பொது இடங்களில் மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னையில் அனுமதியின்றி மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பினை அதிகரித்திடும் வகையில் பல்வகை மரக்கன்றுகள் நடப்பட்டும், குறுங்காடுகள் உருவாக்கப்பட்டும், பராமரிக்கப்பட்டு வருகின்றன. பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்து போன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட சேவைகளுக்கு இதுவரை அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாக பெறப்பட்டு, இந்த விண்ணப்பங்கள் மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சேவையினை பொதுமக்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் காலதாமதத்தை குறைத்து துரித நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி ஒரு புதிய முன்னெடுப்பை தற்பொழுது மேற்கொண்டுள்ளது.

அவ்வாறாக மரங்கள் அகற்றுதல் மற்றும் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட சேவைகள் வனத்துறை மூலமாக நேரடியாக விண்ணப்பித்த நிலையை மாற்றி 12.1.2026 முதல் அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்த சேவையை பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் பசுமைக் குழு போர்ட்டலில் விண்ணப்பிக்கலாம். மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை பெருநகர சென்னை மாநகராட்சி பூங்கா கண்காணிப்பாளர்/மேற்பார்வையாளர், சமூக ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மூலமாக கள ஆய்வு மேற்கொள்ளப்படும். கள ஆய்வின் ஆய்வறிக்கை, பசுமை குழுவிற்கு அனுப்பப்படும்.

பசுமைக் குழுவின் நடவடிக்கை விபரங்கள் குறுஞ்செய்தியாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பெருநகர சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் வாயிலாகவும் விண்ணப்பதாரர்கள் தெரிந்து கொள்ளலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூ.15 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்படும்.

எனவே பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் மரங்கள் அகற்றுதல் மரக்கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம செயலில் மூலமாக பொதுமக்கள் விண்ணப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!