அச்சுத் துறை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. லினோடைப் (Linotype) எனப்படும் புரட்சிகரமான அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாளாக, நியூயார்க் ட்ரிப்யூன் (New York Tribune) வெளியானது. இது செய்தித்தாள் அச்சிடும் முறையை நிரந்தரமாக மாற்றியமைத்தது. விரிவாகச் சொல்வதானால் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை கூட, அச்சகங்களில் நாம் பார்த்திருக்கும் எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கோக்கும் முறைதான் (manual typesetting) செய்தித்தாள்களை வெளியிடப் பயன்பட்டது. இந்த முறையில், எழுத்துக்கள் தனித்தனி மர அல்லது உலோகத் துண்டுகளாக இருக்கும். இந்த எழுத்துத் துண்டுகளை சேமித்து வைக்கும் பெட்டிகள் இரண்டு அடுக்காக இருக்கும். மேல் வரிசைப் பெட்டிகளில் பெரிய எழுத்துக்களும் (capital letters), கீழ் வரிசைப் பெட்டிகளில் சிறிய எழுத்துக்களும் (small letters) வைக்கப்பட்டிருக்கும். இதனாலேயே, இன்று நாம் கணினியில் எழுத்துருக்களைக் குறிப்பிடும்போது பயன்படுத்தும் ‘அப்பர்கேஸ்’ (Uppercase) மற்றும் ‘லோயர்கேஸ்’ (Lowercase) ஆகிய சொற்கள் உருவாயின. இத்தனைக்கும் செய்தித்தாள்களின் தோற்றம் வெகு காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது: 1566 இல், இத்தாலியின் வெனிஸ் நகரில் கையெழுத்துப் பிரதியாக முதல் செய்தித்தாள் வெளியானது. 1605 இல், ஜெர்மனியில் முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் வெளியானது. அச்சிடும் தொழில்நுட்பங்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்ட 1800கள்தான் நவீன செய்தித்தாள்களின் தொடக்கமாகக் கருதப்படுகின்றன. 1814 இல், தி டைம்ஸ் (The Times) இதழ் ஒரு மணிநேரத்திற்கு 1,100 பிரதிகள் அச்சிடும் இயந்திரத்தை வாங்கியது அன்றைய காலகட்டத்தில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது. அதே சமயம் அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மானியரான ஓட்மார் மெர்ஜென்டாலர் (Ottmar Mergenthaler), சூடான உலோகத் தகட்டில் எழுத்துகளைப் பதித்து அச்சிடும் லினோடைப் முறையை உருவாக்கினார். நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஜேம்ஸ் க்ளஃபேன் (James Clephane), தனது வேலைக்கு உதவியாக ஒரு தட்டச்சு இயந்திரத்தையும் உருவாக்கியிருந்தார். 1876 இல், க்ளஃபேன் மெர்ஜென்டாலரை அணுகியபோது, அந்தத் தட்டச்சு இயந்திரத்திலிருந்த குறைகளைக் கண்டறிந்து மெர்ஜென்டாலர் சரிசெய்தார். நீதிமன்ற ஆவணங்களை இன்னும் விரைவாக அச்சிட ஒரு கருவி தேவையென்று கருதிய க்ளஃபேனின் தூண்டுதலில்தான், லினோடைப் இயந்திரத்தை மெர்ஜென்டாலெர் உருவாக்கினார். இதனால், லினோடைப் எந்திரத்தின் தந்தை என்று க்ளஃபேன் குறிப்பிடப்படுகிறார். அவரின் பங்களிப்பில் விசைப்பலகையின் மூலம் உள்ளிடப்பட்டு, ஒரே