நீயெனதின்னுயிர் – 13 – ஷெண்பா
“வைஷாலி! ஈவ்னிங் என் ஃப்ரெண்ட் மம்தா வீட்டு விசேஷத்துக்குப் போகணும். நாலு மணிக் கெல்லாம் தயாராகிடு, அப்பா வந்ததும் கிளம்பணும். லேட் பண்ணிடாதே” என்றார் தேவிகா.
லேப்டாப்பிலிருந்து கண்களை அகற்றாமல், “நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க. நான் வரலை…” என்றாள்.
“முதல்ல, நேரா நிமிர்ந்து பார்த்துப் பேசு. எப்பப் பாரு அந்த லேப்டாப்புக்குள்ளயே தலையை விட்டுட்டு… என்ன தான் செய்வியோ!” என்றபடி தேவிகா அவளை நோக்கி வர, டைப் செய்துகொண்டிருந்த மெயிலை வேகமாக மூடினாள்.
“இப்போ என்னதாம்மா உங்க பிராப்ளம்?” -சலிப்புடன் கேட்டாள்.
“நீ தானே, வந்து பத்து நாள் ஆகுது… என்னை எங்கேயும் வெளியே அனுப்பமாட்டேன்றேன்னு புலம்பிட்டு இருக்க?”
“புது ஊர்… தனியா போகக் கூடாதுன்னு சொல் லிட்டீங்க. அதுக்காக, உங்க கூட விசேஷத்துக் கெல்லாம் என்னால் வரமுடியாது.”
“அதே மாதிரி, உன்னை வீட்டில் தனியா விட்டுட்டும் போக முடியாது. கிளம்பற வழியைப் பார். அன்னைக்கு இன்வைட் பண்ண வந்தவங்க, உன்னிடமும் சொல்லிட்டுத் தானே போனாங்க…?” என்று மகளுக்கு நினைவுபடுத்தினார்.
ஆனால், அவள் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் அதனால் தான் என்று அவருக்குப் புரியவில்லை. நினைவுபடுத்துவதாக நினைத்து, அவளது எரிச்சலை அதிகமாக்கிவிட்டார்.
நான்கு நாட்களுக்கு முன்பு தேவிகாவின் தோழி, தன் மகளுடைய நிச்சயதார்த்த விழாவிற்கு அழைக்க குடும்பத்துடன் வந்திருந்தார். உடன் வந்த அவரது மகன், தன் பெயர் அக்ஷய் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
முதலில் சாதாரணமாக பேசிக்கொண்டிருந்தவளுக்கு, ஒரு கட்டத்திற்கு மேல் அவனது வழிசலை தாங்க முடியவில்லை. ‘நடுவில் எழுந்து சென்றால் மரியாதை யாக இருக்காதே’ என நினைத்தவள், கடனேயென்று அமர்ந்திருந்தாள். ஜோக் என்ற பேரில், அவன் சொன்ன காலணாவுக்குப் பெறாத அறுவைகளைத் தாங்கிக் கொண்டு ஒப்புக்காகச் சிரித்தவளுக்கு, ‘இவர்கள் எப்போது கிளம்புவார்கள்?’ என்றிருந்தது.
கிளம்பும் போதும், “கண்டிப்பாக ஃபங்ஷனுக்கு வந்திடணும்… நான் எதிர்பார்த்திட்டு இருப்பேன்!” என்று வேறு அவளிடம் சொல்லிவிட்டே சென்றான் அவன்.
அப்போதே தான் அந்த விழாவிற்குச் செல்லப் போவ தில்லையென்று முடிவு செய்து விட்டாள். இப்போது அன்னையின் வற்புறுத்தலால் கடுப்பானவள், ‘என்ன சொல்லி இதைத் தவிர்ப்பது?’ என்று புரியாமல் திணறினாள்.
“என் ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும், உன்னைப் பார்க்கணுமாம். கட்டாயம் கூட்டிட்டு வான்னு சொல்லியிருக்காங்க…”
“என்னைப் பார்க்கணும்னா, அவங்களை நம்ம வீட்டுக்கு வரச் சொல்லுங்க. என்னை ஷோகேஸ் பொம்மை மாதிரி நிறுத்தி, எல்லோருக்கும் காட்டப் போறீங்களா?” என்று வைஷாலி அலற, தேவிகா நிதானமாக அவளைப் பார்த்தார்.
