ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்

 ஒரு விள்ளல் நாடகத்தனம் | ஆர்னிகா நாசர்

கைபேசியில் குவிந்திந்த குறுந்தகவல்களில் தேவையற்ற வற்றை அழித்துக் கொண்டிருந்தான் கௌதம். வயது 29. திராவிட நிறம் 175செமீ உயரம். மணிமேகலைப் பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராக பணிபுரிபவன். சமீபத்தில் திருமணமானவன்.

மனைவிக்கு குரல் கொடுத்தான். “மஞ்சரி காபி கொண்டா”

மஞ்சரி வயது 26. முதுகலை விவசாயம் படித்தவள். நடிகை அபர்ணா பாலமுரளி சாயல் இருப்பாள். பெற்றோருக்கு ஒரே மகள் செல்லமாக வளர்ந்தவள்.

ஏறக்குறைய முப்பது குறுந்தகவல்களை அழித்த பிறகு மஞ்சரி சமையலறையிலிருந்து வெளிப்பட்டாள். பிடிபட்ட சுண்டெலியை தூக்கி வருவது போல காபி டம்ளரை தூக்கி வந்தாள். டம்ளரை கணவனுக்கு எதிரில் இருக்கும் மேஜையில் ‘னங்’ என்று வைத்தாள். அப்படி வைத்ததில் சிறிதளவு காபி டம்ளரிலிருந்து அலம்பியது.

காபியையும் மனைவி முகத்தையும் ஒரு மைக்ரோ நொடி பார்த்த கௌதம் மீண்டும் தனது வேலைக்குள் மூழ்கினான்.

கணவன் காபி எடுத்து குடிப்பான் என எதிர்பார்த்து ஒரு ஐந்து நிமிடம் நின்றிருந்தாள். பின் சலித்துப் போய் சமையலறை புகுந்து மறைந்தாள். மீண்டும் 15நிமிடம் கழித்து வெளிப்பட்டாள். கணவனை நெருங்கி டம்ளரை எட்டினாள். காபி குடிக்கப்படாமல் அப்படியே மரப்பட்டை நிற ஆடை படர்ந்து கிடந்தது. மஞ்சரிக்கு எரிச்சல் மூண்டது.

என்ன கணவன் இவன்?… ஒரு கல்லுமளிமங்கனை நமக்கு நம் பெற்றோர் திருமணம் செய்து வைத்து விட்டனரே?… காபி கேட்டான் கொடுத்தோம் குடிக்கவில்லையே?… காபி கேட்டவுடன் கொண்டு வந்து கொடுக்கிறாளா இல்லையா என்று வெறும் டெஸ்ட் பண்ணினானோ?… இல்லை காபி வைத்ததை மறந்து விட்டானோ?…

மனைவி முகத்தை காகப்பார்வை பார்த்தான் கௌதம். “கணவன் ஏன் காபி குடிக்கலைன்னு மனசுக்குள்ள ஆராய்ச்சி பண்ணிக்கிட்ருக்கியா?”

“ஆமாம்!”

“நான் வேணும்மின்னே வீம்பாத்தான் காபி குடிக்கல!”

“என் மீது கோபமா?”

“யார் மீதும் எனக்கு கோபமில்லை. பிடிக்கல குடிக்கல!”

“பூடகமா பேசாதிங்க. என்ன பிடிக்கல?”

“நீ காபி கொண்டு வந்த விதம் பிடிக்கல!”

“காபியை வேற எப்டி கொண்டு வர்றது?”

“உன் அம்மா உன் அப்பாவுக்கு காபி கொண்டு வந்து கொடுக்றதை நீ பாத்ததில்லையா?… உன் சொந்தத்ல உன் நட்புல மனைவிமார்கள் கணவன்மார்களுக்கு உணவு பரிமாறுறதை நீ பாத்ததில்லையா?”

“பார்த்திருக்கேன். எனக்கும் அவங்களுக்கும் ஒரு வித்தியாசமும் கண்டுபிடிக்கத் தெரியல எனக்கு!”

“வித்தியாசம் இருக்கு!”

