நீயெனதின்னுயிர் – 21 | ஷெண்பா
“ஆமாம் மாமா. ஃப்ரெண்ட் வீட்டில் தங்கியிருக்கேன். நாளைக்கு விக்ரம் சார் வர்றார். அவங்க வீட்டுக்கும் பத்திரிகை கொடுத்துட்டு, மதியம் கிளம்பிடுவேன்.”
“நல்லதுப்பா. நீ வீட்டுக்குப் போய்ச் சேர்ந்ததும் வைஷுவுக்கு ஒரு ஃபோன் செய்து பேசிடு. அப்போதான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். அதுவரை தூங்காமல் உட்கார்ந்திருப்பா” என்று சங்கரன் சிரிக்க, “கட்டாயம் மாமா…” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான் ராகவ்.
அதுவரை புன்னகைத்தபடி நின்றிருந்த இருவரின் முகமும், சட்டென்று உணர்ச்சியற்ற பாவனையை வெளிப்படுத்தியது. ஒரு பெரிய புயலை எதிர்பார்த்த படியே தந்தையும், மகளும் வீட்டினுள் நுழைந்தனர். ஆனால், அங்கே தேவிகா இல்லாததைக் கண்ட இருவருக்குள்ளும், இப்போது லேசான பயம் தோன்றியது. அது வெறும் புயல் அல்ல… பெரிய சுனாமியே வரப்போவதற்கான அறிகுறியாக இருவருக்கும் பட்டது.
கலக்கத்துடன் பார்த்த மகளை, “நீ உன் ரூமுக்குப் போடா” என்றார்.
“நான் நினைச்சதை விட அம்மா ரொம்ப அப்செட்டா இருக்காங்க போலப்பா. அவங்க ஏதாவது கேட்டுட்டாலும் பரவாயில்ல. எனக்னென்னவோ பயம்மா இருக்கு” என்றாள் அச்சத்துடன்.
”நடக்கறது நடந்தே தீரும். அப்பா இருக்கேன் இல்ல. நீ மனசை உழட்டிக்காம போம்மா” என்றதும் அரை மனத்துடன் தலையாட்டிவிட்டு, தன் அறைக்குச் சென்றாள்.
ராகவ் தன் தங்கையின் வளைக்காப்பிற்கு தன்னை அழைத்ததோ, அவன் பேசியதோ… எதுவுமே தேவிகா வின் மனத்தில் பதியவில்லை. ‘மகளும், கணவரும் திட்டமிட்டு தன்னை ஏமாற்றிவிட்டனர். அவர்கள் ஏமாற்றும் அளவிற்கு, தான் முட்டாளாக இருந்து விட்டோமே!’ என்ற சுயபச்சாதாபத்திலும், அவமானத்திலும் அவரது மனம் குமுறியது.
‘கூடாது… இவர்கள் நினைப்பது எதுவும் நடக்கக் கூடாது. என் தோழிகள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் நான் தோற்றுப் போகக்கூடாது. அவர்களை ஜெயிக்கவிடக் கூடாது’ என்று நினைத்தவர், தனது எண்ணத்தை எப்படி ஈடேற்றுவது என்ற முடிவோடு படுத்திருந்தார்.
இருண்டிருந்த அறையின் விளக்கைப் போட்ட சங்கரன், இழுத்துப் போர்த்தியபடி படுத்திருந்த மனைவியைப் பார்த்தார். கணவர் வந்திருப்பதை அறிந்த போதும், தேவிகா அசையாமல் படுத்திருந்தார்.
“தேவி!” என்றவரது அழைப்பிற்கு, அங்கு எந்த எதிரொலியும் இல்லை.
மீண்டும் அவர் அழைத்ததும், “என்னை எதுவும் பேச வைக்காதீங்க. அதோட விளைவு… ரொம்ப ரொம்ப மோசமாக இருக்கும்…!” என்று போர்வையை விலக்காமல் அழுத்தம் திருத்தமாகச் சொன்ன தேவிகாவின் குரலில், அடக்கப்பட்ட கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“தேவி! உன் கோபம் தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனால், நியாயமும் இல்லை. எல்லாமே நம்ம வைஷாலிக்காகத் தானே. புரிஞ்சிக்க!” என்றார்.
கோபத்துடன் எழுந்தமர்ந்த தேவிகா, “அவள் எனக்கும் மகள்தான். ஒரு பெண்ணோட வாழ்க்கையில்… அவளோட அம்மாவைவிட.. அடுத்தவங்களுக்கு அத்தனை அக்கறையும், உரிமையும் இருக்கா என்ன? அது, அவளோட பெத்த அப்பாவாக இருந்தாலும் கூட!” என்று கத்திய மனைவியை, உணர்ச்சியைத் துடைத்த முகத்துடன் பார்த்தார்.
