விஜய்க்கு அப்பாவாலாம் நடிக்க முடியாது: மைக் மோகன் கறார்
தளபதி 65 படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிக்குமாறு கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டாராம் மோகன்.
80களில் கோலிவிட்டின் மிகவும் பிசியான மற்றும் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் மோகன். அவர் நடித்த படங்களில் மைக்கும், கையுமாக இருந்ததால் அவரை ரசிகர்கள் மைக் மோகன் என்று அழைக்கிறார்கள். மோகன் படங்களில் வந்த பாடல்களில் பெரும்பாலானவை சூப்பர் ஹிட். அவருக்கு அப்படி ஒரு ராசி. அவர் காலத்தில் ஹீரோவாக நடித்தவர்கள், ஹீரோயினாக நடித்தவர்கள் எல்லாம் தற்போது அப்பா, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோகனை தேடி பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. ஹீரோ அல்லது ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்குமாறு மோகனிடம் கேட்கிறார்கள். ஆனால் அவர் அப்பாவாக நடிக்க மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். எனக்கென்ன அப்படி பெருசா வயதாகிவிட்டது, நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று மோகன் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் அவருக்கு அப்பாவாக நடிக்க மோகனிடம் கேட்டார்களாம். அதற்கு அவரோ, விஜய்க்கு அப்பாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு ஒன்றும் வயதாகிவிடவில்லை, வேறு ஆளை பாருங்கள் என்று கோபமாக கூறிவிட்டாராம்.
முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா, அஞ்சலி உள்ளிட்டோர் நடித்த இறைவி படத்தில் வில்லனாக நடிக்க மோகனிடம் கேட்டதற்கு மறுத்துவிட்டார். நீங்கள் இன்னும் இளமையாக, பார்க்க ஹீரோ மாதிரி தான் இருக்கிறீர்கள். அதனால் அப்பாவாக அல்ல மாறாக ஹீரோவாக தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்று அவரை சிலர் தூண்டிவிடுவதாக கூறப்படுகிறது.
மோகன் மட்டும் அடம்பிடிக்காமல் அப்பா கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொண்டால் அடுத்த ரவுண்டு பிசியாகிவிடுவார் என்பதில் சந்தேகமே இல்லை. விஜய் படத்தில் ஒரு காட்சியிலாவது வந்துவிட மாட்டோமா என்று எத்தனையோ நடிகர்கள், நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தானாக தேடி வந்த வாய்ப்பை மோகன் ஏற்க மறுத்துவிட்டார்.
தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் என்று கூறப்படுகிறது. காஜல் அகர்வால் மற்றும் பூஜா ஹெக்டேவிடம் முருகதாஸ் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. இருப்பினும் இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையே தளபதி 65 படத்தில் ரஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியானது.
கொரோனா வைரஸ் பிரச்சனையால் திரையுலகம் முடங்கிப் போயிருப்பதால் தயாரிப்பாளகள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தளபதி 65 படத்திற்கான தனது சம்பளத்தில் விஜய் ரூ. 20 கோடியை குறைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸோ இது போதாது மேலும் குறைத்துக் கொள்ளுங்கள் என்று விஜய்யிடம் தெரிவித்துள்ளதாம். மேலும் தளபதி 65 படத்தின் பட்ஜெட்டும் குறைக்கப்பட்டுள்ளதாம்.
தளபதி 65 படத்தில் நடிக்க விஜய்க்கு ரூ. 100 கோடி சம்பளம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் தான் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு சன் பிக்சர்ஸ் விஜய்யிடம் கூறியுள்ளதாம்.