள்பவரைப் போன்று, ஜன்னல் பக்கமாகச் சென்று எட்டிப் பார்த்தார். தொலைவில் சஷ்டி சாமி அடிமேல் அடியெடுத்து வைத்து வெளியேறிக் கொண்டிருந்தார்.

சஷ்டி சாமி பள்ளங்கி பவனத்தின் நுழைவாயிலை நோக்கி நடக்க, சரியாக அவரது நாசியில் ஒருவித நெடி வீசியது. முதலில் அமிர்தமணி மூலிகையின் வாடையைத்தான் உணர்ந்தார். அமிர்தமணி என்பது மிகவும் அபூர்வமான மூலிகை ஆயிற்றே..! எப்படி அந்த வாசம் பள்ளங்கி பவனத்தில் வீசுகிறது என்கிற வியப்புடன் அவர் சுற்றிப் பார்க்க, அவரது பார்வை அங்கு இருந்த சிறு ஆலயத்தின் மீது பதிந்தது. அந்த ஆலயத்தை ஒன்றிரு முறை பள்ளங்கி பவனத்திற்கு வந்த போது, சஷ்டி சாமி பார்த்திருக்கிறார். உள்ளே ஒரு வேல் மட்டும் தான் இருக்கிறது. சிலை எதுவும் இல்லை என்று நல்லமுத்து கூறியதால், அவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் கடந்து சென்றிருந்தார். ஆனால் இப்போது, அமிர்தமணி மூலிகை வாசம் அந்த ஆலயத்தில் இருந்துதான் வீசுகிறது என்பதை உணர்ந்தவராக, அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று, உள்ளே எட்டிப் பார்த்தார்.

உள்ளே வேல் ஒன்று மட்டுமே நிறுவப்பட்டிருந்ததது. அந்த வேலினைச் சற்று நேரம் உறுத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சஷ்டி சாமி.! அந்த ஒரு கணத்தில், அவருக்கு ஒன்று புரிந்து போனது. தான் நினைத்தது போன்று நல்லமுத்து ஒன்றும் நல்லவன் கிடையாது என்பதை புரிந்து கொண்டார். அவரது பார்வை அந்த வேலையே வெறித்துக் கொண்டிருந்தது.

பீஜிங் நகரத்தின் க்ராண்ட் மில்லினியம் ஹோட்டல்..!

கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டிருந்த இவர்கள் எம் 319 விமானம், பீஜிங் கேப்பிடல் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் இறங்கும்வரை, இவளுக்கு வாயிலும் பல்லிலும் ஈரமில்லை. அந்த சீன கிழவி வெளியிட்ட அலறலில், எல்லாப் பயணிகளையும் பயம் தொற்றிக்கொண்டது. விமானம் இரண்டு மூன்று முறை அப்படி வானமண்டலத்தில் விழுவது போன்று இறங்க, லக்கேஜ் பாக்ஸ் திறந்து, பைகள் கீழே விழுந்தன. பயணிகளின் அலறல் நடுவே, விமானப் பணிப்பெண்கள் அவர்களை ஆஸ்வாசப்படுத்த முயல, மயூரி படபடப்புடன், காக்பிட் உள்ளே நுழைய முயல, அப்போது குகன்மணி அவளிடம் கடுமையாக பேசியிருந்தான்.

“எங்களைக் கேள்விகளைக் கேட்டு தொந்திரவு செய்யாதீர்கள் ப்ளீஸ்..! சென்று பயணிகளைச் சமாதானம் செய்யுங்கள்..! எங்க கடமையை நாங்க செய்யறோம்..!” என்று சொல்ல, எரிச்சலுடன் வெளியேறி இருந்தாள், மயூரி.

“முருகா..! இந்த விமானத்தைப் பத்திரமா தரையிறக்கு..! நான் நாளை முழுக்க உபவாசம் இருக்கேன்..!” –என்று முருகனிடம் வேண்டிக் கொண்டிருந்தாள். மீண்டும் ஒரு முறை குலுங்கிய விமானம், அதன் பின்னர் பிரச்சனை இல்லாமல் பறந்து, பீஜிங் கேபிடல் இன்டர்நேஷனல் விமானநிலையத்தில் இறங்கியது.