நேரத்தில் ஒரு வரி முழுவதையும் (Line-of-type) அச்சிடும் லினோடைப் எந்திரம் அச்சுத் துறையில் ஒரு மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்தது. அடுத்த நூறாண்டுகளுக்கு செய்தித்தாள் அச்சிடுவதற்கான முதன்மையான முறையாகவும் இது விளங்கியது. இதனால், ஓட்மார் மெர்ஜென்டாலர் ‘இரண்டாம் கூடன்ஸ்பர்க்’ என்று புகழப்படுகிறார். பின்னாளில் ‘ஃபோட்டோ டைப்செட்டிங்’ (Phototypesetting) மற்றும் ‘ஆஃப்செட் லித்தோகிராஃபி’ (Offset Lithography) போன்ற பிற அச்சிடும் தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், செய்தித்தாள் துறையில் 1970கள் மற்றும் 80கள் வரை லினோடைப் இயந்திரமே கோலோச்சியது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கணினி அச்சுக்கோப்பு (Computerized Typesetting), மற்ற அனைத்துத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையுமே இன்று முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. இருப்பினும், லினோடைப் இயந்திரம் அச்சுத் துறையில் ஏற்படுத்திய புரட்சி என்றும் நினைவுகூரப்படும்.
“ஓக்‘ பறவை” கடைசி ஜோடி கொல்லப்பட்ட நாளின்று. அல்கா இம்பென்னிஸ் , பிங்குயினஸ் இம்பென்னிஸ் என்ற ழைக்கப்படும் அறிய வகை அழிந்த பறவையினமே “பெரிய ஓக்’ . பறக்க முடியாத இவை, மற்ற ஓக் பறவைகளை விட பெரிதாகும். கனடா மற்றும் அதன் அருகிலுள்ள தீவுகள், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, அயர்லாந்து, பிரிட்டன் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் இவை காணப்பட்டன. எட்டாம் நூற்றாண்டிலிருந்து இவற்றை உணவுக்காகவும், ரோமத்தை மெத்தைகள் தயாரிக்கவும் மனிதர்கள் வேட்டையாடினர். அழிவை சந்திக்கும் வரை வேட்டையாடப்பட்டதே இவற்றின் துரதிஷ்டம். கடைசியாக 1844 ஜூலை மூன்றில் ஐஸ்லாந்து அருகே தீவில் இப்பறவையின் கடைசி ஜோடிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை பறவை என்றாலும், நன்கு நீந்தும் தன்மை கொண்டதால், இவை நீருக்குள் மூழ்கி செல்லும் வல்லமை படைத்தது. இவற்றின் தலையிலுள்ள வெள்ளை நிறத்தை வைத்து “பென் கிவின்'(வெண் தலை) என அழைத்தனர். இவற்றின் தோற்றம் கொண்டதால் தான் “பென்குயினுக்கு நாளடைவில் இப்பெயர் சூட்டப்பட்டது. ஒரு வடத்திற்கு ஒரு முட்டை மட்டுமே இடும் இவற்றின் இனப்பெருக்கம் மற்ற பறவைகளை விட குறைவானதாகும். மனிதனின் வேட்டைக்கு ஏற்றவாறு உற்பத்தி இல்லாமல் போனதும், இவற்றின் அழிவை எளிதாக்கியது. இன்று ஆய்வாளர்களுக்கும் எட்டாத தூரத்தில் ரகசியமாக அடங்கி போனது இவற்றின் அழிவு. இருப்பினும் இவை வாழ்ந்த, இடம் பெயர்ந்த தீவுகளில் “பெரிய ஓக்’ குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
