வரலாற்றில் இன்று – 08.10.2020 இந்திய விமானப்படை தினம்

இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப்படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது.

ஜி.என்.ராமச்சந்திரன்

இருபதாம் நூற்றாண்டின் இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமானவரும், இயற்பியல் விஞ்ஞானியுமான ஜி.என்.ராமச்சந்திரன் 1922ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பிறந்தார்.

1952ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இயற்பியல் துறையின் கீழ் கிரிஸ்டலோகிராஃபி மற்றும் பயோபிசிக்ஸ் என்ற புதிய துறையை நவீன ஆய்வு வசதிகளுடன் சர்வதேசத் தரத்துடன் உருவாக்கினார். இது நாட்டின் தலைசிறந்த ஆய்வுநிலையங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

மூலக்கூறு உயிரி இயற்பியலில் புரதங்களின் கட்டமைப்பு பற்றிய தசைநார் புரதத்தின் மும்மடங்கு எழுச்சுருள் வடிவம் (triple-helical model for structure of collagen) என்ற இவரது கண்டுபிடிப்பு புரதக்கூறுகளின் வடிவமைப்பின் அடிப்படைகளை அறிந்துகொள்ள உதவியது.

இந்திய இயற்பியல் துறையின் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, லண்டன் ராயல் சொசைட்டியின் ஃபெலோ ஆஃப் விருது, கிரிஸ்டலோகிராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவால்டு (Ewald) விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார். அனைவராலும் விரும்பப்படும் மரியாதைக்குரிய விஞ்ஞானியாகத் திகழ்ந்த ஜி.என்.ராமச்சந்திரன் 2001ஆம் ஆண்டு மறைந்தார்.

மில்கா சிங்

இந்திய தடகள விளையாட்டு வீரர் மில்கா சிங் 1935ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் கோவிந்த்புராவில் பிறந்தார்.

1958ஆம் ஆண்டு கார்டிப்பில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 46.16 வினாடிகளில் தூரத்தை கடந்து தங்கப் பதக்கத்தை வென்றவர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் தடகளப் பிரிவில் தங்கம் வென்ற சுதந்திர இந்தியாவின் முதல் வீரர் மில்கா சிங்.

ஒலிம்பிக் தடகளத்தில் 1960ஆம் ஆண்டு ரோமில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும், 1964ஆம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் மில்கா சிங்.

முக்கிய நிகழ்வுகள்

1959ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மறைந்தார்.

1971ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி தமிழக எழுத்தாளர் பா.ராகவன் பிறந்தார்.

1932ஆம் ஆண்டு அக்டோபர் 8ஆம் தேதி இந்திய விமானப்படை நிறுவப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!