அவரது பார்வையைக் கண்டதும், எப்போதுமே… அம்மா இத்தனை நிதானமாக இருந்தால், அடுத்து தனக்குப் பெரிய மண்டகப்படி காத்திருக்கிறது என்று தானே அர்த்தம்? என்று வைஷாலியின் மூளையில் அபாய மணி அடித்தது.
மெல்ல அவளது முகம் இளக, “ப்ளீஸ்ம்மா! அங்கே நீங்க உங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு இருப்பீங்க… அப்பா, அவங்க ஃப்ரெண்ட்ஸ்கூட பேசிட்டு இருப்பாங்க, நடுவில் நான் வந்து எல்லார் முகத்தையும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கணும். சுத்தப் போர்-ம்மா!” என்று வார்த்தைகள் குழைந்து வர ஆரம்பித்தது.
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லை… நீ கிளம்பு” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, வீட்டினுள் நுழைந்தார் சங்கரன்.
“இதோ உன் அப்பாவே வந்தாச்சு. உன்னோட கதையை அவர்கிட்ட சொல்லு” என்றவர் சமைய லறைக்குச் சென்றார்.
“என்னடா, வழக்கம் போல உங்க ரெண்டு பேருக்கும் ஆர்கியூமென்ட்டா?” என்றவர், அவளருகில் அமர்ந்தார்.
விஷயத்தைச் சொன்னவள், “நீங்க சொல்லுங்கப்பா… அம்மா சொன்னா கேட்க மாட்டேன்றாங்க” என்று சிணுங்கினாள்.
“அவங்க அத்தனைத் தூரம் வந்து அழைச்சிட்டு போயிருக்காங்க. நீ இங்கேயே இருந்து வராமலிருந்தால் நல்லா இருக்காதுடா. நாம சீக்கிரமே திரும்பி வந்திடலாம். சரியா…” என்று மெதுவாக மகளுக்கு எடுத்துச் சொல்ல, அரைமனத்துடன் சரி என்றபடி எழுந்து சென்றாள்.
கையில் காஃபியுடன் வந்த தேவிகா, “இத்தனை நேரம் என் தொண்டைத் தண்ணி வத்தற அளவுக்குச் சொல்லியும் கேட்கல. அப்பா வந்து ஒரு வார்த்தை சொன்னதும், மண்டையை ஆட்டிக்கிட்டு கிளம்பறதைப் பாரு!” என்று தன் சொல்லைக் கேட்காத ஆதங்கத்தில் புலம்பிய மனைவியை, புன்னகையுடன் பார்த்தார் சங்கரன்.
தேவிகா, பிறக்கும் போதே சீமான் வீட்டு வாரிசு. அவர் தனக்கு இது வேண்டுமென்று கேட்கும் முன்பே, அனைத்தும் அவரைத் தேடி வரும். அன்பைக்கூட அவருக்கு அதிகாரமாகத் தான் வெளிப்படுத்தத் தெரியும்.
சங்கரனுக்கு எல்லாவற்றையும் யோசித்து, நிதான மாகச் செய்யும் குணம். பெரிதாகச் சொல்லிக் கொள்ளும் படி எந்தப் பின்ணணியும் இல்லாத, சாதாரணக் குடும்பத்திலிருந்து, மிகவும் சிரமப்பட்டு படிப்படியாக முன்னேறி வந்தவர்.
தேவிகாவின் தந்தை, தனது நண்பரின் அலுவலகத்திற்குச் சென்ற இடத்தில், சங்கரனைக் கவனித்துவிட்டு, தனது மகளுக்கு ஏற்ற கணவன் அவரே என்று முடிவு செய்துவிட்டார். இரு குடும்பத்திலும் பேசி, ஏற்றத்தாழ்வுகளைச் சமாளித்து, அனைவரின் சம்மதத்துடன் சங்கரனை மருமகனாக்கிக் கொண்டார்.