கடந்த இருபத்தி மூன்று வருடத் தாம்பத்தியத்தில், தன் மனைவியை நன்கு புரிந்து வைத்திருந்தார் சங்கரன். அவருடைய மனத்தில் இருக்கும் அத்தனை உணர்வுக ளையும் படித்துவிட்டவராக, மேற்கொண்டு எதுவும் பேசாமல் எழுந்து தோட்டத்திற்குச் சென்றார்.
வைஷாலி பால்கனியில் நின்று ஜோதியிடம் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அவளது மலர்ந்த முகமும், உற்சாகம் ததும்பிய பேச்சும், அவரது கவலையை சற்று மறக்கச் செய்தது.
‘தனது வாழ்க்கையில் பாதியை வாழ்ந்து முடித்து விட்டதால், இனி வாழ்க்கையைத் துவங்கப் போகும் மகளுக்கு, எந்தக் குறையுமில்லாமல் அதை அமைத்துக் கொடுக்க வேண்டும்’ என்ற திடமான முடிவுக்கு வந்தார் சங்கரன்.
நாளுக்கு நாள் வைஷாலியின் மீதிருந்த காதல், விக்ரமின் மனத்தில் பெருகிக்கொண்டே தான் இருந்தது. ‘இனியும் தாள முடியாது… வைஷாலியிடம் தன் காதலை உறுதிப்படுத்திவிட்டு விரைவில் அவளை மணந்து, எப்போதும் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்’ என்று ஏங்கிய மனத்தை அடக்க முடியாமல் தவித்தவன், ரத்னகிரிக்குக் கிளம்பினான்.
அவன் ரத்னகிரியை நெருங்கிக்கொண்டிருந்த நேரத்தில், அவனது மொபைல் ஒலித்தது.
“விக்ரம்! ரத்னகிரிக்குப் போய்ச் சேர்ந்தாச்சா?” என்று கேட்டாள் சீமா.
“ம்ம். இன்னும் அரைமணி நேரத்தில் போயிடுவேன்; என் தேவதையைப் பார்க்க” என்றான் காதலுடன்.
“அப்போ, எனக்கு ஒரு வேலை செய்யேன்!” என்று கெஞ்சலாகக் கேட்டவள், ஒரு ரிசாட்டின் பெயரைக் குறிப்பிட்டு, “நம்ம ரிசார்ட் சம்மந்தமான ஃபைல் ஒண்ணை மிஸ்டர். மல்ஹோத்ரா கொண்டு வருவார். அதை அவரிடமிருந்து வாங்கிக்கணும். எனக்காக அந்தப் ஃபைலை வாங்கிட்டு, அப்புறம் போய் உன் தேவதையைப் பாரேன்” என்றாள் கெஞ்சலாக.
“ஏய்! விளையாடுறியா?” என்றான் எரிச்சலுடன்.
“ப்ளீஸ் விக்ரம்! முக்கியமான ஃபைல். எனக்கு டைரக்ட் ஃப்ளைட் கிடைக்காததால, இங்கிருந்து கார்ல டெல்லி வந்து, அங்கிருந்து ரத்னகிரி வர்றதா இருந்தேன். பார்த்தால், ப்ளைட் ஒன் ஹவர் லேட்பா. நான் அங்கே வந்து சேர்ந்து, அவர்கிட்டயிருந்து ஃபைலை வாங்கிக்கறதுக்குள்ள அவர் கிளம்பிடுவார். அப்புறம் ஒரு மாசம் அவரைப் பார்க்க முடியாது. வேற எதுவாக இருந்தாலும் பரவாயில்ல இது பிசினஸ் விஷயம். உனக்குத் தெரியாதது இல்லை…” என்று கெஞ்சுதலாகச் சொன்னாள்.
முணுமுணுப்புடன் அவளை மனத்திற்குள் திட்டிக் கொண்டாலும், அவளது வார்த்தைகளை மறுக்க மனமில்லாமல், சரியென்று ஒப்புக்கொள்ள, சீமா நிம்மதியானாள்.
“இதே சந்தோஷத்தோடு போய் அம்மா, அப்பாகிட்ட நான் ரத்னகிரி வந்திருப்பதை போட்டுக் கொடுத்திடாதே. நான் ஷாலுவைப் பார்த்துட்டு வந்து, மெதுவா விஷயத்தை அவங்ககிட்ட சொல்லிக்குவேன். புரிஞ்சுதா?” என்றான் கறாரான குரலில்.
“இதுல ஒண்ணும் குறைச்சல் இல்லை. வைஷாலியா வந்து உன்கிட்ட லவ்வை சொல்றதுக்கு முன்ன, நீயா சொல்றதுக்கு உனக்குத் தைரியம் வந்திருக்கே! இதுக்காகவே உன்னைப் போட்டுக்கொடுக்க மாட்டேன் ஓகேவா?” என்று, அவனது எரிச்சலை அதிகமாக்கினாள்.
“நீ அடங்கமாட்ட? நீ சொன்ன வேலையை அப்படியே விட்டுட்டு, என் வேலையை மட்டும் முடிச்சிகிட்டு வரப்போறேன் பாரு” என்று கடுகடுத்தவன், போனை பட்டென அணைக்க, சிரித்துக்கொண்டாள் சீமா.
