உலகம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஒழிப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 17ஆம் தேதி, 1994ஆம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது. மனிதனாலும், பருவநிலை மாற்றத்தாலும் வறட்சி ஏற்பட்டு, நிலங்கள் பாலைவனமாக மாறுகிறது. மேலும், பூமியின் நிலப்பரப்பு படிப்படியாக பாதித்துக்கொண்டே செல்கிறது.
இதனால் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுகின்றனர். சுற்றுச்சூழல் பாதிப்பை தடுப்பதன் மூலம் பாலைவனமாதல் மற்றும் வறட்சி ஏற்படுவதை தடுக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஐ.நா.சபை இத்தினத்தை அறிவித்தது.

லியாண்டர் பயஸ்
புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் (Leander Paes) 1973ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி கோவாவில் பிறந்தார்.
இவருடைய தாயார் (ஜெனிபர் பயஸ்) இந்திய கூடைப்பந்து அணிக்கு தலைமை வகித்தவர். தந்தை (வெஸ் பயஸ்) 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவர். மேலும், இந்திய ஹாக்கி அணியில் விளையாடியவர்.
இவர் மகேஷ் பூபதியுடன் இணைந்து சர்வதேச டென்னிஸ் அரங்கில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன், சர்வதேச கிராண்ட் ஸ்லாம் போட்டிகளான ஆஸ்திரேலிய ஓபன், அமெரிக்கன் ஓபன் போட்டி என அனைத்திலும் பட்டங்களை வென்றவர். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா, பத்மஸ்ரீ, பத்ம பூஷண் ஆகிய விருதுகளை வென்றுள்ளார்.
முக்கிய நிகழ்வுகள்
1980ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லின்வுட்டில் பிறந்தார்.
1911ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் மறைந்தார்.
1839ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி வில்லியம் பென்டிங் பிரபு மறைந்தார்.