கேப்ஸ்யூல் நாவல் – சிவகாமியின் சபதம் 02 – பாலகணேஷ்
இரண்டாம் பாகம்: காஞ்சி முற்றுகை
எட்டு மாதங்கள் கழித்து போர்முனையில் வீர சாகசங்கள் செய்து அனுபவம் பெற்ற படைத் தளபதியாக காஞ்சிக்கு வரும் பரஞ்சோதியை மாமல்லர் வரவேற்று தன் உயிர்த் தோழனாக்கிக் கொள்கிறார். வாதாபிப் படைகள் முற்றுகையிட வருவதால் காஞ்சிக் கோட்டையை ஆயத்தப்படுத்தும் பணியை இருவரும் செய்கின்றனர். ஆயனச் சிற்பியையும், சிவகாமியையும் காஞ்சிக்குள் வரும்படியும் இல்லாவிட்டால் சோழநாடு செல்லும்படியும் பரஞ்சோதி தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் மாமல்லரும் சிவகாமியும் எழுதிக் கொண்ட காதல் ஓலைகளை ஒற்றர் தலைவன் சத்ருக்னன், போர்முனையிலிருக்கும் மகேந்திரரிடம் சேர்ப்பிக்கிறான். கங்கநாட்டரசன் துர்விநீதன் காஞ்சியை நோக்கி படையுடன் வருவதாகவும், அவனை எதிர்கொண்டு முறியடிக்கும் படியும் சத்ருக்னனிடம் அவசர ஓலை கொடுத்து காஞ்சிக்கு அனுப்புகிறார் மகேந்திரர்.
ஆயனரையும், சிவகாமியையும் சந்திக்கும் நாகநந்தியடிகள் தன்னுடன் வரும்படி அழைத்துச் செல்கிறார். போருக்குமுன் அங்கு வரும் மாமல்லரும் பரஞ்சோதியும் வீடு பூட்டியிருப்பதைக் கண்டு ஏமாற்றமடைகின்றனர்.
அசோகபுரம் என்னும் ஊரில் ஆயனரையும், சிவகாமியையும் தங்க வைக்கும் நாகநந்தியடிகள் மகேந்திரரின் சாமர்த்தியத்தால் புள்ளலூரில் நடந்த போரில் துர்விநீதன் தோல்வியுற்றதையும், பல்லவர் படைகள் அவனைத் துரத்திச் செல்வதையும் அறிகிறார். அதேசமயம் சிவகாமியும், ஆயனரும் அங்கே இருப்பதை துரத்திச் செல்லும் படையின் முன்னணியில் இருக்கும் மாமல்லர் பார்த்து விடுகிறார்.
அன்றிரவு திருப்பாற்கடல் என்ற பெரிய ஏரியின் கரையை நாகநந்தி உடைத்துவிட, பெருவெள்ளம் ஊரைச் சூழ்கிறது. வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஆயனரையும், சிவகாமியையும் மாமல்லர் வந்து காப்பாற்றுகிறார். வெள்ளம் வடியும் வரை அவர்கள் ஒரு கிராமத்தில் தங்க நேரிடுகிறது. அங்கே நாகநந்தி மறைந்திருந்து விஷக்கத்தி எறிந்து மாமல்லரைக் கொல்ல முயல்கிறார்.
பல்லவ ஒற்றனான குண்டோதரன் அவரது முயற்சியை முறியடிக்கிறான். மாமல்லரை பரஞ்சோதி சந்தித்து காஞ்சிக்கு உடன் வரும்படி சக்கரவர்த்தியின் ஆணை என்று கூறி அழைத்துப் போகிறான்.
பின் அங்கு வரும் மகேந்திரர், சிவகாமியிடம், மாமல்லனை மறந்து விடும்படி வேண்டுகிறார். பாண்டியனும் காஞ்சி மீது படையெடுத்து வருவதால் அவன் மகளை மாமல்லருக்குத் திருமணம் செய்ய இருப்பதாகச் சொல்கிறார். ஆயனரிடம் பல்லவ இலச்சினை தந்து செல்கிறார்.
அதைத் திருடிவிடும் நாகநந்தி, காஞ்சிக் கோட்டையினுள் புகுந்து குழப்பம் விளைவிக்க முயன்று மகேந்திரரால் சிறைப்படுகிறார். காஞ்சி நகரை வாதாபிப் படைகள் சூழ்ந்து கொள்ள, முற்றுகை ஆரம்பமாகிறது.