வா…வா…வசந்தமே நாவல் விமர்சனம் – லதா சரவணன்
ஐரேனிபுரம் பால்ராசய்யா அவர்களின் கைவண்ணத்தில் கண்மணியில் வெளியான வா…வா…வசந்தமே நாவல். தெளிந்த நீரோடையில் வீசும் தென்றலைப் போல சுகம் பரப்பும் நாவல். இந்த விமர்சனம் சற்று தாமதம் என்றாலும் தரமான ஒரு நாவலுக்கு என்பதில் சந்தேகம் இல்லை.
கதையின் முதல் அத்தியாயம் இன்றைய உணவிற்கு பணியைத் தேடிச் சுமக்கும் கண்களைக் கொண்ட கூட்டத்தினருள் ஒருத்தியாய் கதாநாயகி வசந்தி, முதலில் புறக்கணிக்கப்பட்டாலும் மீண்டும் பணிக்கு அமர்த்திக் கொண்டு, சித்தாளாய் வசந்தியின் முதல்அத்தியாயம். சாந்துசட்டியினைச் சுமக்கும் விரல்களின் கணத்ததையும் தாண்டி அவளின் மனத்தின் கனத்தை நமக்கு அந்த அத்தியாயத்திலேயே உணர்த்திவிடுகிறார் ஆசிரியர்.
சிமெண்ட் ஓட்டிய உடைகளைத் தட்டி விடுவதைப்போலவே தன் மனக் குமுறல்களையும் தட்டிவிட்டால் எப்படியிருக்கும் என்று அவளுடனே நமக்கும் தோன்றுகிறது. கண்களில் பசி நேரத்து உணவின் ருசியை மறக்கடிக்கும் படியாய் கவலைகளைக் கோர்த்து இருப்பது வெகு அருமை எல்லா கஷ்டத்தையும் தாண்டி அவளின் கடந்த காலத்தின் முதல் வரி வரும்போது அநேகமாக காதல் விவாகாரமாக இருக்கும் என்ற நினைப்பினை தகர்கிறார் ஆசிரியர்.
கதை பயணிப்பது முந்திரி தொழிற்சாலையில் என்னுடைய முதல் நாவலை கண்மணியில் வெளியிடும் போது எடிட்டர் ஜேம்ஸ் அவர்கள் ஒரு கதையில் அநேக சாரங்களும் இரக்க வேண்டும் ஒரு தொழிலைப் பற்றி எழுதுகிறீர்கள் என்றால் அதில் 20 சதவிகிதமாவது கதையில் விளக்க வேண்டும். பாலகுமாரன் நாவலைப் படியுங்கள் என்றார்.
வா..வா..வசந்தமே கதைக்குள் நுழையும் போது முந்திரி ஆலைக்குள் சென்றுவந்த உணர்வை ஏற்படுத்தியது பால்ராசய்யா அவர்களின் முந்தைய நாவல் வடலிமரத்தில் பனைமரத்தினைப் பற்றியும் அங்கு வாழும் மக்களின் இயல்பைப் பற்றியும் வெகு அழகாக எழுதியிருப்பார்.
முந்திரியின் தோலைஅகற்றும்போது அடையும் வலியை தன் மகளும் படக்கூடாது என்று அவளை வேறு வேலைக்கு அனுப்ப முயற்சிக்கும் தாய் ஆனால் தன் உடலை மேயும் கண்களுக்கு பயந்து அன்னையின் சிறகுகளுக்குள்ளேயே புதைய நினைக்கும் மகள் என கதை நகர்கிறது. ஏழ்மையின் அந்த வலியை வசந்தி உணரும் நேரம் ஒரேயொரு முந்திரியைச் சுவைத்ததற்கு திருட்டுப்பட்டம் கட்டுவதும் அங்கே வசந்தியின் அவமானமும் துயரமும் அதை வைத்து அவளை வளைக்க நினைக்கும் மனித ஓநாயின் சதைப்பசியையும் ஒற்றை வரிகளில் உணரச் செய்கிறார். வசந்தி நம் கண்முன்னே கூனிக்குறுகி நிற்பதைப் போல காட்சிகள் விரிகிறது.
அதையும்தாண்டி அவளின் குணங்களை ஈர்க்கப்பட்டு அந்த முந்திரி தொழில்சாலைக்கே உரிமையாளராகி ஒரு ஜோடிக்கப்பட்ட பொய்யான இல்லறத்தில் நுழைந்து தன் தனிமையையும் இல்லற இயலாமையையும் வெளியே சொல்ல முடியாமல் மருகும் இடங்களில் வேலையில் புதைந்து கொள்ளும் பல இந்தியப் பெண்களை தன் கதாபாத்திரத்தில் ஒளிர்த்துகிறாள் வசந்தி.
மகனின் கொடுமைகளுக்கு துணை போகாத மாமியார் கடைசி காலத்தில் ஒரு வேலைக்காரியாக அந்த சிறுபெண்ணை பார்க்க நினைக்காமல் மகனையும் எதிர்த்து மருமகளுக்காக துணை நின்கும் அந்த மாமியாரின் ஆழமான நேசமும் அன்பு கலந்த நட்பும் நெகிழச் செய்கிறது, பலன் இல்லாத இல்லறத்தில் உழண்டு அவர்களுக்காகவே உழைக்கும் மகளிடம் ஒருவாய் சாப்பிட்டு போடி நானும் உங்கம்மாதான் என்று ஜெகதாம்மாவின் கம்மிய குரல் பெண்ணைப் பெற்று வளர்த்து அவளின் உரிமையை விட்டுக்கொடுத்து பேசக்கூட அடுத்தவரின் அனுமதியைக் கேட்கும் பெற்றவர்களின் வலியை சொல்கிறது.
பல இக்கட்டான சூழ்நிலைகளுக்குப்பிறகு கதையில் சுபம் அதுவும் தன் குடும்பம் என்று வசந்தியின் நினைப்பினால் அவர்களின் சொத்துகள் பாதுகாக்கப்படுவதை தாமதமாக உணரும் கணவன். அவளை ஏற்கிறான் அதுவரையில் வெளியூர் பெண்ணின் மயக்கத்தில் இருந்து கொண்டு அவள் தூக்கியெறிந்ததும் மீண்டும் மனைவியிடம் சரணாகதி அடையும் கணவன். அவன் தப்புக்கு மேல் தப்பு செய்து தாலி கட்டியவன் என்ற காரணத்திற்காக ஏற்கும் மனைவி அவனுக்கு மீண்டும் பணிவிடைகள் செய்வதைப் போல மேடைக்கு இது சரியில்லை ஏன் அவளுக்கு சொத்து கைவந்து விட்டது இன்னமும் அவள் ஏன் அப்படி அடிமை வாழ்க்கை வாழவேண்டும் தன்னை ஏமாற்றிய கணவனைப் பிரியலாம் என்று பேசலாம். ஆனால் நடைமுறை என்ற ஒன்று இருக்கிறதே அது தவறுகளை மன்னிக்கும் இனமாகத்தானே பெண்மையைப் பார்க்கிறது அப்படித்தான் கதையின் முடிவும் முந்திரிக்காட்டின் வாசம் கதை முழுக்க வாழ்த்துக்கள் பால்ராசய்யா அவர்களுக்கு கதையின் முடிவில் வசந்தியின் வாழ்வில் வசந்தம் வீச வைத்ததற்கு !