“டம்ளரை சுத்தமாக கழுவியிருந்தேன். தனிப்பாலை காபி டிகாக்சன் கலந்தேன். ஜீனி அளவா போட்டேன்”

“இன்னும் நான் சொல்றதை புரிஞ்சிக்காமயே பேசுற… காபிய நீ மாட்டுக்கு கழனித்தண்ணி வைக்ற மாதிரி வச்ச. காபிய கொண்டு வந்து வச்சதில ஒரு விள்ளல் நாடகத்தனம் இருந்திருக்கனும்”

“ஒரு விள்ளல் நாடகத்தனமா?”

“காபி கேக்றது யாரு உன் புருஷன்… காபி கொண்டு வந்து குடுக்றது யாரு புதுசா கல்யாணமான பொண்டாட்டி நீ!… காபியை கொண்டு வரும் போது காபி டம்ளரில் உனது அழகிய விரல்கள் நர்த்தனம் புரியனும்… உன் முகத்ல பத்மா சுப்பிரமணியமும் பழைய பத்மினியும் தெரிஞ்சு மறையனும்… ‘காபியா கேட்டாய் பிராண நாதா… பகல் பொழுது என்பதால் காபியை குடுக்கிறேன் நாதா… இரவுப்பொழுது என்றால் என்னையையே தருவேன் தலைவா’- என்கிற பாவனை உன்னிடத்தில் வெளிப்படனும். நாடகத்தனத்தோட நீ காபி கொண்டுவந்தா நான் ஸெல்போனையா நோண்டிக்கிட்டுருந்திருப்பேன்?… சட்டென்று உனது கையை பிடித்திருப்பேன்… நீ நாணிகோணி கைகளை விடுவித்திருப்பாய்… நான் உன்னை ரசித்துக்கொண்டே காபியை குடித்து முடித்திருப்பேன். ஒரு காபி உனக்கும் எனக்குமான அன்னியோன்யத்தை தாறுமாறாய் அதிகரித்திருக்கும்!”

“உளறாதிங்க. புருஷன் பொண்டாட்டிக்கு இடையே ட்ராமா எதுக்கு?… நீங்க சொன்ன மாதிரி காபி கொண்டு வந்தா ரெண்டு நாள் ரசிப்பீங்க. மூணாவது நா நடிக்கிரான்னு காமென்ட் அடிப்பீங்க… பகல் நேரத்ல புருஷனுக்கு தவறான சமிக்ஞைகள் தந்து அவனை உருப்படாம பண்றது மன்னிக்க முடியாத குற்றம். அதை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்!”

“அசடு மாதிரி பேசாதே. இப்படி உக்காரு”

“உக்காந்திட்டேன்!”

“ஆண்பெண் உறவுக்குள்ள கொஞ்சூண்டு ட்ராமா உலககட்டாயம். ஒருஆண் ஒரு பொண்ணை காதலிச்சா என்ன பண்றான்?… பெண்ணை மானே தேனேன்னு வர்ணிச்சு காதல் கடிதம் எழுதுறான். பெண் கடிதத்தை படிச்சிட்டு பிடிக்காத மாதிரி பிகு பண்ரா. ஆண் தொடர்ந்து கடிதங்கள் எழுதுகிறான். அவளை பார்க்கும் கணம் அவள் இல்லாவிட்டால் அவன் ஒரு நொடி உயிரோடு இருக்க மாட்டான் என்கிற பாவனையை உடல் மொழியில் காட்டுகிறான். பலவித திருப்பங்களுக்கு பிறகு இருவரின் காதல் கைகூடுகிறது. இவர்களின் காதலை கை கூட வைக்கிறதே ஒரு விள்ளல் நாடகத்தனம்தான்.

“ஒரு உயரதிகாரிகிட்ட லீவு கேக்கப் போற எடத்ல சப்ஆர்டினேட் நாடகத்தனமாய் நடந்துக்கிரான். ஒரு கம்பெனி தனது குக்கரை பெண்கள்கிட்ட விக்க நாடகத்தனம் பண்ணுது. டிவி விளம்பரங்கள்ல கூட சில விஷயங்களை நாடகத்தனமாய் சித்தரித்து வெற்றி பெறுகின்றனர். ‘ஹலோ-ஹாய்-வணக்கம் சொல்றது கூட நாடகத்தனத்தின் வெளிப்பாடுதான். நாடகத்தனம் தேவைப்படாத மனித உறவுகள் இல்லவே இல்லை மஞ்சரி!”

