விலகாத வெள்ளித் திரை – 5 | லதா சரவணன்
பராசக்தி படம் கண்ணனுக்குள் நிறைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. எல்லாரையும் எளிதாய் ஆட்கொள்ளும் சினிமா கனவுகள் அவனை மட்டும் விட்டு வைக்குமா என்ன ? வெறும் கனவுகள் மட்டுமே கண்டு என்ன பயன் அதை செயல்படுத்தும் ஆற்றல் இருக்க வேண்டுமே ? அதைக் காட்டிலும் ஆள்பலம், ஏழு வயது பையனாய் கொட்டகைக்கு வந்து சேர்ந்த கண்ணனில்லை இப்போது 20 வயது கட்டுமஸ்தான உடல் கருகருவென மீசையும், தலைகொள்ளா சிகையும் என வெகு அழகாகவே இருந்தான்.
குடும்பத்தை, தான் மேற்கொண்ட சிறு தொழிலை நடத்தும் விதமும் கை கூடி வந்திருந்ததில் முதலியார் வலதுகரமாக மாறும் அளவிற்கு அவன் உயர்ந்திருந்தான் அந்த சிற்றூரில் ! சொந்த வீட்டை ஒத்திக்கு மாற்றிவிட்டு கொட்டகைக்கு அருகிலேயே ஒரு கல்வீடும் முன்பக்கம் கொஞ்சம் இடமும் போட்டுத் தந்ததும் அங்கே ஒரு கிளப்புகடை ஆரம்பித்தார்கள் அம்மாவும் மகனும், சந்தைக்கு அருகில், அதைவிடவும் கொட்டகை, கைப்பக்குவம் என தங்கைக்கு ஒரு நாலு நகை நட்டு சேர்க்கும் அளவிற்கு உயர்ந்தாலும் முதலியாரின் கைப்படியிலேயே தான் வாழ்ந்து வந்தான்.
முதலியாரின் கொட்டகைக்கு கிடைத்த வரவேற்பில் மேற்கொண்டு ஊர் பக்கங்களில் சில கொட்டகைகள் முளைத்துவிட்டன
“கண்ணா நாம இரண்டுபேரும் ஒரு நடை பட்டணத்துக்கு போயிட்டு வந்திடலாமா,?” கடைசி சோத்துக்கு மோரைப் பரிமாறியபடியே எதுக்கு என்பதைப் போல பார்த்தான் கண்ணன்.
“பத்து வருஷத்துக்கு முந்தி நாம மட்டுதான் இந்த தொழில் பண்ணோம் இப்போ பாரு ஊருக்கு ஒரு தியேட்டரு தொறக்கிறானுங்க நம்ம வியாபாரமும் கொஞ்சம் அடிப்பட்ட மாதிரிதான் இருக்கு, அதான் யோசிச்சிட்டு இருக்கேன். நம்ம தியேட்டருக்குப் போட்டியா அங்கொன்னும் இங்கொன்னுமா முளைச்சிட்டது பட்டணத்திலே இருக்கிற தியேட்டர்ல எல்லாம் போய் பார்த்து ஏதாவது புதுமை இருந்தா செய்யலான்னு ஒரு யோசனை.?!”
“சரிதான் நானே உங்ககிட்டே சொல்லணுமின்னு நினைச்சேன். நம்ம பென்ஞ்ச் டிக்கெட் தரை டிக்கெட் எல்லாம் எடுத்துட்டு நம்ம வீட்டுலே இருக்கா மாதிரி நாற்காலியெல்லாம் போடலாம் அப்பறம் போனதடவை நான் பட்டணத்துக்கு பொட்டி வாங்கப்போனப்போ அங்கே கூண்டுக்கிளி போட்டு இருந்தாங்க நானும் அந்த ஆட்டத்துக்குப் போனேன் முடிஞ்சா நீங்களும் போய் ஒரு நடை பாருங்க. அங்கேயிருக்காப்பில சில மாத்தங்கள் செஞ்சா இன்னும் நல்லா போகும்.!”
“நாளைக்கு நம்ம ரங்கனை விட்டு டிரைன்ல டிக்கெட்டை எடுக்கச் சொல்லு போயிட்டு வந்திடலாம்!” அவர் முத்தாய்ப்பாக சொல்லி முடிக்க சரியென்று தலையசைத்து வைத்தான். சென்னைப் பயணம் தொடர்ந்தது.
அடுத்த பத்து நாட்களிலேயே தியேட்டரில் திருத்தங்கள் செய்து இருந்தார் முதலியார். வேலைகள் எல்லாம் ஜரூராக நடந்தாலும் கூட்டம் கொஞ்சம் குறைச்சலாகவே வந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் கண்ணன் அருமையான யோசனையைக் கூறினான்.
