விலகாத வெள்ளித் திரை – 13 | லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 13 | லதா சரவணன்

கிராமம் மொத்தமும் கோலாகலமாய் இருந்தது. முதலியாரின் வீட்டில் நடக்கும் விசேஷம் அதுவும் நீண்ட நாளுக்கு பிறகு, ஊர் மொத்தமும் சமைக்க கூட வேண்டாம் என்று தடுத்துவிட்டார் ஊருக்கே பந்தல் போட்டு விருந்து சாப்பாடுதான். பெண் வீட்டாரும் வந்துவிட்டார்கள் எல்லாருக்கும் எல்லாமும் ஏற்பாடு செய்தாகிவிட்டது.

கல்யாணநாள் முதல் பெண் அழைப்பு மயில் போன்ற தோகையுடைய தேரை அலங்கரிக்கப்பட்டு பெண் மாப்பிள்ளையின் வீட்டிற்கு வருவதற்கான சம்பிரதாயங்கள் எல்லாம் நடந்தேறியது. சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிய, அதிகாலை முகூர்த்தம் என்பதால் சிலர் கண் அயர்ந்தார்கள். சிலர் அப்படியே சீட்டாட்டம், என்று பாதிபேர் அங்கு கூட்டம் சேர, கண்ணன் வந்திருந்தவர்களின் வசதியைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்தான். யாரும் எதிர்பாராத வண்ணம் அழையா விருந்தாளியாக வந்து நின்றாள் வேதிகாஸ்ரீ என்ற வேணி.

“ஏம்மா இங்கே என்ன கிளப்பு கடைதான் இருக்கும் ராத்திரி ஒரு ஏழு மணிக்கே மூடிடுவாங்க. இன்னைக்கு என்ன பளபளன்னு ஊரே மின்னுதே!” ராமதுரையின் கேள்விக்கு தெரியவில்லை என்று உதட்டைப் பிதுக்கினாள் வேணி.

“சரி நீ அப்படி ஓரமா நில்லு நான் போய் முதலியார் வீட்டுலே லைட் எரியுது ஒரு எட்டு போய் கேட்டுட்டு வந்திடறேன் !”. பண்ணையார் ஒருவரிடம் விவரம் கேட்க அவன் போய் வாத்தியாரை அழைத்து வந்தான்.

“வாங்க ஸார் நான் உங்களை இப்போது எதிர்பார்க்கவில்லை என்ன விஷயம் ?”

“நாம நினைக்கிறது எல்லாம் எங்கே நடக்குது. இந்த பொண்ணு விஷயமா நான் உங்ககிட்டே கொஞ்சம் தனியா பேசணும்”.

“சரிங்க இங்கே வேண்டாம் இப்போ சூழ்நிலை சரியில்லை “ அருகில் இருந்த பண்ணையாளை அழைத்து வந்திருந்தவர்களை தன் வீட்டிற்கு அழைத்துப் போய் தங்க வைக்குமாறு அனுப்பிவிட்டு, கண்ணனை தேடிப் போனார்.

கல்யாணத்திற்கு வந்திருந்தவர்களின் செளகரியத்தைப் பார்வையிட்டுக் கொண்டு இருந்த கண்ணனை அழைத்து “கண்ணா கல்யாணம் வேற யாருக்கோ இல்லை உனக்குதான். இத்தனை வேலை பார்த்தாயானால் காலையிலே முகூர்த்த நேரத்திற்கு தூங்கிவிழப் போறே பாரு. பொண்ணு என்ன மாமா இப்படியொரு தூங்கு மூஞ்சி மாப்பிள்ளையைப் பிடிச்சி என் தலையிலே கட்டிட்டீங்கன்னு முதலியார்க் கூட சண்டைக்குப் போகப்போது வேடிக்கையாய் சொல்ல, சலனமின்றிச் சிரித்த கண்ணனைப் பார்க்க வெளியில் சிரித்தாலும் சொல்லவொண்ணா துயரம் அவன் மனப்பந்தை அழுத்துவதை அவரால் உணர முடிந்தது.

