பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது.
திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழா வருகிற ஜனவரி 9-ந்தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு வருகிற 30-ந்தேதி நடைபெற உள்ளது. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருவார்கள். இதன் காரணமாக பக்தர்களின் நலன் கருதி தெற்கு ரெயில்வே சில ரெயில்களை ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் 2 நிமிடங்கள் மட்டும் நின்று செல்வதற்கு உத்தரவிட்டு உள்ளது.

இதுபற்றிய விவரம் வருமாறு:-
வண்டி எண் 12633 சென்னை எழும்பூர்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 29, 30, மற்றும் 31-ந் தேதிகளில் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கு இரவு 9.50 மணிக்கு 9.52 மணிக்கு புறப்பட்டு செல்லும். கன்னியாகுமரி -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்12634) வருகிற 28,29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12.53 மணிக்கு வந்து 12.55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
இதே தேதிகளில் கொல்லம் -சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலும் (வண்டி எண்16102) அதிகாலை 2.08 மணிக்கு வந்து 2.10 மணிக்கு புறப்பட்டு செல்லும். சென்னை எழும்பூர்- கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16101) வருகிற 29,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 9.22 மணிக்கு வந்து 9.24 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

இதே போல் வருகிற 28, 29, மற்றும் 30 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூர்- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12693) நள்ளிரவு 12.12 மணிக்கு வந்து 12.14 மணிக்கும், தூத்துக்குடி- சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12694) அதிகாலை 1.53 மணிக்கு வந்து 1.55 மணிக்கும், சென்னை எழும்பூர்- மதுரை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12637) அதிகாலை 2.18 மணிக்கு வந்து 2.20 மணிக்கு புறப்பட்டு செல்லும். மதுரை-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நள்ளிரவு 12.03 மணிக்கு வந்து 12.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
