பூச்சிக்கடிக்கு மருந்து – நாட்டு வைத்தியம்

இரவில் நச்சுப்பூச்சி ஏதேனும் கடித்து விட்டால், என்ன கடித்தது என்பதை அறியாமல் மருத்துவம் செய்வது கடினம்.

இந்நிலையில் கடிபட்டவருக்கு ஆடு தின்னாப்பாளை என்ற செடியின் வேரைக் கொடுத்துச் சுவைக்கச் சொன்னால், இனிப்புச் சுவையாக இருந்தால் கடித்தது நல்ல பாம்பு என்றும்.. புளிப்புச் சுவையாக இருந்தால் கட்டு விரியன் பாம்பு என்றும்… வாய் வழவழப்பாக இருந்தால் நஞ்சு குறைந்த வழலைப்பாம்பு, நீர் பிரட்டை போன்றவை என்றும்… கசப்புச் சுவையாக இருந்தால் பாம்பு வகைகள் அல்லாத வேறு பூச்சிகள் என்றும் அறிந்து உணரலாம்…

தேள் கடி மருந்துகள்.
எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கடிவாயில் எலுமிச்சைப் பழ இரசத்தையும் உப்பையும் கலந்து தடவினால் நலம் கொடுக்கும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும்.

சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு புகையிலையையும் கலந்து நன்றாகப் பிசைந்து தேள் கடித்த இடத்தில் வைத்துக் கட்டினால் நஞ்சு இறங்கி விடும்.

கண்ணாடி இலையின் பால் எடுத்துத் தேள் கடித்த இடத்தில் வைத்தால் நஞ்சு இறங்கும். பட்டு ரோஜா (டேபிள் ரோஜா) செடியின் இலையின் நான்கை எடுத்து வெற்றிலையில் மடித்துத் தின்றால் நஞ்சு இறங்கும்.

குப்பை மேனி இலையைப் பறித்து நன்றாக நீரில் கழுவி விட்டுப் பின்பு கசக்கிச் சாறு எடுத்துத் தேள் கடித்த இடத்தில் தடவ வேண்டும். அத்துடன் கசக்கிய இலையைக் கடிவாயில் வைத்துக் கட்டி விட்டால் நஞ்சு இறங்கும்.

சித்த மருத்துவத்தில் ஒரு பொருளை மட்டும் மருந்தாகப் பயன்படுத்தும் முறைக்கு ஒற்றை மருத்துவம் என்று பெயர். நட்டுவாய்க்காலி கொட்டினால் கொப்பரைத் தேங்காயை வாயில் போட்டு மென்று தின்றால் உடன் நஞ்சு நீங்கும். பூரான் கடித்தால் பனை வெல்லத்தை (கருப்பட்டி) தின்னத் தடிப்பு, அரிப்பு உடனே மாறும். வெறி நாய் கடித்து விட்டால்.

நாயுருவியின் வேரும் எலுமிச்சைப் பழத்தின் விதையும் சம பாகமாகச் சேர்த்து எலுமிச்சைச்சாறு விட்டு அரைத்து வைத்துக்கொண்டு அதில் எலுமிச்சைப் பழம் அளவிற்குக் காலையிலும் மாலையிலும் ஒரு உருண்டை வீதம் பத்து நாள் உட்கொண்டால் வெறிநாய்க்கடி குணமாகும்.

எலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் போன்றவைகளின் நஞ்சை நீக்க. நாயுருவியின் விதையை வீசும் படி எடுத்து வெய்யலில் காய வைத்துப் பொடி செய்ய வேண்டும். இந்தப் பொடியை நல்ல மூடியுள்ள பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நஞ்சு நீங்கத் தேவையான காலத்தில் இந்தப் பொடியில் மூக்குப் பொடி அளவு எடுத்துத் தேனில் குழைத்துக் காலையிலும், மாலையிலும் 25 நாட்கள் சாப்பிட வேண்டும். இப்படிச் சாப்பிட்டால் நஞ்சு நீங்கும். உடலுக்குள் சென்ற எந்த நஞ்சாக இருந்தாலும் வாந்தி ஏற்படுத்துவதன் மூலம் நஞ்சை வெளியேற்றலாம்.

வாந்தி ஏற்படுத்துவதற்கு நஞ்சிலைப் பறிச்சான் என்ற செடியின் வேருடன், தலைச்சுருளி என்ற பெரு மருந்து இலையைச் சேர்த்து நன்றாக அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு உருண்டை எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் உடனே வாந்தி ஏற்பட்டு அனைத்து நஞ்சும் அதன் மூலம் வெளியேறிவிடும்.

வாந்தி ஏற்பட்ட பின்பு எலுமிச்சைப் பழத்தைத் தண்ணீரில் பிழிந்து குடித்து விட்டால் நஞ்சு முறிந்து போகும். சித்த மருத்துவம் ஏராளமான மூலிகைகளை நமக்குக் கூறுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!