இரவு ஒன்பதரை மணிக்கு ரத்னகிரியிலிருந்த விக்ரமின் வீட்டிற்கு, அவள் வந்து சேர்ந்த போது, விக்ரம் வந்ததற்கான அடையாளமே இல்லை. அத்தை, மாமாவிடம் சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து வெளியே வந்தவள், விக்ரமின் மொபைலுக்கு முயன்றாள்.
“ஹய்யோ! போனை எடுடா ஹீரோ. எவ்வளவு நேரம்தான் ட்ரை பண்றது? போனைக் கூட எடுக்காமல், அப்படி என்னடா செய்யற?” எரிச்சலுடன் போனை அணைத்த சீமா, நிலைகொள்ளாமல் நடந்தாள்.
“சீமா! மணி பத்தரை ஆகுது. தூங்கலையா?” அறைக்குள்ளிருந்து அவளைப் பார்த்துக்கொண்டிருந்த செந்தளிர் கேட்டார்.
அவரது அறைவாசலில் வந்து நின்ற சீமா, “தூங்கணும் அத்தை. உங்க அருமை பிள்ளைகிட்ட ஒரு வேலை சொல்லியிருந்தேன்; அது முடிஞ்சிதா என்னன்னு ஒரு ஃபோன் செய்து சொல்லியிருக்கலாம். நான் ஃபோன் பண்ணினா, அதையும் எடுக்கமாட்டேன்றான்” என்றாள் சற்றே கோபத்துடன்.
“விக்ரமிடம் சொன்ன வேலை, என்னைக்கு முடியாமல் இருந்திருக்கு? அவனுக்கு வேற ஏதாவது முக்கியமான வேலை வந்திருக்கும், அதில் மறந்திருப் பான். கவலைப்படாமல் போய்ப் படு” என்றார் அவர்.
“ம், அவனை நீங்க என்னைக்கு விட்டுக் கொடுத்திருக்கீங்க?” என்றவள், “ஆமாம், நீங்க ஏன் இன்னும் தூங்காமல் இருக்கீங்க? டேப்லெட்ஸ் போட்டீங்க தானே?”
“அதெல்லாம் ஆச்சு. தூக்கம்தான் வரலை!” என்று பெருமூச்சு விட்டார் செந்தளிர்.
ஆழ்ந்த பெருமூச்சுடன் சொன்னபோதும், அவரது கண்களில் தெரிந்த ஒளியில் ஆர்வமாக அவரருகில் சென்று அமர்ந்தாள் சீமா. “என்ன அத்தை? ஆயாசமா சொல்றது மாதிரி சொன்னாலும், கண்ணுல தெரியற ஸ்பார்க் வேற விஷயம்ன்னு சொல்லுது!” என்றாள் சிரிப்புடன்.
“உன் அத்தைக்கு, மாமியாராக ஆசை வந்துடுச்சாம்” என்றபடி அங்கே வந்தார் ரவீந்தர்.
“என்னைச் சொல்றாரே… உன் மாமாவுக்கு, மாமனாராக ஆசை இல்லையாமா?” என்று கணவரிடம், சரிக்குச் சரி கேலியில் இறங்கினார் செந்தளிர்.
“உன் பிள்ளைக்கே கல்யாண ஆசை வந்துடுச்சு. எனக்கு மாமனாராக ஆசை வராதா என்ன? நீயே சொல்லேன் சீமா…” என்று அமைதியாக அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தவளை, பேச்சின் நடுவில் இழுத்து விட்டார்.
‘ஆஹா! விஷயத்தை கண்டுபிடிச்சிட்டாங்க போல இருக்கே. இப்போ என் வாயைப் பிடுங்கத்தான் இத்தனை பில்டப்பா. அப்போவே ஒழுங்கா போயிருக்கலாம். இப்போ நான் எதையும் உளராமல் இருக்கணுமே. நான் சும்மா இருந்தாலும், என் வாய் சும்மா இருக்காதே. ஆண்டவா! காப்பாத்து’ மனத்திற்குள் ஆயிரம் வேண்டுத லுடன், திருதிருவென விழித்தபடி இருவரையும் பார்த்தாள்.
“என்ன சீமா… எதுவும் பேசமாட்டேன்ற? நாங்க என்ன சொல்ல வர்றோம்ன்னு புரியுது இல்ல?” என்று தீவிர முகபாவத்துடன் கேட்டார் ரவீந்தர்.
“ம், அது… வந்து மாமா! பாதி புரியுது…” என்று இழுத்தாள்
(தொடரும்)
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |அத்தியாயம் – 14 | அத்தியாயம் – 15 | அத்தியாயம் – 16 | அத்தியாயம் – 17 | அத்தியாயம் – 18 | அத்தியாயம் – 19 | அத்தியாயம் – 20 |அத்தியாயம் – 21 |