“இன்னாருக்குத்தான் பிள்ளையாகப் பிறக்கப் போகிறோம் என்று நாம் விரும்பிப் பிறப்பதில்லை ஆனால் இறப்பு வரையில் இன்னாருடன் தான் வாழப்போகிறோம்” என்ற நினைப்பை உருவாக்கி அதை உருத்தெரியாமல் அழிப்பது என்பது எத்தனை கொடூரம் அதைத்தான் கண்ணன் வாழ்க்கையில் வேணியின் வடிவில் நடத்திக்காட்டி விட்டார் கடவுள்.

வாத்தியாருக்கு வேணியின் மேல் கோபம் வந்தது கிடைத்த வாய்ப்பை எல்லாம் விட்டுவிட்டு இப்போது எதற்கு உட்கார்ந்து இருக்கிறாள் ? இவள் வந்ததை கண்ணனிடம் இப்போது சொல்வதனால் ஏதாவது சிக்கல் வருமோ ஒருவேளை கண்ணன் அந்த வேணியைக் கண்டதும் கல்யாணத்தை நிறுத்திவிட்டான் என்றால் முதலியாருக்கு எத்தனை பெரிய அவமானம் அதிலும் விடிந்தால் கல்யாணம் என்று மனக்கோட்டைகள் கட்டிக் கொண்டு காத்திருக்கும் அந்த பெண்ணுக்கு எவ்வளவு அதிர்ச்சி. கூடாது வேணியின் வரவை கண்ணனுக்கு தெரியப்படுத்தக் கூடாது.

“என்னடா கண்ணா இப்படி பழசையே நினைச்சிகிட்டு இருந்தா ? உன் முகம் பளிங்கு மாதிரி காட்டிக் கொடுக்குதே பொண்ணு வீட்டுக்காரங்களோ இல்லை முதலியாரே பார்த்தாக் கூட என்ன நினைப்பாங்க ?!”

“ஸார் ! என்னோட சுகதுக்கம் கஷ்ட நஷ்டமெல்லாம் உங்களுக்குத் தெரிந்த அளவு எங்கம்மாவுக்கு கூட தெரியாது. நானும் எவ்வளவோ அரும்பாடுபட்டு எல்லாத்தையும் மறக்கணுமின்னுதான் பார்க்கிறேன் ஆனா முடியலையே முதல்காதல், சட்டுன்னு கருகிப் போச்சு ஏன் ஸார் அந்த பொண்ணு என்கிட்டே தன்னோட விருப்பத்தை சொல்லாமலேயே இருந்திருந்தா கூட நான் எட்டாக்கனின்னு என் ஆசைக்கு முட்டுக்கட்டைப் போட்டு இருப்பேன் ஆனா இப்போ எதற்காக என்னை மறுத்தான்னு தெரியாம மனசு வலிக்குது.?!”

“கண்ணா எந்த வார்த்தையும் உன்னை சமாதானப் படுத்தாதுன்னு எனக்குத் தெரியும், முடிந்து போன கதைக்கு முற்றும்தான் போடணும் உன்னையே நினைச்சு உன்னோட வாழப்போற வாழ்க்கைக்காக காத்திருக்கும் பெண்ணை பற்றி யோசி, நீ தேக்கி வைச்சிருக்கிற அன்பை எல்லாம் அவளுக்கு கொடு. அதுதான் உன் எதிர்காலம் அன்பு கொண்டவர்களுக்கு கிடைக்கும் உதாசீனத்தின் வலி உனக்குத் தெரியும் அதை அவளுக்குக் கொடுத்திடாதே !”

“அந்த தப்பை நான் கட்டாயம் செய்யமாட்டேன் ஸார் என் வாழ்க்கை முழுக்க இனி அவளோடதுதான். காலம் எல்லாத்தையும் ஆற்றும் அதேமாதிரி நானும் மாறுவேன் ?!”. கண்ணனின் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு நடந்தார் வாத்தியார். மனதிற்குள் ஆயிரம் குழப்பங்களை விளைவித்த ராமதுரையும், வேணியும் அவருக்காக காத்திருந்தார்கள்.

(தொடரும்)

பகுதி – 1 | பகுதி – 2 பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 | பகுதி – 11 | பகுதி – 12 | பகுதி – 13 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...