நடிகர் விசு – பிறந்தநாள் | லதா சரவணன்

 நடிகர் விசு – பிறந்தநாள் | லதா சரவணன்

1945 சுதந்திரத்திற்கு முந்தைய இரண்டு வருடங்கள் சூலை மாதம் பெண்களின் உணர்வுகளை களம் களமாக எழுச்சியாக சமூகப் புள்ளிகளாகத் தெளித்தவரின் பிறப்பு நிகழ்ந்தது.

1977ல் விசுவின் மேடை நாடகமான பட்டினபிரவேசம் மூலம் திரைப்படத்துறையில் கதாசிரியராக பிரவேசம் ஆனார். கே. பாலசந்தர் மோதிரவிரல் குட்டு பட்டவர்களில் விசுவும் ஒருவர்தான். ‘வான் நிலா நிலா அல்ல உன் வாலிபம் நிலா’ என்று எஸ்.பி.பியின் தாலாட்டும் குரல் பட்டினப்பிரவேசத்தில் ஹிட்டடித்தது. ஒரு விதவைத்தாய் தனது நான்கு மகன்களுடம் மகளுடனும் நகரத்தில் வாழ ஆசைப்பட்டு கிராமத்தில் இருந்து வருகிறார்கள். ஆனால் நகர வாழ்விற்கு ஈடு கொடுக்க முடியாமல் மீண்டும் கிராமத்திற்கே செல்வதுதான் கதை. விசு என்னும் மனிதனின் கதைசொல்லி ஆர்வம் தீனியைப் போட தொடங்கியது திரைப்படம் என்னும் பசிக்கு

ஸ்டைல்மன்னன் ரஜினியுடன் மதனோற்சவம் ரதியோடுதான் என்று கதாநாயகியைப் போலவே கைகோர்த்துக் கொண்ட மென்மையான கதைதான் சதுரங்கம். தாகம் கொண்ட நீர்பறவையின் தொண்டையில் சாரலாய் இன்னும் இன்னும் கதை ஊற்றுக்கள் அந்த மனிதனுக்குள் சுழன்று கொண்டு இருந்தது அதன் வளெிப்பாடு மறுவருடமே அவன் அவள் அது, எழுத்தாளர் சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவலின் திரைக்கதை வடிவம் திரைக்கதையில் சிங்க முத்திரையை வடிக்க முக்தா சீனிவாசன் முன்வந்தார். குழந்தையில்லாத தம்பதியின் நிலையையும் பணத்திற்காக வயிற்றை வாடகைக்கு தரும் பெண்ணின் நிலையும் வெட்ட வெளிச்சமாக காட்டிய கதை. லட்சுமி இயக்கிய மழலைப்பட்டாளம் தமிழ் பதிப்பும் விசுவின் கரங்களில் தஞ்சம் புகுந்து கொண்டது.

1981 விசு அவர்களின் பிளாக் பஸ்டர் ஹிட் வருடம் என்றே சொல்லலாம். வேறு வேறு கோணத்தில் பல மொழி பேசி வந்த கோல்மால் படம் தில்லுமுல்லுவாய் ரஜினியின் நகைச்சுவை உணர்வைப் பேசி வந்தது. அதே வருடம் இன்னொரு பரிமாணம் நெற்றிக்கண். தவறு செய்யும் தந்தைக்கும் தட்டிக்கேட்கும் மகனிற்கும் நடக்கும் சுவாரஸ்யப் போராட்டங்கள் கதையின் கோணம் இன்றுவரையில் ரசிக்கவைக்கும் க்ளாசிக் செக்டர் என்று சொல்லலாம்.

கீழ்வானம் சிவந்தது நடிகர் திலகத்தின் நடிப்பில் அதே வருடத்தில் மரியாதைக்குரிய மருமகளுக்கு மகன் இழைத்த கொடூரம் காமத்தின் பிடியில் இருக்கும் மகன் சிதைத்த பெண்ணின் குருட்டு அண்ணன் அவனின் ஒளியற்ற கண்களில் இருந்து பிள்ளையை மறைக்க பாடுபடும் தந்தையாக வெளுத்து கட்டியிருப்பார் சிவாஜி. இந்தக் கதையும் விசுவின் கலைநதியில் மிதந்த பாய்மரத்தில் ஒன்றுதான்.

நங்கூரமாய் அந்த வருடமே நிலைத்து நின்றது குடும்பம் ஒரு கதம்பம் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய திரைப்படம், அடுத்த வேளை உணவிற்கு தாளம் போடும் ஒரு நடுத்தர வயது ஊதாரித்தந்தை நாட்டின் பொருளாதாரம் பேசும் திண்ணைவாதியின் வேடம் விசுவிற்கு கமலாகாமேஷ் இணையராக நடித்திருப்பார். நான்கு குடும்பங்கள் அதில் ஒவ்வொரு சிக்கல்கள், பெண் வேலைக்கு போகலாமா வேண்டாமா ? பித்துப்பிடித்த ரசிகனின் நிலை, பொருளாதாரம் முக்கியம் என்று பெற்ற பிள்ளையை தனித்திருக்க வைத்துவிட்டு வேலைக்கு செல்லும் தம்பதிகள், கடிதத்திலேயே குடும்பம் நடத்தும் குடும்பஸ்தன், குடும்ப சூழலை தறுதலையான தந்தைக்கு புரியவைக்கும் மகள், மனைவியை மகாராணியாக்கிட வேண்டும் என்று மெனக்கெடும் வீடு பிடித்துதருபவராக எஸ்.வி.சேகர் என அத்தனை பேருமே எதிர்காலத்தை எதிர்நோக்கும் இரவு நேரத்தில் மட்டும் மின்னும் விட்டில் பூச்சியாய் கனவுகளில் வாழும் நடுத்தர வர்க்கத்தினர்.

