சலவைக்கான இரவு | ராசி அழகப்பன்
இரவைத் துவைத்து
ஈரம் சொட்டாமல்
உலர்த்த வேண்டும்
எப்போதாவது…
சகட்டுமேனிக்கு
கனவுகள் முளைத்து
கண்களை சங்கடத்திலாழ்த்துகிறது
சொற்களில் மகரந்தப்பொடி
எப்படித்தான் ஒட்டிக் கொள்கிறதோ
பராபரமே…
உறங்கா விரல்களின் வழியே
பயணிக்கிறது காட்டுச் சிறுக்கியின்
களவுக் காமம்..
மீன்களெல்லாம் தூண்டில்கள்
தூண்டிலெல்லாம் மீன்கள்
கரைகளற்ற கும்மிருட்டில்
துள்ளிப் பாய்கின்றன..
இரவுக்கு ஒரு லாக்கர்
இருந்தால் கூட
எப்போதும் நல்லது
பகலில் திறக்க
சாவியோடு
வெளிச்சம் ஓட வரும்
என்னவோ
மனதில் பட்டது
இரகசியங்கள் புரளும்
இரவைத் துவைத்து
காயப் போட்டால்
நல்லது என்று..!
குளியல்
அகம் குளிப்பாட்ட
ஒரு குளியலறை
எண்ணங்கனை தூய்மையாக்க
ஒரு மூலிகை சொல்
ஆதிக்குளியலை காணாதிருக்க
சின்ன தாழ்ப்பாள்
மனம்விட்டு விசிலடித்தபடி
சில்குளியல்
அகத்தின் மலர்ச்சிக்கு
புத்தாடைச் சிந்தனை
பயணிக்கும் சொற்களுக்கு
நாகரிக நடைப்பயிற்சி
வெல்லும் சொல் தேடுவதும்
தேவைக்கென மாற்றுவதும்
மாற்றத்தை நாட்டுவதும்
உச்சமென முரசறைக
ஆதாரப்பொருள் வீசி
அலைக்கழித்தால் வளைந்து நிற்க
உறவெல்லாம் தேடிவர
சேமிப்புச் சொல் சேர்க்க பழகிடுக
தினந்தோறும் படிந்துவிடும்
எண்ணப் பழுதையெலாம்
அகற்ற த் தேவை அகம் குளிக்க
ஒரு குளியலறை