வரலாற்றில் இன்று – 07.10.2020 துர்காவதி தேவி

சுதந்திரப் போராட்ட வீராங்கனை துர்காவதி தேவி 1907ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பிறந்தார்.

இந்திய விடுதலைப் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த பகவதி சரண் வோரா என்பவரை திருமணம் செய்து கொண்டு ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக் கட்சியின் செயல்துடிப்பு மிக்க உறுப்பினராக மாறினார்.

இருவரும் தங்களுக்கு கிடைத்த செல்வத்தை விடுதலைப் போராட்ட இயக்கத்திற்கு செலவழித்தனர். லாலா லஜ்பத் ராயின் மரணத்திற்குப் பழி வாங்குவதற்கான திட்டம் தீட்ட கட்சியின் கூட்டம் இவரது தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாப் சிங்கத்தின் மரணத்துக்கு காரணமான காவல்துறை அதிகாரி ஸ்காட்டை கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. முதலில் தானே இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். ஆனால், இறுதியில் பகத் சிங் மற்றும் சுகதேவிடம் இந்தப் பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்திய அக்னி என போற்றப்பட்ட வீராங்கனையான துர்காவதி தேவி 1999ஆம் ஆண்டு மறைந்தார்.

நீல்ஸ் போர்

அணு அமைப்பு பற்றிய ஆராய்ச்சிகளில் முன்னோடியாக திகழ்ந்த நீல்ஸ் ஹென்றிக் டேவிட் போர் 1885ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி டென்மார்க் நாட்டிலுள்ள கோப்பன்ஹேகனில் பிறந்தார்.

இவர் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு எலெக்ட்ரான்கள் அணுக்களின் உட்கருவை சுற்றி வட்டப் பாதையில் சுழலுகின்றன என்பதை கண்டறிந்தவர்.

அணுக்களின் கட்டமைப்புக்கும், குவாண்டம் இயக்கவியலுக்கும் அடிப்படை விதிகளை உருவாக்கியவர். இதற்காக போர் 1922ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசினையும் பெற்றார்.

இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியலறிஞராகவும் சிந்தனையாளராகவும் விளங்கிய நீல்ஸ் போர் 1962ஆம் ஆண்டு மறைந்தார்.

முக்கிய நிகழ்வுகள்

1931ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பாதிரியார் டெஸ்மண்ட் டூட்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார்.

1849ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அமெரிக்க எழுத்தாளர், கவிஞர், தொகுப்பாசிரியர் மற்றும் இலக்கிய விமர்சகரான எட்கர் ஆலன் போ மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!