“போன வருஷம் பொங்கலுக்கு பக்கத்து ஊர் கண்காட்சியில் நடிகர்களை வைத்து நாடகம் போட்டாங்க. பாகவதர் மாதிரி எட்டு கட்டையிலே பாடுறாராம் வள்ளித்திருமணம் நாடகத்திலே ஒருத்தர் பேசாம அவரையும் அவங்க ட்ரூப்பையும் வரவைச்சு ஒரு நாடகம் போட்டா என்ன அய்யா. நம்ம சுத்துப் பட்டு ஊருலே உங்களை விட்டா வேற ஆளு ஏது எடுத்துக் கட்டி செய்ய ?!”
சில விநாடி யோசனைக்குப் பிறகு, “ரொம்ப செலவாகுமாடா என்று யோசித்தவர் சட்டென்று சரியென்று தலையசைத்து விட்டார். எப்படிடா செய்யப்போறே ?!”
போனமுறை “நீங்க கொட்டகையைப் புதுசு பண்ண பொருளெல்லாம் வாங்கப் போனீங்களே நாம் ஜாகை போட்டு இருந்த பக்கத்து தெருவிலேதான் இப்போ நான் சொல்ற பாகவதர் வீடு இருக்குது. அங்கன போய் அவரைப் பார்க்கலான்னு போனேன் அப்பத்தான் இந்த மாதிரி நாடகம் போட புக் பண்ண ஆட்கள் எல்லாம் இருக்காங்கன்னு தெரிஞ்சுது. ஒரு ஆட்டத்துக்கு எவ்வளோ, தங்க வசதி, சாப்பாடு செலவு, போக்குவரத்துன்னு அத்தனைக்கும் ஒரு சீட்டு கொடுத்தான், அதை வீட்டு அலமாரியிலேதான் வைச்சிருக்கேன்னு நினைக்கிறேன் அதுலேயே அந்த ஆளோட விலாசமும் கிடக்கு, நீங்க சரின்னா நான் போய் பேசிட்டு வர்றேன்.!”
“இதுதான் கண்ணா நீ எள்ளுன்னா எண்ணெய்யா இருக்கே, திவ்யமா செய் எனக்கென்ன பிள்ளையா குட்டியா வாழ்ந்ததோட மிச்சமா இந்த ஊருக்கு ஏதாவது செய்யணும்.” கை நிறைய பணத்தோடு கண்ணனை அனுப்பிவைத்தார் முதலியார்.
“சீக்கிரம் கஞ்சியை ஊத்தும்மா நான் வெளியூர் போகணும். அய்யா முக்கியமான வேலையைக் கொடுத்திருக்கார் “ மடியில் பணக்கட்டு எட்டிப்பார்க்க,
“ஏதுடா இத்தனை பணம்…? தம்பி இது நீ எதுவும் தப்பா அய்யா… ?!”மகனை சந்தேகப்பார்வையில் எப்படி பார்ப்பது என்று பேச்சினை விழுங்கினாள் அவனின் தாய்.
“நல்லா கேட்டே போ, அய்யா என்னை நம்பி இம்புட்டு பணத்தை கொடுத்து ஒரு வேலையை செய்யச் சொல்லியிருக்காங்க, நீ என்னடான்னா இப்படி சந்தேகப்படறீயே ? அடுப்பு அனல்ல வெந்து நீ படற கஷ்டம் எனக்குத் தெரியாதாம்மா செத்தாலும் சாவேனே தவிர நிச்சயம் நான் தப்பு காரியத்துக்கு துணை போகமாட்டேன்!”.
“சரிப்பா ! உங்கப்பா காசு பணம் தான் சேர்த்து வைக்கலை ஆனா, மரியாதையை சேர்த்து வைச்சிருக்காருடா அதுக்கு எந்த பங்கமும் வந்திடக்கூடாதே இன்னைக்கோ நாளைக்கோன்னு உந்தங்கச்சி வேற பயத்திலே கேட்டுப்புட்டேன் கோவிச்சிகாதே ராசா “ மகனை நெட்டி முறித்து கடவுளை வணங்கியபடியே தீருநீரு பூசியும் விட்டாள்.
“இந்த வருஷம் பொங்கலுக்கு நம்ம முதலியார் அய்யா கொட்டகையிலே கூத்து கட்ட சினிமா நடிகர் நடிகைங்க எல்லாம் வரப்போறாங்க அவங்களை கூட்டியாறத்தான் இந்த காசு, நான் வர்ற இரண்டு நாலு ஆகும், அதுவரைக்கும் தம்பியைத் துணைக்கு வச்சிக்கோ அய்யாவுக்கு எதுனா வேணுன்னா அவனேயே அனுப்பு. அப்பறம் போறப்போ நம்ம வாத்தியார் கிட்டேயும் சொல்லிட்டுப் போறேன் பத்திரம்மா!” கையில் சிறு துணிப்பையை எடுத்துக்கொண்டு மீண்டும் ஒரு முறை பணத்தின் முடிச்சை சரி செய்து கொண்டு கிளம்பினான் பட்டணம் கிளம்பினான் கண்ணன்.
பகுதி – 1 | பகுதி – 2 | பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி – 5 | பகுதி – 6 | பகுதி – 7 | பகுதி – 8 | பகுதி – 9 | பகுதி – 10 |