உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 12 – சுதா ரவி

 உனை நீங்கியே உயிர் கரைகிறேனே – 12 – சுதா ரவி

அவன் கேட்ட கேள்விக்கு தலையை உலுக்கிக் கொண்டு…….” இது தான் நிதர்சனம்னு தெரிஞ்சு போச்சு.இதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.என்ன இனி என் நோக்கம் எல்லாம் உயிருக்கு சேதாரம் இல்லாம மீட்டெடுக்கணும் அது மட்டும் தான்.”

“அதுக்கு பிறகு…யோசிச்சியா? என்ன செய்யப் போற?”“அதை பத்தி நான் இப்போ நினைக்கல.எனக்கு இப்போ வேண்டியது எல்லாம் நான் இறங்கப் போகிற வேலையில் எந்த வித தடங்களும் இல்லாம எல்லாம் நல்லபடியா முடியனும்.அது மட்டும் தான் என் எண்ணமா இருக்கு”என்று கலக்கத்துடன் கூறினான் கார்த்தி.

“ கண்டிப்பா நாங்க எல்லோரும் உன் கூடவே இருக்கிறோம்.இனி என்ன செய்ய வேண்டும்ன்னு பிளான் செஞ்சிடுவோம்…….கையில் ஆதாரம் வந்தாச்சு இனி நேரடி மோதல் தான்”என்று ஆத்திரமாக கூறினான் ஆதி.

“இல்ல ஆதி……..ரெண்டு குரூப்பும் நேரடியா சந்திக்க ஏற்பாடுகள் நடக்குது…..அதில் பிரச்சினை வரும் அதுவரை நாம வெயிட் பண்ணுவோம்.”

“ஆனா…….இதை பார்த்தா….என்று மேலே தொடர்ந்தவனை இடைமறித்த கார்த்தி……அதை நான் பார்த்துக்கிறேன் ஆதி” என்றான் கார்த்தி.

“கஷ்டமா இருக்கா கார்த்தி.வலிக்குமே எப்படி உன்னால தாங்க முடியுது….”

அவன் கேட்ட கேள்விக்கு சுவற்றில் சாய்ந்தவண்ணம் நின்று கொண்டு நெஞ்சில் கை வைத்தபடி”இந்த வலி நாலு வருஷமாவே இருக்கு…… கத்தியால கீறின இடத்தில் இப்போ உப்பை கொட்டின மாதிரி எரியுது.ஆனா அதிலே ஒரு சந்தோஷம் என் வலிக்கான மருந்து என் முன்னே இருக்கு அதை எப்படியும் கண்டெடுக்கணும்”

தாண்டவத்தின் வீட்டில் கதிருக்கு பெண் பார்க்கும் சம்பவத்திற்கு பிறகு நடந்தவைகள் யாவும் அசம்பாவிதமாகவே இருக்கவே வீட்டில் இருந்த

அனைவரும் சாதரணமாக நடமாடிக் கொண்டிருந்தாலும் அனைவரும் மனதில் ஆயிரம் கவலைகளை சுமந்து கொண்டிருந்தது.

தங்களின் மிகப் பெரிய வியாபாரம் கை நழுவி போனதை தாங்க முடியாமல் தாண்டவமும் இரு மகன்களும் சோகத்திலும் ஆத்திரத்திலும் இருக்க இதை எதை பற்றியும் கவலை கொள்ளாது தாயின் உடல்நிலையை பற்றி மட்டுமே நினைத்து ஈஸ்வரியுடனே இருந்தான் கதிர்.

கந்தவேலும், குமாரவேலும் எப்படியாவது ஆர்ஜேவை சந்தித்து விட வேண்டும் என்று அவனின் ஆட்களிடம் பேச்சு வார்த்தை நடத்த ஆரம்பித்து இருந்தார்கள். தாண்டவமோ மனக் கொதிப்பில் இருந்தார் ஒரு சின்ன பையன் தன் தொழிலை ஆட்டம் காண செய்வதா? கண்டிப்பாக அவனை சந்தித்தே ஆக வேண்டும் என்ற வலுவான எண்ணத்தில் இருந்தார்.