“பெண்கள் தலைக்கு பூச்சூடுவது உதட்டுக்கு சாயம் பூசுவது விரல்களுக்கு நெயில்பாலிஷ் போடுவது கால்களில் கொலுசு அணிவது கூட நாடகத்தனம் என்கிறீர்கள்”

“ஆம்… இவையெல்லாம் பெண்மைக்கு கூடுதல் கவர்ச்சி ஏற்படுத்தும் அம்சங்கள்”

“ஒரு விள்ளல் நாடகத்தனம் ஏமாற்று வேலை இல்லையா?”

“இல்லை… ஆண்-பெண் உறவுக்கான கிரியாஊக்கியே கொஞ்சூண்டு நாடகத்தனம் அந்தக்கால தமிழ்சினிமால பெரிய இடுப்பை ஆட்டி ஆட்டி நடந்து கொஞ்சு தமிழ் பேசுவார் சரோஜாதேவி. அவரை இன்னும் நாம் மறக்கவில்லை. அவரை விட சிறப்பாய் நடித்த ஆனால் கொஞ்சுண்டு நாடகத்தனம் பண்ணத்தெரியாத நடிகைகளை மறந்து விட்டோம்”

“சரி விஷயத்துக்கு வருவோம். நான் தினம்தினம் என்னென்ன விஷயங்களில் என்னென்ன மாதிரியான நாடகத்தனங்கள் பண்ண வேண்டும் என்பதை சொல்லி விடுங்கள். அதனை நான் அப்படியே கிளிப்பிள்ளை மாதிரி நடித்து விடுகிறேன்!”

“அசடு அசடு. இதெல்லாம் சொல்லிக் குடுக்கக்கூடாது!”

“பின்ன?”

“உனக்கும் எனக்கும் இடையே 24மணிநேரமும் ரொமான்ஸ் இழையோடுற மாதிரி உன்னுடைய நடவடிக்கைகள் தூண்டுகோலாய் அமையவேண்டும். ஒரு மனைவியாக இல்லாது ஒரு காதலியாக நின்று என்னை நீ பரவசப்படுத்தவேண்டும். உலக மக்களுக்கு கேட்காத புரியாத மொழியில் நீயும் நானும் தனியே பேசிக் கொண்டே இருக்க வேண்டும்”

“என்னென்னமோ உளறுகிறீர்கள்… உங்க ஆசையை நான் ஏன் கெடுக்க வேண்டும்? இனி தினமும் உங்களுக்கு ஒரு விள்ளல் நாடகத்தனம் ஊட்ட நான் தயார்!”

“நன்றி கண்ணம்மா!” என்றான் கௌதம் இடதுகையை நெஞ்சில் வைத்து.

முப்பது நாட்கள் உருண்டோடின.

மஞ்சரியை பார்க்க மஞ்சரியின் தாயார் வந்திருந்தார். மருமகன் பணிக்கு போகும்வரை மெளனம் காத்த நீலா பொங்கி வழிந்தாள்.

“ஏண்டி மஞ்சரி… நீயும் உன் புருஷனும் வீட்டுக்குள்ள கூத்துப்பட்டறையா நடத்றீங்க?… எதை பேசினாலும் பரதநாட்டிய பாவத்தோட பேசுறீங்க?… உன் புருஷன் வேலைக்கு போறேன்னா போரான்… வேட்டையாடு விளையாடு படத்ல கமல்ஹாசன் கமலினி முகர்ஜிகிட்ட லூட்டி அடிக்றமாதிரில லூட்டி அடிக்றான்… என்ன ஆச்சு உங்களுக்கு?”