கூட்டுப் புழுக்களைப் போல அத்தனைபேரையும் ஒருங்கிணைத்து அவர்களுக்கு ஒரு சிக்கல்களை வைத்து அதை தீர்க்கும் சாமர்த்திய சாலியாய் உலாவரும் கதாபாத்திரத்தை விசுவைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும்.

1982ல் கண்மணிப்பூங்கா ராம்குமாராக தன் எழுத்தர் பணியோடு இயக்குநர் என்னும் கீரிடமும் அந்த சிரசில் சுமத்தப்பட்டது.

சிம்லா ஸ்பெஷல் இதுவும் ஒரு நாடகக் கதையே நண்பர்கள் இருவர்களின் வாழ்க்கை நட்பில் சிறிது சுயநலம் கலந்தால் அதன் விளைவு என்னாவாக இருக்கும் அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இறுதியில் சுபமிட்டு முடித்திருப்பார்கள் கதையை உனக்கென்ன மேலே நின்றாய் பாடல் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் விளக்கும் வகையில் அமைந்திருந்தது இன்னொரு பிளஸ் அதே படத்தில் அந்த பாடலின் நடன இயக்குநராகவும் கமல் இருந்தார்.

மணல் கயிறு எட்டுவித கட்டளைகள் அடங்கிய திரிக்கப்பட்ட கயிறை தாலிக்கயிறாய் மாற்றும் நாரதர்நாயுடு வேடம். திருமணம் என்று வரும் போது எதிர்பார்ப்புகள் எப்படிப்பட்டவையாக இருக்க வேண்டும் என்பதுதான் அடித்தளம். நகைச்சுவையும், எதிர்பார்ப்பும் குடும்பச்சூழலும் கலந்த கதையில் அத்தனை நடிகர்களும் நடிப்பைத் தாண்டி எதார்த்தக் களத்தில் பயணித்திருப்பார்கள். அவர்களின் முக வடிவங்கள் உடைகள் ஒப்பனைகள் எல்லாமே நம்மோடு ஒன்றியே கலந்திருக்கும். சராசரி இளைஞனின் வெளிப்பாடுகளின் தீற்றல்களின் ஓவியமே மணல்கயிறு, கயிறும் லகானும் திறம்பட இழுக்கப்பட்டதால் சீராய் வெற்றிக் கோட்டையை அடைந்தது விசுவின் மகுடமாய் அடையாளமாய் விளங்கியது மோடிமஸ்தான் இருந்து மாறிய மணல்கயிறு.

புதுக்கவிதை, நல்லவனுக்கு நல்லவன், மிஸ்டர் பாரத், என ரஜினிக்கு முத்தான கதைகளோடு ஊதுகுழலின் அடிநாதத்தைப் போல நடிகராகவும் மன்னன், உழைப்பாளி, அருணாசலம் படங்களில் நகைச்சுவையில் பயணித்திருப்பார் அதில் குமரேசகவுண்டரும், விசுவநாதன் கதாபாத்திரமும் பேசப்படுபவையாக அமைந்தது.

மிடில்கிளாஸ் வாழ்க்கை நடுத்தரக் குடும்பத்துப் பிரச்சனைகள் அந்தக் குடும்பத்தின் சுக துக்கங்கள், உறவுகளின் சிக்கல்கள், சின்னசின்ன ஊடல்கள், அத்தனைப் பிரச்சனைகளுக்கும் சுமூகமான தீர்வுகள் என பார்த்து ரசிக்கும்படி காமெடி வர்ணம் பூசி கொடுப்பது விசுவின் ஸ்டைல்.

உறவுக்கு கைகொடுப்போம் என்ற நாடகத்தைப் பார்க்க வந்த கே.எஸ். கோபாலகிருஷ்ணன் கதையை வாங்கிக்கொண்டு அதற்கான தொகையையும் கொடுத்தார் ஆனால் அந்தப் படம் வெற்றிக்கு கை கொடுக்கவில்லை. உறவுக்கு கைகொடுப்போம் சம்சாரம் அது மின்சாரம் ஆனது. அதேபோல் சதுரங்கம் திரைப்படம் திருமதி ஒரு வெகுமதியானது. தங்கத்தாமரை விருது பெற்ற சம்சாரம் அது மின்சாரம் முதலில் வெற்றிபெறாமல் தோல்வியைத் தழுவிய ஒரு திரைப்படம்.

அம்மையப்பனின் கோதாவரி என்ற குரலும் இனிப்புக்கு ஏங்கி அதை நயச்சியமாக வாங்கும் குழந்தையாகவும், மகனின் சுயநலத்தை தாங்காமல் தடுமாறும் தந்தையாகவும் என்று விசுவின் ஜாலம் கலக்கியது.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...