தர்க்கசாஸ்திரம் ஜோதிடர் ஏற்படுத்திய திகில்! – 11 | ஆரூர் தமிழ்நாடன்
ரகசியங்களைத் திறக்கும் சாவிகள்!
மறுநாள் விடிந்தும்வெகுநேரம் படுக்கையிலேயே கிடந்தாள். ஆனால் அந்த அறவழிச்சாலை அதிகாலை 4 மணிக்கே விழித்தெழுந்துவிட்டது.
தியானம், யோகா, நடைப்பயிற்சி, உடல்பயிற்சி, இசை, தோட்டவேலை. சமையலுக்கான ஆயத்தங்கள் என மிருதுவாக, தாளகதியோடு பதட்டமில்லாமல் எல்லோரும் இயங்கிக்கொண்டிருந்தனர்.
அதிகாலையில் தேநீர் கொண்டுவந்து எழுப்பிய பூங்கொடியிடம். ‘புது இடமாச்சே. நைட் சரியா தூக்கம் வரலை, கொஞ்சம் தூங்கிட்டு வர்றேனே’ என்றபடி படுக்கையில் மறுபடியும் கொஞ்ச நேரம் சாய்ந்துவிட்டாள்.
தாமதமாக எழுந்து, குளித்து முடித்து தன்னை தயார் செய்துகொண்ட அகிலா, தன் வீட்டுக்கு ஃபோன்போட்டாள். ஃபோனை எடுத்த அம்மா காவேரியிடம் ‘ஏம்மா கனவுக்கும் வாழ்க்கைக்கும் சம்மந்தம் இருக்கா. கனவில் நடப்பது நிஜத்தில் நடக்க சாத்தியம் உண்டா?’ என்று கேட்டாள். அந்தக் கேள்வி அவளுக்கே குழந்தைத் தனமாய்ப் பட்டது.
அம்மா காவேரியோ அந்தக் கேள்வியைக் கேட்டுப் பதறிப்போனார்.
‘அம்மா அகிலா, ஏதாவது அபசகுணமா கனவு கண்டியாம்மா. எனக்கு பயமா இருக்கும்மா. உனக்கு எதுவும் பிரச்சினை வந்துடக் கூடாதேன்னு மனசு ஏனோ பதறுது. சீக்கிரம் ஊருக்கு வந்து சேரும்மா’ என்றார் கலக்கமாய். இதைக்கேட்ட அகிலா ‘ அய்யோ
அம்மா பயப்படாதே, விபரீதக் கனவெல்லாம் காணலை. எனக்குக் கல்யாணம் ஆகற மாதிரி கனவு கண்டேன். கனவில் ஒருத்தரைக் கட்டிக்கிறேன். அதுவும் ஒரு சாமியாரை. அவ்வளவுதான். இதுக்குப்போய் ஏன் பதற்றே?’ என்றாள்.
காவேரியோ பதட்டம் குறைந்தவராய் ‘அகிலா, இப்பதான் என் வயித்தில் பால் வார்த்த மாதிரி இருக்கு. இதுவரை கல்யாணத்தைப் பத்தியே யோசிக்காத உனக்கு, அந்த ஆசிரமத்துக்குப் போன நல்ல நேரத்திலாவது இப்படியொரு கனவு வந்ததே. சந்தோஷம்டியம்மா’ என்றார். அகிலாவின் கனாக்குழப்பம் புரியாமல்.
எதிர்முனையில் ரிசீவரை வாங்கிப்பேசிய அப்பா ஞானவேல் ‘எப்பம்மா வர்றே. ரெண்டுநாள் நீ இல்லாமலே வீடு இருளடைஞ்ச மாதிரி ஆய்டிச்சி. சீக்கிரம் வாம்மா’ என்றார் வாஞ்சையாய்.
‘சீக்கிரம் கிளம்பிடுவேன். ஓ.கே.வாப்பா’ என்றபடி பேச்சை நிறைவுசெய்தாள்.