இவர்களின் விருப்பத்துக்கு சம்மதிக்க ஆர்ஜே மறுத்து விட தாண்டவம் மகன்களிடம் குதித்துக் கொண்டிருந்தார்.” என்னடா இது அவனை சம்மதிக்க வைக்க கூட முடியல……நீங்க எல்லாம் என் கிட்ட தொழில் எப்படி கத்துகிட்டீங்க?”

அதற்கு குமாரவேல்..” இல்லப்பா நாங்க அவன் ஆட்கள் கிட்டே எவ்வளவோ வழியிலே முயற்சி பண்ணிட்டோம் ஆனா அவன் சம்மதிக்க மாட்டேன்றான்.”

அந்த நேரம் அங்கு வந்து அமர்ந்த கதிர் எதை பற்றிய விவாதம் என்று புரியாமல் அவர்களை பார்த்துக் கொண்டு அமர்ந்தான். அப்போது தாண்டவம் “அவனுக்கு ஏதாவது குடும்பம், குட்டி இல்ல பெண் தொடர்பு இருந்தா பார்த்தது தூக்குங்க தானா வழிக்கு வருவான்” என்றார்.

“இல்லப்பா அவன் வெறும் மொட்டை பயல் அவனுக்கு குடும்பம் எல்லாம் இல்ல…..பெண் தொடர்பும் இருக்கிற மாதிரி தெரியலப்பா” என்றான் கந்தவேல்.

அவன் சொன்னவுடன் ஓங்கி மேஜையை கைகளால் குத்தி…….”அதை சொல்லு அது தான் அவன் தைரியமா இறங்கி அடிக்கிறான்….நீங்க எல்லாம் எவ பின்னாடியாவது போறதுக்கு தாண்டா லாயக்கு”என்றார் ஆங்காரத்துடன்.

அதுவரை அமைதியாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கதிர்” என்னப்பா பிரச்சினை யார் கிட்ட பேசணும்.நான் வேணா போய் பேசவா” என்றான்.

அவன் சொன்னதும் ஏற்கனவே தொழில் பற்றிய பதட்டத்தில் இருந்தவர் கதிரின் கேள்வியில் எரிச்சலாகி” வா ராசா வா.எப்படி நீ போய் பேசப்போறியா? என்ன பேச போற அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு வந்தியே அது மாதிரியா?” என்று கேலியும் கோபமும் இழையோடிய குரலில் கேட்டார்.

அவரின் கேலியில் முகம் சுருங்க” நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி போய் பேசுறேன் பா” என்றான்.

அவனருகில் வந்த குமாரவேல் அவன் தோளை பற்றி…”அதெல்லாம் வேண்டாம் நீ போ…….இது நீ நினைக்கிற மாதிரி விஷயம் இல்லை.உன்னால முடியாது.அண்ணிங்க ரெண்டு பேரும் கடைக்கு போகணும்ன்னு சொல்லிட்டு இருந்தாங்க….அவங்களை கூட்டிட்டு போயிட்டு வா” என்றான்.

அதை கேட்டுக் கொண்டு நின்றிருந்த தாண்டவமும், கந்தவேலும் சத்தம் போட்டு சிரித்து விட்டு” அவனுக்கு சரியான வேலை தான் கொடுக்கிறே குமரா…….பொம்பளைங்க கூட கடை கன்னிக்கு போயிட்டு வரது தான் அவனுக்கு சரி” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்கத் தொடங்கினார்.

அவர்களின் பேச்சிலும் சிரிப்பிலும் மனம் நொந்து போய் தன்னறைக்கு சென்று விட்டான். அவன் போனதும் தாண்டவமும், மற்றவர்களும் விட்ட விவாதத்தை தொடர்ந்து கொண்டிருந்தனர். வரவேற்பரையில் பேரனை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த ஈஸ்வரி மருமகளுக்கு இரவு உணவிற்கான மெனுவை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது பெருத்த சத்தத்துடன் எதுவோ விழ,அதிர்ந்து போய் என்னவென்று அங்கும் இங்கும் பார்த்தனர்.

