கவிஞர் மித்ரா
உண்ணாமலை என்னும் இயற்பெயர் கொண்ட மித்ரா சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் செக்கடிபட்டி என்னும் கிராமத்தில் 3 ஜீலை 1945-ல் பிறந்தார். (பெற்றோர் – வீரமுத்து, சின்னம்மாள்) விவசாயக் குடும்பத்தில் பிறந்த மித்ரா தனது ஆரம்ப கல்வியைச் செக்கடிபட்டியிலும், மேல்நிலைக் கல்வியைப் பேளுரிலும் முடித்தார். புகுமுக வகுப்பைத் தொடர்ந்து இளங்கலைப் பட்டப் படிப்பைச் சேலம் சாரதா கல்லூரிலும், முதுகலைப் பட்டப் படிப்பைச் சென்னை மாநிலக் கல்லூரியிலும் படித்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர்ப் பட்டப் படிப்பை முடித்து, அப்பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார்.
மித்ரா – புனைப்பெயர்
இளம் வயதிலேயே இயற்கை மேல் கொண்ட நாட்டத்தாலும், மனித நேயத்தின் மேல் கொண்ட பற்றாலும் உயிர் இரக்கக் கவிதைகள் புனையத் தொடங்கினார். கவிதா என்னும் புனைப் பெயரில் எழுதத் துவங்கியவர், பிறகு அன்பையும் மனித நேயத்தையும் வெளிப்படுத்தும் வகையில் தன்னுடையப் பெயரை, ‘மித்ரா’ என மாற்றித் தொடர்ந்து மரபுக் கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் எழுதி வருகிறார். இயற்கைச் சார்ந்த அழகியலும் வள்ளலாரின் உயிர்நேயச் சிந்தனையும் மித்ராவை ஹைக்கூ பக்கம் கொண்டு சேர்த்தன. நிரம்ப ஹைக்கூ கவிதைகளைப் புனைத்து, தமிழ் ஹைக்கூ முன்னோடிகளில் ஒருவராகத் தன்னை வளர்த்துக் கொண்டார்.
தமிழில் முதல் முதுமுனைவர் பட்டம் பெற்றவர்
இதனிடையே பேராசிரியப் பணியோடு ஆய்வுப் பணியையும் மேற்கொண்டு முனைவர்ப் பட்டம் பெற்றார். நீண்ட நெடிய பேராசிரியப் பணியில் கவிதைகளோடு ம் கவிஞர்களின் உலகத்தோடு தொடர்ந்து பயணித்த மித்ரா, ஹைக்கூ தளத்தில் ஆய்வுச் செய்து முதுமுனைவர்ப் பட்டம் (D.Litt.) பெற்றார். தமிழில் முதல் முதுமுனைவர்ப் பட்டம் பெற்றவர் என்ற சிறப்பிற்குரியவராகத் திகழ்கிறார்.
கல்விப் பணி
பேராசிரியப் பணியில் படைப்பிலக்கிய வகுப்புகளைத் திறம்பட நடத்தி பல மாணவர்களைப் படைப்பாளர்களாக உருவாக்கியுள்ளார். ஆண்டுதோறும் மாணவர்கள் கவிதைகளையும், கட்டுரைகளையும், சிறுகதைகளையும் நூலாக்கம் செய்து பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிட்டு வந்தார். தமது நெறியாளுகையின் கீழ் 30-க்கும் மேற்பட்டோர் இளமுனைவர் பட்டங்களையும், 15-க்கும் மேற்பட்டோர் முனைவர்ப் பட்டங்களையும் பெற்றுள்ளனர். வள்ளலார் குறித்த சொற்பொழிவுகளைத் தமிழகத்தின் பல ஊர்களில் நிகழ்த்தியதோடு, வானொலிகளிலும் உரையாற்றியிருக்கிறார். மேலும், கவிதைகள் குறித்த கருத்தரங்களிலும், கவியரங்குகளிலும், கவிஞர்கள் சந்திப்புக் கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டு தம் படைப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளார். தொலைக்காட்சி கவியரங்கங்களில் பங்கெடுத்துக் கவிதைப் பாடியுள்ளார்.