எஸ் வி சுப்பையா பாகவதர் காலமான நாள் 1930-40 களில் நாடக மேடையிலும் கிராமபோன் இசைத்தட்டுகளிலும் மிகப்பிரபலமாய் விளங்கிய பெயர்… ! நல்ல குரல்வளம் இருந்தால் மட்டுமே சினிமாவில் நுழையமுடியும் என்று இருந்த அன்றைய காலத்தில் சினிமா வாய்ப்புகளைப்பெற பலர் இவரின் பாடல்களையே பாடிக்காட்டினார்கள்… (பின்னாட்களில் நடிகர்திலகத்தின் வசனங்களை பேசி பலர் வாய்ப்புத்தேடியதுபோல்)… மூன்றே மூன்று படங்களில் மட்டுமே எஸ் வி சுப்பையா பாகவதர் நடித்துள்ளார்… ‘நந்தனார் (1933), சுபத்ராஹரன்(1935), கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி(1938)’… ஆனால் கிராமபோன் தட்டுகளில் ஒலித்த அவரின் தனிப்பாடல்களைக் கேட்டு மெய்சிலிர்க்க ஒரு பெரும் ரசிகர் பட்டாளத்தையே இவர் கொண்டிருந்தார்… ! இவர் நடிப்பில் பிரபலமான “சுபத்ராஹரன்” நாடகம் அதேபெயரில் திரைப்படமானபோது நாடகத்தில் ஏற்றிருந்த அதே அர்ஜுனன் வேடமேற்று திரையிலும் நடித்தார்… நாடகத்தில் திரை விலகி இவர்பாடும் அறிமுகப்பாடலான “ஜெய ஜெய கோகுல பாலா” பாடல் மிகப்பிரபலம்… அதனால் திரைப்படத்திலும் அந்தப்பாடலைப்பாடிக்கொண்டெ முதல் காட்சியில் தோன்றினார்… 1938-இல் வெளிவந்த கம்பர் (அல்லது) கல்வியின் வெற்றி படத்தில் கம்பராக நடித்து பலபாடல்களைப் பாடியுள்ளார்… ” வாணி வரம் அருள் கல்யாணி”, “ஞான சந்திர பிரபை”, “தாய்வள நாடே இனிதாய் விடை தருவாய் ” போன்ற பாடல்கள் பிரபலம் அடைந்தன… பாடல்கள் அனைத்தையும் டி கே சுந்தர வாத்தியார் எழுதினார்… பின்னாட்களில் மிகச்சிறந்த குணசித்திர நடிகராய் விளங்கிய நடிகர் எஸ் வி சுப்பையா அல்ல இவர் … “சங்கீத வித்வத்சிகாமணி” என அழைக்கப்பட்ட “சாம்பூர் வடகரை சுப்பையா பாகவதர்” எனும் எஸ் வி சுப்பையா பாகவதர் இவர்.
எம்.எல்.வசந்தகுமாரி தன்னுடைய தனித்தன்மை வாய்ந்த குரல் இனிமையாலும், கர்நாடக சங்கீத உலகிலும், திரையிசையிலும் தனி முத்திரை பதித்தத் தலை சிறந்த பாடகியருள் எம்.எல்.வசந்தகுமாரியும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தது. இவர் பாடி புகழின் உச்சிக்குச் சென்ற பாடல்கள் எண்ணற்றவை. இந்த இசை மேதை தனக்குப் பின் ஒரு திறமை மிக்க சீடர்களை உருவாக்கிவிட்டு அவர்கள் இன்று கர்னாடக இசையுலகில் தலை சிறந்து விளங்குவதற்கு இவர் காரணமாக இருந்திருக்கிறார். எம்.எல்.வி. என்று அறியப்பெற்ற எம்.எல்.வசந்தகுமாரி ‘மதராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி’ என்பதன் சுருக்கம். 1928 ஜூலை 3ஆம் நாள் பிறந்தவர் இவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல் வேறு பல மொழித் திரைப் படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. பிரபல சங்கீத வித்வான் ஜி.என்.பாலசுப்பிரமணியன் அவர்களிடம் சங்கீதம் பயின்றவர் இவர். மிகவும் இளம் வயதில் “சங்கீத கலாநிதி” விருதினைப் பெற்ற கலைஞர் இவர். அப்போதைய திரை உலகின் ஜாம்பவானாகத் திகழ்ந்த ஜி.இராமனாதன் அவர்களுக்கு எம்.எல்.வி.யின் குரல் மிகவும் பிடிக்கும். ஆகவே அவர் இசை அமைத்த திரைப்படங்களில் எம்.