ஸ்ரீ ரமண மகரிஷி பிறந்த நாள் ஸ்ரீ ரமணர் மதுரைக்குக் கிழக்கே முப்பது மைல் தொலைவிலுள்ள திருச்சுழி என்னும் கிராமத்தில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் நாள் பிறந்தார். பெற்றோர்கள் சுந்தரமய்யர் அழகம்மை ஆவர். ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கடராமன். திருச்சுழி பஞ்சாயத்துத் தலைவராயிருந்த சுந்தரமய்யர் இறந்தபோது ரமணருக்கு வயது பதினொன்று. தந்தையின் மரணம் வாழ்வு, சாவு பற்றிய உண்மையை அவருக்கு உணர்த்தியது.
1896 ஜூலை மாதத்தில் ஒருநாள் வீட்டு மாடியில் இருந்தபோது அவரை மரண பயம் கவ்விக் கொண்டது அவர் முழு உணர்வோடு இருந்தாலும் உடல் பிணம் போல் விறைத்துப் போனது. அவருள் ‘நான் என்பது என்ன?’ என்ற கேள்வி எழுந்தது. உடம்பின் செய்கையில் இருந்து வேறுபட்டு இயங்கும் ஓர் ஆற்றல் அது என்று அவர் உணர்ந்தார். அந்த உணர்வு உறுதிப்பட அவருடைய மரணபயம் நீங்கியது. அந்நிகழ்ச்சிக்குப் பிறகு சாதாரண வாழ்க்கை என்பது அவருக்கு இயலாது போயிற்று. அடிக்கடி அவருக்கு சமாதி அனுபவம் ஏற்பட்டது.
அன்னாரின் பொன் மொழிகளில் சில: 💫
✨மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக்கொண்டு மனம் அலை பாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்த பயனும் இல்லை.
✨கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால் எளிதில் காணலாம்.
✨மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
✨எவ்வளவுக்கு எவ்வளவு பணிந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நன்மை உண்டு.
✨முயற்சி செய்து மனத்தை எண்ணங்களில் இருந்து விடுவிக்க வேண்டும். அந்த நிலையில் தொடர்ந்து நாம் இருப்போமேயானால் அதுவே நம் சாதனைகளுக்கு வழி வகுக்கும்.
✨தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை. ஒவ்வொருவருடைய மனப்பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளை கைக்கொள்ள வேண்டும்.
✨கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே. இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
✨உலகை கனவாக மட்டுமே கருதவேண்டும். மனதை வெளி விஷயங்களிலும் எண்ணங்களாலும் திசை திருப்ப விடக்கூடாது.
✨தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளை சேர்த்துக் கொள்ளாதீர்கள். தேவையற்ற சுமைகளை சுமக்காமல் இருங்கள்.
✨குருவே ஈஸ்வரன். ஈஸ்வரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
✨சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத்சங்கமுமே! மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
✨நல்லவர் நட்பை தேடிச்செல்லுங்கள். அதனால் மனதில் சூழ்ந்திருக்கும் அறியாமை அகன்றுவிடும்.
✨எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றாலும் கடவுளை சிந்தித்திருப்பவனின் வாழ்வில் சுமை என்பது சிறிதும் இருக்காது.
✨இறைவனை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது அமைதியாக இருப்பதுதான். அமைதியாக இருப்பதைப்போல சிரமமான செயல் வேறு எதுவும் இல்லை.
நம்மாழ்வார் நினைவு தினம் இந்திய மண்ணில், தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதைப் பார்த்துச்சென்றவர்களுக்கு மகாத்மா காந்திக்கு அடுத்த இடம், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வாருக்குத்தான். ஒரு விவசாய மாணவனாக, ஆராய்ச்சி நிலைய மேலாளராக நம்மாழ்வார் பயின்ற படிப்பினைகள் ஏராளம். விவசாயம் என்பது எப்படி இருக்க வேண்டும். நாம் அதனை எப்படிக் கையாள வேண்டும். இன்றைய நிலையில் எப்படி இருக்கிறது விவசாயம் என்பது உள்ளிட்ட பல கருத்துக்களுக்கு அவர் விடை தெரிந்து வைத்திருந்தார். அந்தப் படிப்பினையும், அங்கு அவர் மேலாளராக மட்டுமல்லாமல், துணை விஞ்ஞானியாகப் பணியாற்றியவர். இவர் காவிரி ஆற்றங்கரையில் முப்போகம் விளைவித்த பெருமையுடைய பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜப்பானிய விவசாயி மற்றும் சிந்தனையாளர் ‘மசனோபு ஃபுக்கோக்கா’-வின் இயற்கை விவசாய கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஐரோப்பிய நாடு முழுவதும் பயணங்கள் மேற்கொண்டவர். நம் நாட்டு வேப்பிலைக்கான காப்புரிமையை ஜெர்மனி சென்று மீட்டு வந்தவர். கரூர் மாவட்டத்தில் கருமான்பட்டி என்ற இடத்தில் ‘வானகம்’ என்ற பண்ணையை அமைத்தார். தன்னுடைய மூன்றாண்டுக் கால செயலால் கரடாக இருந்த நிலத்தில் இயற்கை வேளாண்மை செய்யும் நிலமாகவும் பல்லுயிர் வாழும் கானகமாகவும் மாற்றினார். மரபணுமாற்ற விதைகளுக்கு எதிரான போராட்டம், டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டம் எனப் பல போராட்டங்களை நடத்தி இயற்கை வளத்தைக் காத்த விஞ்ஞானி இவர் எழுதியுள்ள உழவுக்கும் உண்டு வரலாறு, இனி விதைகளே பேராயுதம், நோயினை கொண்டாடுவோம் என்பது உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கவேண்டிய அளப்பரிய சொத்து.
சித்தூர் வி.நாகையா காலமான நாள்..! லட்சம் ரூபாய் ஊதியம் பெற்ற முதல் தென்னிந்திய நடிகர். தென்னிந்தியாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற முதல் சினிமாக் கலைஞர் என்ற பெருமை சித்தூர் வி. நாகையாவுக்கு உண்டு. சினிமாத்துறையில் பலரும் பத்ம விருது பெற்றதற்காக அவர் வீட்டுக்குச் சென்று வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தனர். அப்போது வாழ்த்த வந்தவர்களிடம் பேசிய நாகையா, மத்திய அரசு தென்னிந்த்தியாவில் உள்ள வயதான சினிமாக் கலைஞனுக்கு அதுவும் தென்னிந்திய மொழிகளில் நடித்த ஒருவனுக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து எனக்குக் கொடுத்திருக்கலாம் என்றார் நாகையா. மேலும், தென்னிந்திய திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் இவ்விருதைச் சமர்ப்பணம் செய்வதாக கூறினார். 1943ல் ரேணுகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து “பாக்யலஷ்மி” என்ற படத்தைத் தெலுங்கில் தயாரித்தார். நாகையா தன் திரைப்பட வாழ்க்கையில் இருமுறை குழப்பமான மன நிலையில் இருந்துள்ளார். முதலாவதாக, சென்னை விருகம்பாக்கத்தில், தான் வாங்கிய 52 ஏக்கர் நிலத்தில் ஸ்டூடியோ கட்ட நினைத்தபோது. அந்தக் காலகட்டத்தில்தான், நாகையா ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்துக்கு அருகில் பி.என்.ரெட்டி மற்றும் நாராயணசாமியும் இணைந்து வாகினி ஸ்டூடியோவைக் கட்டிக்கொண்டிருந்தனர். அதனால், குழப்பமான மனநிலையில் இருந்த நாகையா, ஸ்டுடியோ கட்டும் திட்டத்தை கைவிட்டார். பின்னர், 52 ஏக்கர் நிலத்தையும் விற்றுவிட்டார். ஒரு ஸ்டூடியோ கட்ட நினைத்த இடத்தில் இரண்டு ஸ்டுடியோக்கள் வந்தன. ஆம் “சியாமளா” மற்றும் “கற்பகம்” ஸ்டுடியோக்கள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடத்தில் ஏவிஎம் நிறுவனம் கல்வி நிறுவனங்களை அமைத்தன. ஆனால், இப்போது, இரு ஸ்டுடியோக்கள் இருந்த இடம் அடுக்குமாடி குடியிருப்புகளாக மாறிவிட்டன. வாகினி ஸ்டுடியோவும் போரம் விஜயா மாலாக மாறிவிட்டன பத்திரிகையாளர், நாடக மற்றும் திரைப்பட நடிகர், பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மட்டுமின்றி இல்லாதவருக்கு கொடுத்து உதவி புரிந்த கொடையாளர் என்று பன்முகத் திறமைகளைக் கொண்டு தென்னிந்திய திரைப்படங்களில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்தாலும் இறுதிக் காலத்தில் வறுமையில் வாடி தனது 69வது வயதில் காலமான சித்தூர் வி. நாகையா இன்றும் சென்னை தியாகராயநகரில் உள்ள பனகல் பார்க் அருகில் சிலையாகக் காட்சியளிக்கிறார்.
கோர தாண்டவமாடிய ‘தானே புயல்‘ தாக்கிய நாளின்று* கடலூர் மாவட்டத்தை, புதுச்சேரி மாநிலத்தையும்கோரத்தாண்டவம் ஆடிய தானே புயல் இன்றோடு பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. இத்தனை வருடங்கள் கடந்த பின்னரும், தானே புயல் ஏற்படுத்திய சோகம் மக்களின் நினைவுகளில் இன்னும் நீங்காமல் இருக்கிறது.* ஆம் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறாவளியில் சிக்கி, மின்கம்பங்கள், செல்போன்கோபுரங்கள் சரிந்துவிழுந்தன. கரையை நோக்கி சீறிப்பாய்ந்து வந்த ராட்சத அலைகள், ஏராளமான படகுகளை வாரிச்சுருட்டிக்கொண்டுசென்றன.புயல் கரையை கடந்த போது, இங்குபெய்த கனமழை மற்றும் சூறாவளிக்காற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 48 பேர் பலியாகினர். அதில் கடலூர் மாவட்டத்தில் 39 பேரும், புதுச்சேரியில் 7 பேரும், சென்னையில் 2 பேரும் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகளை இழந்தனர். பல்லாயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டது. குடிநீர், உணவு போன்ற அத்தியாவசியதேவைகள் கிடைக்காமல் கடலூர், புதுச்சேரி மக்கள் அவதிப்பட்டனர்.
முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட தினம் . 1906 டிசம்பரில் இந்தியாவெங்கிலும் இருந்து முஸ்லீம்கள், முஸ்லிம் கல்வி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டாக்கா நகரில் கூடியிருந்தனர். அந்த தருணத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட டாக்காவைச் சேர்ந்த நவாப் சலி முல்லா என்பவர் முஸ்லீம்களின் நலன்களுக்காக ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டார். இந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1906 டிசம்பர் 30 ஆம் நாள் அகில இந்திய முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசைப் போலவே, அவர்களும் ஆண்டுதோறும் மாநாடுகள் நடத்தி பிரிட்டிஷ் அரசுக்கு தங்களது கோரிக்கைகளை அனுப்பி வைத்தனர். தொடக்கத்தில் பிரிட்டிஷார் இதற்கு ஆதரவு காட்டினர். மின்டோ மார்லி சீர்திருத்தங்களின் போது முஸ்லிம்களுக்கென தனித்தொகுதியை கேட்டுப்பெற்றார்கள்.
இருப்புப்பாதை அமைப்பதற்குத் தேவைப்பட்டதால், மெக்சிகோவிடமிருந்து, 76,800 ச.கி.மீ. இடத்தை 10 மில்லியன் டாலர்களுக்கு அமெரிக்கா வாங்கிய, ‘கேட்ஸ்டன் கொள்முதல்‘ நிகழ்வு நடைபெற்ற நாள் இதற்கான ஒப்பந்தத்தில் மெக்சிகோவுக்கான அமெரிக்கத் தூதரான ஜேம்ஸ் கேட்ஸ்டன் கையெழுத்திட்டு, இடத்தைப் பெற்றுக்கொண்டதால் இது கேட்ஸ்டன் கொள்முதல் என்று அழைக்கப்படுகிறது. 1846-48இல் நடைபெற்ற மெக்சிகோ அமெரிக்கப் போரைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் நிலவிவந்த எல்லைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவும் இந்த இடம் வாங்கப்பட்டது. அப்போது மெக்சிகோ குடியரசின் ஒரு மாநிலமாக இருந்த டெக்சாஸ் பகுதியின் மக்கள், ஒரு புரட்சியை நடத்தி 1836இல் தனிக் குடியரசாகப் பிரிந்தனர். அமெரிக்காவுடன் இணைய விரும்பிய இவர்களை அமெரிக்கா 1845இல் 28ஆவது மாநிலமாக இணைத்துக்கொண்டது. ஆனால், அக்காலக்கட்டத்தில் டெக்சாசை தங்களின் ஒரு மாநிலமாகவே கருதி வந்த மெக்சிகோ, சில பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது போர் மூண்டது. அந்த போரில் மெக்சிசோ தோற்க, டெக்சாசின்மீதான அதிகாரத்தை அமெரிக்கா உறுதிப்படுத்தியது. இப்பகுதியிலிருந்தவர்கள் தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்பதாலேயே அமெரிக்காவுடன் இணைய விரும்பிய நிலையில், அதற்கு பசிபிக் கடற்பகுதியுடன் இணைக்கும் இருப்புப்பாதை அமைப்பது முக்கியமானதாக இருந்தது. ஆனால், இப்பகுதி இருப்புப்பாதை அமைக்க முடியாத அளவுக்கு மலைப்பிரதேசமாக இருந்த நிலையில், அதிகத் தொலைவு பயணிக்காத பாதை அமைக்க மெக்சிகோவின் வடபகுதியில் உள்ள இந்தப் பகுதி உகந்ததாக இருக்கும் என்பதால் இதை அமெரிக்கா கேட்டது. ஆனால் மெக்சிகோ விற்பதற்குத் தயாராக இல்லை. ஆனால், அமெரிக்கா கொடுத்த நெருக்கடியாலும், போரின் தோல்வியால் மெக்சிகோ அரசின்மீது நம்பிக்கையிழந்திருந்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவையாலும் இதற்கு மெக்சிகோ ஒத்துக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்வாறு வாங்கப்பட்ட பகுதி தற்போதைய அரிசோனா, நியூ மெக்சிகோ ஆகிய மாநிலங்களின் பகுதியாக உள்ளது