முதல் நாள் அறிவானந்தருடன் நடந்த உரையாடல் பதிவுகள் சரியாக இருக்கிறதா? என்றும் இடையிடையே தான் எடுத்த புகைப்படங்கள் தெளிவாய் இருக்கிறதா? என்றும் சரிபார்த்துக்கொண்டாள்.
பின்னர், அறைவிட்டு வெளியே வந்தாள். அறிவானந்தர், முண்டாசு கட்டிக்கொண்டு முண்டா பனியனுடன், அங்கிருந்த தோட்டத்துச் செடிகளுக்கு தண்ணீர் வார்த்துக்கொண்டிருந்தார்.
அவரது கட்டான, பளபளப்பான உடல்மீது அவளை மீறு அவளது கண்கள் பயணிக்க, ‘அடச்சே!’ என தன்னைத் தானே அதட்டிக்கொண்டு, தன் பார்வையின் தீவிரத்தைக் குறைத்துக்கொண்டாள். கனவு ஏற்படுத்திய சங்கோஜத்தை எல்லாம் மூட்டைகட்டி மனதில் இருந்து வெளியே வீசி எறிந்தாள். அறிவானந்தரை நோக்கி விறுவிறுவென நடந்தாள்.
அவருக்கு ஒரு வணக்கம் போட்டாள். பதிலுக்கு வணக்கம் போட்ட அறிவானந்தர், தன் வேலையிலேயே மும்முரமாயிருந்தார்.
அங்கிருந்து கிளம்பி அந்த அறவழிச்சாலை முழுதும் உரிமையாய் ஒரு ரவுண்ட் வந்தாள் அகிலா. எதிர்ப்பட்ட பலரும் சிநேகப் புன்னகையோடு நலம் விசாரிக்க, ஏதோ பலவருடம் அங்கே தங்கியிருப்பது போன்ற உணர்வை அடைந்தாள்.
மைய மண்டபத்தில் நடராஜர் சிலைக்கு அருகே அமர்ந்து ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி, இனிய லயத்தோடு மிருதங்கம் வாசித்துக்கொண்டிருந்தார். எதிரில் அமர்ந்து கொஞ்ச நேரம் ரசித்து வியந்தவள், அவருக்குக் கைகொடுத்துவிட்டு நகர்ந்தாள்.
காலை சிற்றுண்டியை அறவழிச்சாலை அன்பர்களோடு முடித்துவிட்டு புல்வெளி நிழற்குடைக்குக் கீழே போய் அமர்ந்தாள். அப்போது அவளை நோக்கி வந்தார் அறிவானந்தர், அதற்குள் குளித்துமுடித்து புத்துணர்ச்சியோடு வந்த அவர் முகத்தில், ஒருவித உற்சாகம் ததும்பியதை அகிலா கவனிக்கத் தவறவில்லை.
‘ஆசிரம அனுபவம் எப்படி இருந்தது?’ என அவர் அன்பொழுகக் கேட்க….
‘ஆனந்தமயமாய் இருக்கிறது. இங்கே தாய் மடியின் அமைதியில் திளைக்கிறேன். நிம்மதியான உலகம் இது’ என்றாள் அகிலா.
”நன்றி’ என்ற அறிவானந்தர், ‘இந்த உலகம் என் ஒருவனால் மட்டும் ஆனதில்லை. ஆயிரக்கணக்கான அன்பர்களின் வியர்வைத் துளியில் உருவான உலகமிது. இந்த சமூகம் அன்புமயமாய் ஆனந்தமயமாய்த் திகழ வேண்டும் என்று ஆசைப்படுகிற, எண்ணற்ற நெஞ்சங்களின் இதயத்துடிப்பை இதன் ஒவ்வொரு அங்குலத்திலும் நீங்கள் கேட்கலாம். இந்த உலகம் இயங்கத் தேவையான பொருளாதாரம் என்கிற மின்சாரத்தை பல்லாயிரம் பேர் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் மூலம் இந்த அறவழிச்சாலையும் இதைச்சார்ந்த இலவச மருத்துவ மனையும் ஆதரவற்றோர் இல்லமும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது, ஒட்டு மொத்தத்தில் நல்ல இதயங்கள் சேர்ந்து இசைக்கும் ஒரு அழகிய ஆலாபனைதான் எங்கள் உலகம். இன்றிலிருந்து அது உங்களின் உலகமும் கூட’ என்றார் புன்னகையோடு.