திருமணம் முடிந்து குழந்தை பிறந்த பிறகு, சங்கரனின் வேலை காரணமாக தேவிகா வட இந்தியாவிற்கு வந்துவிட்டார். மாமனார் – மாமியார் இருவரும் கிராமத்திலேயே இருந்து விட்டதால், தேவிகாவிற்கு அவர்களிடம் பெரிதாக எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை.
இயல்பாகவே விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்ட சங்கரனின் பெற்றோர், மருமகளால் தலை தூக்கும் சிறு பிரச்சனைகளைக் கூட, ஒன்று மில்லாமல் நசுக்கிவிட்டனர்.
சங்கரன் – தேவிகா இருவருக்குமே மகள் என்றால் உயிர். அதிகாரமாக அன்பைக் காட்டும் அன்னையைவிட, கனிவான பார்வையாலேயே பாசத்தைப் பொழியும் தந்தையிடம், சுலபமாக ஒன்றிப் போனாள் வைஷாலி.
சங்கரன் காஃபியைக் குடித்து முடிக்கவும், வைஷாலி தயாராகி வரவும் சரியாக இருந்தது. ரோஜா வண்ணப் பட்டுச் சுடிதாரில் ஆயத்தமாகி வந்தவளைக் கண்களில் நிறைத்துக் கொண்டனர் பெற்றோர். ‘என் மகள் எத்தனை அழகு!’ என்று பெருமிதத்துடன் பார்த்த அந்தத் தாயின் முகம், அதைக் கண்ணாடியாகப் பிரதிபலித்தது.
“இப்படி அழகா கிளம்பி வர்றதை விட்டுட்டு, இத்தனை அமர்க்களம்…!” என்றபடியே, தொடுத்து வைத்திருந்த மல்லிகைச் சரத்தை, மகளின் கூந்தலில் தவழவிட்டார் தேவிகா.
விழாவிற்குச் சென்ற வைஷாலி, ‘தன் அன்னைக்கு இத்தனைத் தோழிகளா!’ என்று வியந்து போனாள். ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்த அவர்களது கால்களைத் தொட்டு வணங்கியும் ஆசியைப் பெற்றுக் கொண்டாள்.
மகளையும் உடன் அழைத்துச் சென்று, மணப் பெண்ணை அவளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார் தேவிகா. பெண்கள் இருவரும் மெல்லிய முறுவலுடன் அமைதியாக இருந்தனர். எங்கும் இளமைப் பட்டாளமாக இருந்தது. அவள் கலகலப்பான சுபாவமாக இருந்த போதும், அங்கிருந்த ஆரவாரம் அவளுக்கு அதிகப்படியாகத் தோன்றியது.
ஏனோ அவ்விடத்தில் ஒன்றமுடியாமல் திக்கு முக்காடிக் கொண்டிருந்தாள். அதுவரை அவளை அங்கு பார்க்காத மணப்பெண்ணின் அண்ணன் அக்ஷய், வைஷாலியை நோக்கி வேகமாக வந்தான்.
“ஹாய் வைஷாலி! நீ கட்டாயம் வருவேன்னு எனக்குத் தெரியும்” என்று அளவுக்கு அதிகமாகச் சிரித்தவனுக்கு, எரிச்சலை அடக்கிக்கொண்டு சிரமப்பட்டு புன்னகையை உதிர்த்தாள்.
“ஏதாவது சாப்டியா?” என்றவன், குளிர்பானத்தை வரவழைத்துக் கொடுத்தான்.
“சாரி, நான் கூல்டிரிங்க்ஸ் குடிக்கமாட்டேன்…” என்றாள்.
“ஓ!” என்றான். அவனால் உடனே அங்கிருந்து அகலமுடியாது. அவனது நண்பர்கள் தூரத்திலிருந்து இவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“இந்த டிரெஸ் உனக்கு ரொம்ப நல்லாயிருக்கு” என்றான்.
அவன் கண்களை நேராகப் பார்த்தவள், “அப்படியா? தேங்க்ஸ்!” என்றதும் அவனுக்கு ஏமாற்றமாகப் போயிற்று.
‘குழைவாள், வெட்கப்படுவாள் அதை வைத்து மேற்கொண்டு பேசி, நண்பர்கள் மத்தியில் கொஞ்சம் பில்டப் கொடுத்துக்கொள்ளலாம்’ என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அவளது பதில் எரிச்சலைக் கிளப்பியது.