இலக்கியப் படைப்புகள்
பேராசிரியப் பணியோடு கவியுலகில் தனக்கெனத் தனித் தடம் பதித்ததோடு, தமிழ் ஹைக்கூ வரலாற்றில் முன்னோடியாகவும் கருதப்படும் மித்ரா, ‘சித்திரை வெயில், தாகம் தீரா வானம்பாடிகள், நிரந்தர நிழல்கள், ஹைக்கூ கவிதைகள், குடையில் கேட்ட பேச்சு, ஹைக்கூ என் தோழி, காற்றின் சிறகுகள், மௌனம் சுமக்கும் வானம்’ உள்ளிட்ட முப்பத்து மூன்று (33) கவிதை நூல்களையும், கவிதைகள் குறித்த 6 ஆய்வு நூல்களைப் படைத்துள்ளார். கண்ணதாசன், பாரதிதாசன் குறித்த 2 ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். மேலும், ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளையும் மொழிபெயர்த்து நூலாக்கம் செய்துள்ளார்.
பிற மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட மித்ரா கவிதைகள்
மித்ராவின் ஹைக்கூ கவிதைகளைப் பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். இவரின் 2000 கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தியில் 1000 கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும், 2000 கவிதைகள் மொழிபெயர்த்து அச்சில் உள்ளன. இவர் கவிதைகள் குறித்து 10-க்கு மேற்பட்ட இளமுனைவர்ப் பட்ட மாணவர்களும், முனைவர்ப் பட்ட மாணவர்களும் ஆராய்ந்துள்ளனர். தமிழகப் பல்கலைக்கழகங்கள் இவரின் கவிதைகளைப் பாடத் திட்டத்தில் வைத்துள்ளன. தற்பொழுது +1 பாடத்திட்டத்தில் இவரின் ஹைக்கூ கவிதை இடம்பெற்றுள்ளது.
விருதுகள்
இவரது படைப்புகளை ஆய்ந்த அமெரிக்கா 2000-ஆம் ஆண்டில் சிறந்த பெண்மணிக்கான விருதை வழங்கியது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெற்றிப் பெண்மணி என்னும் விருதை அளித்துள்ளது. 2005-ஆம் ஆண்டு இந்தோ இன்டர்நேஷனல் ஃப்ரன்சிப் அமைப்பின், ‘ பாரத் ஜோதி விருதை ஹைத்திரபாத்தில் பெற்றார். சென்னைப் படைப்பாளர்கள் தமிழ்ச் சங்கம், ‘மதிப்புரு படைப்பாளி’ என்னும் விருதை வழங்கியுள்ளது. நெய்வேலி புத்தக கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருதையும், நாமக்கல் கண்டர் கல்லூரி கவிதாயினி விருதையும், நாமக்கல் விவேகானந்தர் கல்லூரி கவியரசி விருதையும் அளித்துள்ளன.
மித்ரா பிறந்தநாள் விருதுகள்
மித்ரா அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக 2000-ஆண்டு முதல் கவிஞர் தாமரைப் பாண்டியனும் கவிஞர் கணேசனும், சிறந்த கவிஞர் ஒருவருக்கு, ‘மித்ரா’ என்னும் விருது வழங்கி வருவதோடு, அன்றைய தினம் மரக்கன்றுகள் நடு விழாவையும் நடத்தி வருகின்றனர். கன்னிக்கோயில் ராஜா மற்றும் செல்லம் பாலா ஆகியோர் 2014-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 10 ஹைக்கூ கவிஞர்களுக்குப் பாராட்டு மடலோடு பொற்கிழியும் அளித்து வருகின்றனர்.
படைப்பிலக்கிய ஆய்வு இருக்கையில் மித்ரா
இன்றும் மித்ரா அவர்கள் தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைத் தொடர்ப்பான ஆய்வுப் பணிகளிலும் ஈடுபடும் நோக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையில் படைப்பாக்க இருக்கையை உருவாக்கி ஆராச்சிப் பணி மேற்கொண்டு வருகிறார். தமது ஹைக்கூ கவிதைகளின் 6000 கவிதைத் தொகுப்பைக் கொண்டு வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
நன்றி : விக்கிப்பீடியா