’மருத்துவமனையும் ஆதரவற்றோர் இல்லமும் எங்கே இருக்கிறது?’ என்றாள் ஆச்சரியம் பொங்க அகிலா.
‘இங்கிருந்து எட்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது. எழைபாளைகளுக்கு இங்கே உயர்தர மருத்துவம் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அங்கு பணிபுரியும் மருத்துவர்களில் பலர், இங்கேதான் தங்கியிருக்கிறார்கள். அதேபோல் ஆதரவற்றோர் இல்லத்தில் 318 குழந்தைகள் 262 பெண்கள், 321 முதியோர் தங்கியிருக்கின்றார். இங்குள்ள பிள்ளைகள் படிக்கிறார்கள். திடகாத்திரமாக இருப்பவர்கள் வேலைகளுக்கும் போகிறார்கள். இயலாதவர்கள் நிம்மதியாக சகல வசதிகளோடும் குளிர் பதன அறைகளில் ஓய்வெடுக்கிறார்கள். அடுத்த கட்டமாக பள்ளிகளையும் கல்லூரிகளையும் உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோம்’ என்றார் அறிவானந்தர்.
வியப்பின் உச்சத்துக்குப் போன அகிலா ‘அபாரமான திருப்பணிகளைச் செய்றீங்க. கேட்கவே ரொம்ப சந்தோசமா இருக்கு. இப்படி சமூகத்தைப் பற்றியே யோசிக்கும் நீங்க உங்களைப் பத்தி யோசிப்பதுண்டா?’ என்றாள். இது அவளுக்குள் தானாய் திடுமென முளைத்துவந்த கேள்வி.
“என்னைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு?’ என்றார் அறிவானந்தர்.
‘உங்களை சரியாக பராமரித்தால்தானே இந்த அறவழிச்சாலையை நீங்கள் பராமரிக்க முடியும்?’
‘அதற்கு?’
‘யாரையாவது பார்த்து திருமணம் பண்ணிக் கொண்டால் உங்களைப் பராமரிக்க ஒரு ஆள் கிடைக்கும்தானே? உங்களை பற்றி நீங்கள் கவலைப் படவே இல்லையா?’
‘எனக்கு உணவு தயாரிக்கவும் உடை துவைக்கவும் நேரா நேரத்துக்கு உபசரிக்கவும் தனியாக ஒரு ஆள் தேவையா என்ன? நானே என்னைப் பராமரித்துக்கொள்கிறேன். இனியும் பராமரித்துக்கொள்வேன். எனது அன்பர்கள் எனக்கு ஆதரவாகவும் என் மீது அக்கறையாகவும் இருக்கிறார்கள். ஓடும்வரை ஓடுவேன். முதுமை வந்தால் இங்கேயே ஆதரவற்றோர் இல்லம் இருக்கிறது. பிறகு ஏன் நான் என்னைப் பற்றிக் கவலைப் பட வேண்டும்?’என்றார் அறிவானந்தர்.
’சரி, காதலடைவது உயிரியற்கை என்கிறார் பாரதிதாசன். உங்களுக்குக் காதல் உணர்வே அரும்பியதில்லையா?’-என்றாள் அகிலா குறும்பாக.