அவளது கண்கள் பெற்றோரைத் தேடியது. தொலைவில் அவர்கள் யாருடனோ பேசிக் கொண்டிருப்பது தெரிய, வேறு வழியில்லாமல் அமர்ந்திருந்தாள்.
சிறிதுநேரம் அவளிடம் ஏதேதோ கதையளந்தான். “ம்” என்ற வார்த்தையைத் தவிர, அவளிடமிருந்து பெரிதாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லை.
அதேநேரம் மாப்பிள்ளை வீட்டார் வந்துவிட, “எக்ஸ்கியூஸ் மீ!” என்றவன் அங்கிருந்து அகல, நிதானமாக மூச்சை வெளியேற்றினாள்.
சடங்கு, சம்பிரதாயம் முடிய, கிண்டல் கேலி என்று அங்கே கலகலப்பு கூடியது. அந்த ஆரவாரத்திலிருந்து நகர்ந்து விழாப் பந்தலின் மறுபக்கத்திற்கு வந்தாள் அவள்.
தோட்டத்துப் பூக்களைக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருந்தவளுக்கு, “ஒரு பூவே… பூக்களை ரசிக்கிறது… ஆச்சரியமா இருக்கே!” என்ற பரிச்சயமான குரல் அவளுக்குப் பின்னாலிருந்து கேட்டதில், சடாரெனத் திரும்பிப் பார்த்தாள்.
அங்கே சிரிப்புடன் நின்றிருந்தவனைப் பார்த்ததும், “விக்ரம்!” என்று கண்கள் மின்ன, ஆச்சரியத்துடன் அவனது பெயரை உச்சரித்தாள்.
கண்களை மூடி மெல்லத் தலையசைத்தபின், “அட! இது நல்லாயிருக்கே!” என்று அழகாகப் புன்னகைத்தவன், தனது பெயரை அவள் உச்சரித்ததைச் சுட்டிக் காட்டினான்.
அப்போது அவளிருந்த நிலையில், அதையெல்லாம் கவனிக்கும் மனநிலை இல்லை. சற்று முன்பு வரை இறுக்கமாகத் தெரிந்த சூழ்நிலை, இப்போது அதற்கு நேர்மாறாகத் தெரிந்தது.
“வாட் எ சர்ப்ரைஸ்…! நீங்க எப்படி இங்கே?” என்று ஆச்சரியத்துடன் வினவினாள்.
“மாப்பிள்ளை என்னோட ஃப்ரெண்ட்.”
“ஓ! ரொம்ப ஆத்மார்த்தமான நட்போ…? அவருக்காக இத்தனைத் தூரம் வந்திருக்கீங்க…” என்று அவள் கேட்கவும் நகைத்தான்.
“இப்போ என்ன கேட்டுட்டேன்னு இந்தச் சிரிப்பு?” என்று புரியாமல் கேட்டாள்.
“உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா…! என் அப்பா, அம்மா இதே ரத்னகிரியில் தான் இருக்காங்க…” என்றான்.
“என்னது!” என்று திகைத்தவள், “நீங்க ஏன் என்னிடம் இத்தனை நாளா இதைச் சொல்லவேயில்ல?” என்று உரிமையாக அவனிடம் கோபித்துக் கொண்டாள்.
“சொல்லக்கூடாதுன்னு இல்லை… உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாமேன்னு சொல்லலை” என்றான்.
“ம், சீமாக்காகூட என்னிடம் சொல்லலை…” என்று உதட்டைச் சுழித்து, தலைசாய்த்து, விழிகளைச் சுழற்றி இமைகளை மூட, விக்ரம் அந்தக் கண்களுக்குள் சிறை பட்டுக் கொண்டான்.
“சரி, உங்க ட்ரிப் எப்படி இருந்தது?” என்று அவனது வெளிநாட்டுப் பயணத்தைப் பற்றி விசாரித்தாள்.
இருவருக்கிடையிலான சுவாரசியமான பேச்சால், நேரம் கடந்ததே தெரியவில்லை அவர்களுக்கு.
அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |அத்தியாயம் – 13 |