எல்.வியின் பாடல் இடம்பெறுவது வழக்கமாக இருந்தது. பல பாடல்களை இவர் ஜி.ராமனாதன் இசையில் பாடியிருக்கிறார். ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் தவிர, முத்துசாமி தீட்சிதர் பாடல்களோடு புரந்தரதாசரின் பாடல்களையும் பிரபலப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. புரந்தர தாசரின் பாடல்கள் தமிழகத்தில் அதிகமாகப் பரவ இவரும் ஒரு காரணமாக இருந்திருக்கிறார். அவருடைய “பாரோ கிருஷ்ணையா” போன்ற பாடல்கள் அடங்கும். இவர் பல சிஷ்யைகளைத் தயார் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத் தக்கவர்கள் திருமதி சுதாரகுநாதனைச் சொல்லலாம். தன்னுடைய மகளான பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீவித்யாவும் இவரிடம் இசை பயின்றவர்தான். வயலின் இசை மேதையான கன்னியாகுமாரி இவருக்குப் பலகாலம் பக்க வாத்தியம் வாசித்தவர் என்கிற பெருமையைப் பெற்றவர். புகழ்பெற்ற இசைப் பாரம்பரியம் உள்ளவர் எம்.எல்.வி. இவருடைய தந்தையார் அய்யாசாமி ஐயர் மிகச் சிறந்த பாடகர். தாயார் லலிதாங்கியும் இசைக் கலையில் புகழ் பெற்றவர். சென்னையில் ஒரு கான்வெண்டில் கல்வி கற்று வந்த சமயத்தில் இவருடைய இனிய குரலையும், பாடும் திறமையையும் கண்டு குரு ஜி.என்.பாலசுப்பிரமணியன் இவரை ஒரு சிறந்த இசைக் கலைஞராக ஆக்க முடிவு செய்தார். குடும்பமும் இசைத் துறையில் ஈடுபட்டிருந்த காரணத்தால் எம்.எல்.வி. இசையைத் தன் வாழ்க்கைக்கு முக்கியமான துறையாக ஏற்றுக் கொண்டார். எம்.எல்.வி. தன் 12ஆவது வயதிலேயே தனியாக கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினார். முதலில் தன் தாயாருடன் பாடிவந்த இவர் பின்னர் தனியாகப் பாடத் துவங்கினார். இசைத் துறையில் நுழைந்து சில ஆண்டுகளுக்குள் இவர் தனக்கென்று ஒரு முக்கிய இடத்தைப் பிடித்து விட்டார். இவர் இசைக் கச்சேரிகளைக் கேட்க ரசிகர் மானிலம் முழுவதும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். இவருடைய தாயார் புரந்தரதாசரின் சாகித்தியங்களை நன்கு அறிந்தவராதலால் அவரிடமிருந்து இவரும் அவற்றைக் கற்றுக் கொண்டு சிறப்பாகப் பாடத் தொடங்கினார். முன்பே குறிப்பிட்டபடி திரையிசைத் துறை இவரை விட்டுவைக்கவில்லை. 1946 முதல் திரையிசையில் பாடிவந்தாலும் முதன்முதலாக “மணமகள்” எனும் படத்தில் 1951இல் இவர் பாடிய “எல்லாம் இன்பமயம்” எனும் பாடலும், மகாகவி பாரதியாரின் “சின்னஞ்சிறு கிளியே” எனும் பாடலும் இவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. பாரதியார் இந்தப் பாடலுக்கு வேறு ராகத்தில் அமைத்திருந்தாலும் இசை அமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமன் மற்றொரு ராகத்தில் பாடிய இந்தப் பாடல்தான் இன்றும் பாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது. 