ஆபீஸ் அறையில் பேசிக் கொண்டிருந்த தாண்டவமும், மகன்களும் வரவேற்பறைக்கு ஓடி வந்து என்னவென்று விசாரிக்க அங்கு எதுவும் விழவில்லை என்றறிந்ததும் பின் எங்கே என்று தேட ஆரம்பித்தனர்.

அப்போது கந்தவேலின் மனைவி கதிரின் அறையில் தான் சத்தம் வந்தது என்று சொன்னாள்.

அதை கேட்டு கந்தனும் குமரனும் பாய்ந்து படி ஏறிச் சென்று கதிரின் அறைக் கதவை தட்டினர். தட்டியவுடன் கதவை திறக்காமல் வெகு நேரம் தட்டிய பிறகே மெல்ல கதவை திறந்து கொண்டு வெளியில் வந்தான். அவன் வெளியில் வந்ததும் அவனுக்கு எதுவும் அடிப்பட்டு இருக்கிறதா என்று ஆராய்ந்து விட்டு அவனை தள்ளிக் கொண்டு அறைக்குள் நுழைந்தனர். அங்கே தொலைக்காட்சிப் பெட்டி கீழே விழுந்து நொறுங்கி இருந்தது. அதை பார்த்த கந்தவேல்” என்னடா இது ? எப்படி கீழே விழுந்துது?” என்றான்.

அவர்களை பார்த்து பேசாமல் எங்கோ பார்த்துக் கொண்டே” அதுவா சரியா பிக்ஸ் பண்ணலை போல இருக்கு அது தான் விழுந்து உடைஞ்சிருச்சு” என்றான்.

அவனை சந்தேகத்துடன் பார்த்துக் கொண்டே” உண்மையை சொல்லு நாங்க கேலி பண்ணினதுல கோவத்துல போட்டு உடைச்சியா?” என்று கேட்டான் குமாரவேல்.

அதற்கு அவன் பதில் சொல்லும் முன்பே” டேய் அவனை போய் இப்படி கேட்கிற……..நீயும் நானும் வேணா அதை செய்வோம்…….தானா தான் விழுந்து இருக்கும் வாடா” என்றான் கந்தன்.

குமாராவேலுவிற்கு மனதில் எதுவோ சரியில்லை என்பது மட்டும் புரிந்தது. தம்பியின் முகத்தில் எந்த உணர்வுகளும் தெரியவில்லை என்றாலும் அவனிடத்தில் சொல்ல முடியாத மாற்றம் இருப்பது போல் தோன்றியது.

அறையை விட்டு வெளியே வந்து படியில் இறங்கும் போத.”கந்தா, கதிர் முன்னே மாதிரி இல்லையோன்னு தோணுதுடா.முன்னே எல்லாம் நாம அவனை நக்கல் பண்ணும் போது அவன் முகத்தில் ஒரு வருத்தம் தெரியும் ஆனா இப்போ ரொம்ப இறுக்கமா இருக்கிற மாதிரி இருக்குடா.”

அவனை திரும்பி பார்த்த கந்தன்” நீயா எதையோ நினைக்கிற குமரா.அவன் எப்பவுமே அப்படி தானே இருப்பான்.அம்மா கிட்ட மட்டும் தானே பேசுவான்.தேவை இல்லாம ஒன்னுக்கொன்னு சம்பந்தபடுத்தி கற்பனையை வளர்த்துக்காதே”என்றான் சமாதானப்படுத்தும் விதமாக.

கந்தன் சமாதானப்படுத்தினாலும் குமரனின் மனதில் தம்பியை பற்றிய சந்தேக விதை விழுந்தது.

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 |அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...