அந்தப் பயணத்தின் பயங்கர அனுபவங்கள் அவளுள் ஒருவித கிலியை ஏற்படுத்தியிருந்தது என்றால், தொடக்கத்தில் இருந்தே, குகன் மணி இவளிடம் முரட்டுத்தனமாக பேசி வந்தது இவளைச் சினம் கொள்ள வைத்தது. தக்க தருணத்தில் அவனுக்குப் பதிலடி கொடுக்க வேண்டும், என்று மனதினுள் உறுதி பூண்டாள்.

அந்த சீன கிழவி போ கைஹன் கூறியது போன்று, எம்எச் 370 விமானத்திற்கு நேர்ந்தது போன்று, இவர்கள் பயணித்த விமானத்திற்கு நேர்ந்திருந்தால்..? தங்களைக் காப்பாற்றிய முருகனுக்கு உபவாசம் இருந்ததுடன், அவனை நோக்கி இதுவரையில் தியானித்துக் கொண்டிருந்தாள்.

தோழிகள் ஷாப்பிங் சென்றிருக்க, தியானத்தை முடித்த மயூரி, ரூம் சர்வீஸை அழைத்து, ஆரஞ்சு ஜூஸ்-க்கு ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தாள்.

அப்போது அறையின் அழைப்பு மணி ஒலிக்க எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

முகமெல்லாம் சிரிப்புடன் விமானி கேப்டன் எரிக் தான் நின்றிருந்தான்.

“மத்த ஏர் ஹோஸ்டஸ்லாம் எங்கே போனாங்க..? ஒருத்தரும் என்னோட காலுக்கு ரெஸ்பாண்ட் பண்ணலியே..?” –எரிக் கேட்டான்.

“எல்லாரும் ஷாப்பிங் செய்ய க்ளோரி மால் போயிருக்காங்க. நைட் வாங்ஸ் கிச்சன்-ல டின்னர் முடிச்சுட்டுத்தான் வருவாங்க..!” –மயூரி கூற, எரிக் முகத்தில் ஏமாற்றம்.

“அப்ப நானும் நீயும் தான் போகணும்..! உடனே கிளம்பு..!” –எரிக் அழைத்தார்.

“எங்கே..?” –மயூரி திகைத்தாள்.

“குகன்மணி நம்ம எல்லாரையும் டின்னருக்கு கூப்பிட்டு இருக்கான். அவன் பீஜிங்-கோலாலம்பூர் விமானத்தை கேப்டனா முதல் தடவையா செலுத்தப் போறான் இல்லையா..? அதுக்கு ட்ரீட்..!” –எரிக் சொல்ல, சுவாரஸ்யம் இல்லாமல் சூள் கொட்டினாள் மயூரி.

“எரிக்..! டோன்ட் யு நோ..? ஐ ஆம் பாஸ்டிங். நான் வரல. நீங்க போங்க..!” –மயூரி கூற, எரிக் முகத்தில் ஏமாற்றம்.

“ஆம்பளைங்க நாங்க ரெண்டு பேரு டின்னர் சாப்பிடறதுல என்ன உற்சாகம்..? . நீ ஒண்ணுமே சாப்பிட வேண்டாம். ஜஸ்ட் கிவ் அஸ் கம்பெனி..!” –எரிக் சொல்ல, மயூரி தர்மசங்கடத்துடன் அவனை நோக்கினாள்.

“இப்பதான் ஆரஞ்சு ஜூஸ் ஆர்டர் செஞ்சேன் எரிக்..!”

“பத்து நிமிஷத்துக்கு முன்னாடி செஞ்சுக்கிட்ட திருமணங்களையேஉடனே கான்சல் செய்யறாங்க. ஒரு ஆரஞ்சு ஜூசுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யறியே..! கமான்..! புறப்படு..!” எரிக் சொல்ல, தலையசைத்தாள்.

“ஓகே..! கிவ் மீ டென் மினிட்ஸ்..! நான் உங்க ரூமுக்கு வரேன். ரெண்டு பெரும் சேர்ந்து போகலாம்..!” என்று கூறிவிட்டு கதவை மூடியவள், முதலில் சர்வீஸ்-சுக்கு போன் செய்து ஆரஞ்ச் ஜூஸ் ஆர்டரை ரத்து செய்தாள். மயூரியின் அழகுக்கு மிதமான அலங்காரம் போதும். இருப்பினும், சற்று மிகையாகவே தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.

பிஸ்தா வண்ணத்தில் லாங் பிராக், பிரென்ச் பிலீட் தலையலங்காரம், வைரக் கற்கள் மின்னும் ஹாரம், பிரேஸ்லெட் என்று தனக்குப் பொருத்தமான அலங்காரம் செய்து கொண்டாள்.

‘உன்னுடைய கம்பீரத்தைக் காட்டிலும், எனது அழகு இன்னும் ஒரு கோடி பெறும்..!’ என்கிற சேதியை குகன்மணிக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிற ஆவல் அதிகமாக அவளுக்கு இருந்தது.

ஒரு முறை நிலைக்கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்துவிட்டுத், திருப்தியுடன், அறையின் ஸ்வைப் கார்டை ஞாபகமாக எடுத்துக்கொண்டு, மொபைல் போனையும் எடுத்துக்கொண்டு புறப்படும்போது, சரியாக அலைபேசி ஒலித்தது.

அம்மா சத்தியதேவிதான் பரபரப்புடன் அழைத்தாள் .

“மயூரி..! இந்த வருஷம் தைப்பூசம் பூஜை கிடையாதுன்னு தாத்தா போன் செஞ்சார். எனவே யாரும் பள்ளங்கிக்குப் போகத் தேவை இல்லை. ஆனால் சென்னையில தாத்தாவோட குறிஞ்சி பார்ம் அவுஸ்ல ஒரு முக்கிய குடும்ப மீட்டிங் இருக்கு. எல்லாரும் வரணுமாம்..! நீ வராம இருந்துடப் போறே..! அடுத்த ஞாயிற்றுக்கிழமை. எப்படியாவது வந்து சேர்ந்துடு. அப்புறம், உங்க தாத்தாவோட கேள்விகளுக்கு என்னால பதில் சொல்ல முடியாது..!” –சத்திய தேவி கூற, திகைப்புடன் ‘எதற்கு இந்த முடிவு..?’ என்று கேட்பதற்காக வாயைத் திறக்க, அவள் அம்மாவுக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை போலும். போன் இணைப்பைத் துண்டித்து விட்டிருந்தாள். மறுநாள் சாவகாசமாக அம்மாவிடம் பேசிக் கொள்ளலாம் என்கிற முடிவுடன், அறையை மூடி கொண்டு புறப்பட்டாள், மயூரி.

“எரிக்..! நான் ரெடி..!” –என்றதும், எரிக் கையில் பெரிய பொக்கே உடன் வெளியே வந்தார்.

“கரெக்ட்டா வந்திருக்கே..! இப்பதான் கேப் வந்திருக்குன்னு போன் வந்தது.” எரிக் கூற, புருவத்தை உயர்த்தினாள், மயூரி.

“கார் எதுக்கு..? குகன்மணி இந்த ஹோட்டல்லதானே தங்கியிருக்கார்..?”

“என்ன உளர்றே..? அவனுக்கு ஓட்டலுல தங்கணும்னு என்ன தலையெழுத்து..? பீஜிங்ல ஷுன் யீ பகுதியில எவ்வளவு பெரிய மாளிகை வச்சிருக்கான் குகன்மணி..! மலேசியா, கம்போடியான்னு சொத்துகளை வச்சிருக்கிற கோடீஸ்வரன்..! எதுக்கு அவன் ஹோட்டல்ல தங்கப் போறான்..? அவன் பைலட் வேலைக்கு வந்திருக்கிறதை வச்சு அவனைக் குறைத்து எடை போடாதே. உன்னை மாதிரித்தான்.! வேலைக்குப் போகணும்னு அவனுக்குத் தலையெழுத்தே இல்லை..! பொழுதுபோக்கு மற்றும் சாகசம் புரியணும்னுதான் விமானியா வந்திருக்கான்..!” –என்றதும் அதிர்ந்தாள்.

“ரிடிக்குலஸ்..! இன்னைக்கு சாயங்காலம், பாத்ரூம் கிளீன் செய்ய ருங்டா வந்தாள்..! அவ வேலை செய்யட்டும்ன்னு காரிடார்ல நின்னுக்கிட்டு இருந்தேன். அப்ப குகன்மணி என்னைக் கடந்து போனார். காரிடார் முடிவுல நின்னு என்னைத் திரும்பி பார்த்து முறைச்சுட்டு போனாரு. இண்டீட், ஹி இஸ் ஸ்டேயிங் இன் திஸ் ஹோட்டல்..!” –மயூரி சொல்ல, எரிக் சிரித்தான்.

“ஸோ, யு ஆர் இன்வால்வ்ட்..! யாரைப் பார்த்தாலும் உனக்கு குகன்மணியைப் போல இருக்குன்னு நினைக்கிறேன். குகன்மணி இந்த ஹோட்டல்ல தங்கியிருக்கார்னா, ஹோட்டல் முதலாளியே டேபிளைத் துடைப்பான். பீஜிங்கில் அவ்வளவு பெரிய ஆளு குகன் மணி..! நீ யாரையோ பார்த்து ஏமாந்திருக்கே.” –எரிக் சொன்னான்.

“இல்லவே இல்லை..! நான் குகன்மணியைத்தான் பார்த்தேன். நிச்சயம் அது அவன்தான்..!” –பிடிவாதமாக மயூரி கூறினாள்.

“நமக்குள்ள எதுக்கு விவாதம்..! நான் அவனோட மாளிகையைக் காட்டறேன். அப்புறம் நீயே ‘நான் பார்த்தது வேற ஆளு’ன்னு ஒத்துக்குவே..!” –என்றபடி எரிக் நடக்க, அவனைப் பின்தொடர்ந்தாள் மயூரி.

எரிக் சொல்வது நிஜமா..? அப்படி குகனுக்கு உண்மையிலேயே ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியம் இல்லையென்றால், இவள் பார்த்தது யாரை..? அவளது மனம் உறுதியாக, ”நான் பார்த்தது குகன்மணியைத்தான்” என்று தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது.

எரிக்குடன் ஹோட்டல் காரில் குகன்மணி இருப்பிடத்திற்குப் புறப்பட்டபோது, குகன்மணியைச் சுற்றி ஒரு மர்ம வளையம் நிலவுவதை மயூரி உணர்ந்திருந்தாள்.

–தொடரும்…

< ஐந்தாவது பகுதி | ஏழாவது பகுதி >

ganesh

8 Comments

  • வாரத்திற்கு ஏழு நாட்கள் எழுதினாலும் படிப்பேன் சார் பத்துமலை பந்தம் மாதிரியான ஒரு தொடரை!அடுத்து எப்போது என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்.மயூரி குகன்மணியைச் சுற்றித்தான் மர்மங்கள் தொடருமோ?

  • Super

  • Interesting one sir
    Waiting for next

    • தம்பணா மந்திரம். தப்பாக யூஸ் பண்ணப்போற நல்லமுத்து . குகன்மணியைப் போல மாய உருவத்தைப் பார்த்த மயூரி .குகனுக்கு என்ன ஆபத்து…..

  • Can’t wait for the next episode… Thrilling..

  • Good going sir💐💐

  • சித்தர்களின் விளையாட்டே சிறப்புதான்! ஷஷ்டி சாமி வேல் கோயிலில் என்ன பார்த்தார்? அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது!

  • […] < ஆறாவது பகுதி | எட்டாவது பகுதி > […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...