1952இல் தாய் உள்ளம் எனும் படத்தில் பாடிய “கொஞ்சும் புறாவே” எனும் பாடல், ஓர் இரவில் பாடிய “ஐயா சாமி” எனும் பாடல் போன்ற எண்ணற்ற பாடல்கள் இவருக்கு பெருமை சேர்த்தன. ராஜாஜி அவர்கள் இவருக்கும் விகடம் கிருஷ்ணமூர்த்திக்கும் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளைச் செய்தார். சிறப்பாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு சங்கரராமன், ஸ்ரீவித்யா எனும் இரு குழந்தைகள். ஸ்ரீ வித்யா சங்கீதத்திலும் சிறந்து விளங்கினார். ஆனாலும் திரைத்துறையில் ஈடுபட விரும்பி இவர் ஒரு சிறந்த நடிகையாக ஆகி பரிணமித்தார் என்பது அனைவரும் அறிவர். புரந்தரதாசரின் சாகித்தியங்களை ஆய்வு செய்து இவர் மைசூர் பல்கலைக் கழகத்தின் முனைவர் பட்டத்தைப் பெற்றார். மத்திய அரசின் “பத்ம பூஷன்’ விருதையும், “சங்கீத கலாநிதி” விருதையும் பெற்றார். 1990இல் இவர் இவ்வுலக வாழ்வை நீத்து அமரரானார்.
எல்லோரையும் கவர்ந்த எஸ்.வி.ரங்காராவ் பிறந்த நாளின்று! ‘‘முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக அண்ணன் தம்பிபிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒண்ணுக்கள்ஒண்ணாக” -‘அன்புச் சகோதரர்கள்’ படத்தில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடலை பாடி நடித்த நடிகர் எஸ்.வி.ரங்காராவை யாரும் மறந்திருக்க முடியாது. அந்தளவிற்கு பாசமானஅண்ணனாக அவ்வளவு சிறப்பாக நடித்திருந்தார். தெலுங்கு பேசும் கிழக்கு கோதாவரி மண்ணில், ராஜமுந்திரி அருகிலுள்ள தவுலேஸ்வரம் எனும் கிராமத்தில் 1918-ம் ஆண்டு, ஜூலை 3-ம் தேதி, சுங்கத்துறை ஆய்வாளர் சாமர்லா கோட்டீஸ்வர ராவ் – சாமர்லா லட்சுமி நரசாயியம்மா தம்பதியின் மகனாகப் பிறந்தார் எஸ்.வி.ரங்காராவ். தாயார் இட்ட பெயரும் குடும்பப் பெயருமாக இணைந்து ‘சாமர்லா வெங்கட ரங்காராவ்’ என அழைக்கப்பட்டார். இதன் சுருக்கப் பெயராக ‘எஸ்.வி.ரங்காராவ்’ எனும் பெயர் நிலைத்துவிட்டது. அவரது பள்ளிப் படிப்பு பிறந்த கிராமத்திலும் சென்னையிலும் கழிந்தது. விசாகப்பட்டணம், காக்கிநாடாவில் கல்லூரி வாழ்க்கை. இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று தீயணைப்புத் துறையில் பணியில் சேர்ந்தார். பள்ளிக் கல்வியில் தொற்றியது நடிப்புக் கிறுக்கு. பள்ளி நாடகத்தில் அவர் போட்ட முதல் வேடம், பில்லி சூனிய மந்திரவாதி பாத்திரம். காக்கிநாடாவில் தொழில்முறையற்ற (அமெச்சூர்) நாடகக்குழு ஒன்றில் இணைந்து தன்னை வளர்த்துக் கொண்டார். இங்கு இவரது சம பங்காளிகளாக இருந்தவர்கள், பின்னாளில் புகழ்பெற்ற நடிகரும் இயக்குநருமான பி.எஸ்.சுப்பாராவ், அஞ்சலி தேவி, ஆதி நாராயணராவ் போன்றவர்கள். இந்த நாடகக்குழுதான் இவருக்கு நாடகப் பள்ளியாக அமைந்தது.எஸ்.வி.