பிளாஸ்டிக் பாட்டில்களால் வயலுக்கு நீர் பாய்ச்சும் விவசாயி..!
ஒடிசாவில் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த 35 வயதான விவசாயி ஒருவர் கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி ஒரு நீரேற்ற பாசன முறையை உருவாக்கியுள்ளார். இந்த முறைக்கு மின்சாரமே தேவையில்லை என்பது தான் இதன் சிறப்பம்சமாகும்.
சுக்ருலி தொகுதிக்கு உட்பட்ட பாதம்தாலியா கிராமத்தைச் சேர்ந்த மஹூர் திப்ரியாவுக்கு இதை உருவாக்க தேவைப்பட்டவை மூங்கில், குப்பையில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் மட்டுமேயாகும்.
12’ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள, அவரது தொழில்நுட்ப புத்தி கூர்மை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், திப்ரியாவைப் பொறுத்தவரை, கண்டுபிடிப்பு அவரது விவசாயத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்திலிருந்து தான் முற்றிலும் பிறந்தது.
வாட்டர்வீல் தயாரிக்க ராக்கெட் விஞ்ஞானம் தேவையில்லை என்பதை உணர்ந்த அவர், கீழ்நோக்கி பாயும் தண்ணீரை அனுப்பும் ஈர்ப்பு விசையின் அடிப்படை விதியைப் பயன்படுத்தினார். அவர் கழிவு பிளாஸ்டிக் பாட்டில்கள், மூங்கில் கொத்துகள், மர பலகைகள், இரண்டு இரும்பு தூண்கள் மற்றும் பல இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை இணைத்து தனது பகுதியில் இந்த புதிய மின்சாரமில்லா நீரேற்ற முறையை உருவாக்கினார்.
காந்தகைரி ஆற்றின் கரையில் நிறுவப்பட்ட, 10 அடி உயரத்திற்கு இது கட்டமைக்கப்பட்டுள்ளது. அங்கு நீர் மட்டம் அதிகமாக உள்ளது மற்றும் ஈர்ப்பு அதை 40 மர பிளேடுகளுடன் இணைக்கப்பட்ட பாட்டில்களில் கொண்டு செல்கிறது. இது தானாக சக்கரத்தை சுழல வைக்கும்.
சக்கரம் சுழல ஆரம்பித்ததும், அது வெற்று மூங்கில் கொத்துகள் வழியாக வேளாண் நிலத்தில் தண்ணீரை வெளியேற்றும். சிறந்த அம்சம் என்னவென்றால், சக்கரம் இயங்குவதற்கு மின்சார மோட்டார், தொழில்நுட்ப உபகரணங்கள் அல்லது சூரிய சக்தி கூட தேவையில்லை.
சக்கரத்தை வேலை செய்ய வைக்க திப்ரியாவுக்கு ஒரு மாதம் பிடித்தது. இறுதியாக இது 15 நாட்களுக்கு முன்பு செயல்பட ஆரம்பித்தது.
அவரது கண்டுபிடிப்பு பற்றிய செய்தி பரவியதால், திப்ரியாவுடன் தொடர்புகொள்வதற்கும் அவரது சாதனத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்வதற்கும் அந்தத் தொகுதியில் உள்ள பல விவசாயிகள் அவரது இடத்திற்குச் சென்று வருகின்றனர்.
கரஞ்சியா சப்-கலெக்டர் ரஜனிகாந்த பிஸ்வால் கடந்த வாரம் அந்த இடத்தைப் பார்வையிட்டார் மற்றும் திப்ரியாவின் புதிய கண்டுபிடிப்பிற்காக பாராட்டினார்.