கணவனின் ‘ஒரு விள்ளல் நாடகத்தனம்- தியரியை போட்டு உடைத்தாள் மஞ்சரி. சிரித்தாள் நீலா. “புதிதாய் திருமணமான கணவன்மார்கள் எல்லாம் படித்த ஹைபர்-ஆக்டிவ் கிறுக்கர்கள். தங்கள் கனவுகளை கற்பனைகளை மனைவிமாரிடம் சொற்ப விலைக்கு விற்பர். உன் அப்பாவும் உன் புருஷன்மாதிரி தான். கல்யாண புதுசுல என்னை தூக்கிப் போய் மேகத்ல நடக்க வச்சார். எல்லாம் கொஞ்ச நாள்தான். அப்றம் ரொமான்ஸாவது கத்தரிக்காயாவது… சிறுபாவனையோடு காபி கொண்டு வந்தா ‘என்னடி மலச்சிக்கல்காரி மாதிரி முகபாவம் காட்ற’- னுவார். லேசா சிரிச்சாக் கூட ‘காலம் பூரா உழைச்சுக் கொட்ட ஒரு அடிமை மாட்டிக்கிட்ருக்கானேன்ற இறுமாப்புல ஸ்மைல் பண்றியா’-னுவார். இப்பல்லாம் நான் நடிக்கவே தெரியாத எக்ஸ்பிரஷன் காட்டவே தெரியாத கத்துக்குட்டி நடிகை மாதிரி வாழ்க்கை நடத்றேன். ஜோதிகாவாயிருந்த நான் அனுஷ்கா ஆய்ட்டேன். வாழ்க்கை நிம்மதியா போகுது!”

“இப்ப என்னை என்ன பண்ணச் சொல்ற?”

“குழந்தைக்கு பல்முளைக்ற வரைக்கும் தானே சாதம் ஊட்டிவிடுவம். அது மாதிரி கொஞ்ச நாள் ஒரு விள்ளல் நாடகத்தனம் காட்டு. மெதுமெதுவா குறைச்சிட்டு போய் மொத குழந்தை பிறந்த பிறகு நிறுத்திடு!”

“ஏன் நிறுத்திட்டன்னு கேக்கமாட்டாரா?”

“எப்படா ஒரு விள்ளல் நாடகத்தனத்தை நிறுத்துவ-ன்னு ஏங்கிட்ருக்றவன் எதுக்கு கேக்ரான்?… ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துப்பான். நீயும் ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துக்க!”

“சரிம்மா!”

“நமக்குள்ள நடந்த பேச்சு உன் புருஷனுக்கு தெரியவேணாம்!”

“சரியம்மா!”

‘எனது தட்டில கருவாடு கிடக்க பிறர் தட்டுகளில் குழம்பு மீன் கிடக்க எப்படி விடுவேன்?’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள் நீலா.

மணிமேகலைப் பல்கலைக்கழகம் உளவியல் துறை. விரிவுரையாளர் அறையில் அமர்ந்திருந்தான் கௌதம். எடுக்கப்போகும் வகுப்புக்கான நோட்ஸை மனனம் செய்து கொண்டிருந்தான்.

அலுவலக உதவியாளன் எட்டினான். “கௌதம் சார்!”

“என்னப்பா?”

“ஹெச்டி உங்களை கூப்பிடுரார்!”

துறைத்தலைவர் அறைக்குள் போனான் கௌதம் “குட்மார்னிங் சார்!”

“குட்மார்னிங் இருக்கட்டும். உங்க மேல ஸ்டூடன்ஸ் புகார் குடுத்திருக்காங்க. புகாருக்கான பதிலை சொல்லுங்க”

புகாரை நீட்டினார் துறைத்தலைவர். வாங்கி படித்து முடித்தான் கௌதம்.

“நீங்க வகுப்பு எடுக்றது பசங்களுக்கு புரியவே இல்லையாம். ரொம்ப மெக்கானிக்கலா மாடுலேஷனே இல்லாம ராஜாராணி ஜெய் மாதிரி வகுப்பு எடுக்றீங்களாம்!”

“ஸைக்காலஜி டிரை சப்ஜக்ட் சார். பாட்டனி ஜுவாலஜி மாதிரி நடத்த முடியாது!”

“நீங்க சொல்றது தப்பு… ஆசிரியர்-மாணவர் உறவை மேம்படுத்த ஒரு மந்திரம் இருக்கு. அதை நீங்க உபயோகிக்கனும்!”

“என்ன மந்திரம் சார்?”

“நீங்க வகுப்பு எடுக்கும்போது ஒரு விள்ளல் நாடகத்தனம் சேருங்க”

மனைவிக்கு கொடுத்த மருந்து தனக்கே திரும்பி வருகிறதே!

“உங்க அறிவுரைப்படி நடக்றேன் ஹெச்டி சார்!” என்றான் ஐப்பானிய முறையில் குனிந்து கௌதம்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...