‘ஏனில்லை. நான் என் மாணவப் பருவத்தில் அதையெல்லாம் கடந்துதான் வந்திருக்கிறேன். -நானும் கவிதைகள் எழுதிக் கசிந்துருகிக் கிடந்திருக்கிறேன்’ என்ற அறிவானந்தர்,
’திருவிழா காணவந்த தேவதையே நானுன்
தெருவிலே நித்தம் திரிந்தேன் – திருக்குயிலே
பூச்சிறகு பூக்கப் புதுவானில் நீந்துகிறேன்
ஆச்சரியம் தானுன் அழகு’
-என்றெல்லாம் காதல் வெண்பாக்களைக் கூட எழுதிப் புலம்பியிருக்கிறேன். இப்படி விடலைப் பருவக் காதல் அனுபவங்களும் எனக்கு உண்டு. அவைகளிடமிருந்து தப்பித்து ரொம்பதூரம் வந்துவிட்டேன். அதன்பிறகு பெண்கள்பால் வியாபித்த காதல், சமூகத்தின்பால் வியாபிக்க ஆரம்பித்துவிட்டது’ என்றார் சிரித்தபடியே.
’அப்படியென்றால் உங்கள் இதயத்திற்குள் எந்தப் பெண்ணுமே இல்லையா?’ என்றாள் துடுக்காக.
‘நான் அப்படிச் சொல்லவில்லை. ஆண்களும் பெண்களுமாய் நிறைய அன்பர்கள் என் இதயத்திலும் நினைவிலும் இருக்கிறார்கள். ஏன் நீங்கள் கூட இருக்கிறீர்கள்’
இதைக்கேட்டு திகைத்த அகல்யா ‘உங்கள் இதயத்தில் நானா?’ என்றாள் பலவீனமான குரலில்.
‘நீங்களும்’ என்றார் அறிவானந்தர்.
‘எதனால்?’
’உங்கள் துடிப்பும் உங்கள் கேள்விகளும் உங்கள் கவித்துவமான, கண்ணியமான, நடவடிக்கைகளும் கவர்வதில் ஆச்சரியமில்லை. எத்தனையோ பெண் தோழிகளோடு பழகியிருக்கிறேன். ஆனால் உங்களைப் போன்ற தேடல்கொண்ட பெண்ணை இப்போதுதான் பார்க்கிறேன். வாழ்க்கையை, அதன் ரகசியங்களை, தத்துவங்களை, அதன் வேர்களை, நீங்கள் உங்களை அறியாமலே தேடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குள் வசீகரமான கேள்விகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. வறட்டுத்தனமில்லாத கேள்விகள் வணங்கத்தக்கவை. கேள்விச் சாவிகள்தான் வாழ்வின் ரகசியக் கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கின்றன. தேடல் என்கிற சுகானுபவத்தைக் கேள்விகளே உண்டாக்குகின்றன. இந்த சுகானுபவம் வலியிலிருந்தும் கூட பிறக்கலாம். முட்களில் இருந்தும் மலரலாம். ஏனெனில் பல உண்மைகள் வலி தரக்கூடியவை. அந்த வலியை ரசித்தால் அது சுகானுபவத்தில் நம்மை முழ்தாக மூழ்கடிக்கும். இது எப்படி என்பதை நேரம்வாய்க்கிற போது சொல்கிறேன். எனவே வசீகரக் கேள்விகளோடு வளையவரும் உங்களை எனக்குப் பிடிக்கிறது’ என்றார் அறிவானந்தர். அவரது ஓவ்வோரு வார்த்தையும் அவளை மேகவீதிகளில் இழுத்துச்சென்றது. அவள் வயமிழந்தபடி அவரது வார்த்தைகளை ரசித்தாள்.
அப்போது, ஆசிரம பெண்சீடர் ஒருவர் வந்தார். அவர், அறிவானந்தரின் காதருகே ஏதோ சொல்ல, அறிவானந்தரோ, அகிலாவின் பக்கம் திரும்பி ‘அகிலா, அவசர வேலையாய் வெளியே போகிறேன். விரைவில் திரும்பிவிடுவேன்’ என்றார் கைகூப்பி எழுந்தபடியே. அவளும் ‘பரவால்ல. போய்ட்டுவாங்க’ என கைகூப்பி விடைகொடுத்தாள்.
அறிவானந்தர் ஆசிரமப்பெண்ணோடு கம்பீரமாக நடந்து போவதையே பார்த்துகொண்டிருந்தாள் அகிலா.
(தொடரும்)
| அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |