என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (வயது 69). கடந்த 48 ஆண்டுகளாக மலையாள திரையுலகில் முன்னணி கலைஞராக திகழ்ந்தவர். இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்ட ஸ்ரீனிவாசன், திரைக்கதை ஆசிரியராகவும் செயலாற்றி வந்தவர். நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதித்த இவர், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சிகிச்சை பெற்ற வந்த நடிகர் ஸ்ரீனிவாசன் இன்று காலை காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், ஸ்ரீனிவாசன் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆடியோ பதிவு மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீனிவாசன் மறைந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பிலிம் இண்ஸ்டிடியூட்டில் என்னுடன் பயின்றவர் ஸ்ரீனிவாசன். மிகச்சிறந்த நடிகர். மனித நேயம் மிக்கவர். நல்ல நண்பனை இழந்துவிட்டேன். அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