ரங்காராவின் உடல்மொழியும் குரல்மொழியும் ஒருங்கிணைந்து மாயாஜாலம் காட்டின. அதேசமயம் மிக இயல்பான நடிப்பு, அலட்டல், மிரட்டல்… இதற்கான தடயங்களை அவர் ஷேக்ஸ்பியரிடமிருந்து எடுத்துள்ளார். இவர் திரைப்படங்களில் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் மறக்க முடியாத ஒதுக்க முடியாத உன்னத உறவுகளை கொண்டதாக இருக்கும். நல்லகணவன், பாசமான அண்ணன், அன்பான அப்பா, மறக்க முடியாத மாமனார், கம்பீரமான தாத்தா, கௌரவமான போலீஸ் அதிகாரி, ஊர் போற்றும் மனிதர், கொடூரமான வில்லன், மற்றும் மந்திரவாதி, புராண, இதிகாச கதாபாத்திரங்கள் என்று அத்தனை வேடங்களையும் ஏற்று சிறப்பாக நடித்தார். இவருக்காக பல கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டன. சில கதாபாத்திரங்கள் இவர் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என இவரைத் தேடி வந்திருக்கின்றன. அப்படிப்பட்ட உன்னத கலைஞர் சிறந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ். இவர் தமிழ், தெலுங்கு என்று இருநூறுக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அத்ததனைப் படங்களும் பிரபலமான சூப்பர் ஹிட்டான படங்களாகும். விஜயா வாஹினி தயாரித்த ‘பாதாள பைரவி’ (1951) படம்தான் எஸ்.வி.ரங்காராவ் நடித்து அறிமுகமான முதல் தமிழ்ப் படம். இதில் மந்திரவாதியாக வேடமேற்று நடித்தார். ‘மாயாபஜார்’ படத்தில் கடோத்கஜனாக காமெடி கலந்த வேடத்தில் நடித்தார். ‘சம்பூர்ண இராமாயணம்’ படத்தில் இராவணனாக நடித்தார். ‘மிஸ்ஸியம்மா’ படத்தில் வாடகைக்கு வருபவர்களிடமும் பாசம் காட்டும் வீட்டு உரிமையாளர் வேடத்தில் நடித்தார். ‘கற்பகம்’ படத்தில் அப்பாவாகவும், நல்ல மாமனாராகவும் இருமாறுபட்ட தோற்றத்தில் நடித்தார். நானும் ஒரு பெண் படத்தில் கருமைநிறம் கொண்ட மருமகளை வெறுக்கவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல் தவிக்கும் நல்ல மாமனாராக நடித்தார். ‘கைகொடுத்த தெய்வம்’ படத்தில் வெகுளிப்பெண் (சாவித்ரி)யை பெற்றெடுத்துவிட்டு அவஸ்தைப்படும் தந்தையாக நடித்திருந்தார். ‘அன்னை’ படத்தில் நடிப்பின் இலக்கணம் பி.பானுமதிக்கு ஜோடியாக நடித்தார். ‘எங்கள்வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆரின் மாமனாராக நடித்தார். ‘படிக்காத மேதை’ படத்தில் உலகம் தெரியாத ஒரு அப்பாவி மனிதனுக்கு அன்பைக் காட்டும் மாமாவாக நடித்தார். ‘நீதிக்குப்பின் பாசம்’ படத்தில் கௌரவமான உயர் போலீஸ் அதிகாரியாகவும், பிள்ளைகளுக்கு பிரியமான தந்தையாகவும், மனைவிக்கு அன்பான கணவனாகவும், வேறுபாடுகளைக் காட்டி நடித்தார். ‘கண் கண்ட தெய்வம்’ படத்தில் தன்னைச் சார்ந்து வாழும் அன்பான தம்பிக்கு நல்ல அண்ணனாகவும், அவரது குடும்பத்திற்கு பாதுகாவலராகவும் நடித்திருந்தார். ‘அன்னை இல்லம்’ படத்தில் சிவாஜிக்கு தந்தையாகவும், மனைவி எம்.வி.ராஜம்மாவிற்கு நல்ல கணவராகவும் நடித்திருந்தார். விஜயா சுரேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்த எம்.ஜி.ஆர்.நடித்த ‘நம்நாடு’ படத்தில் எம்.ஜி.ஆருடன் மோதும் வில்லனாகவும், ‘ராஜா’ படத்தில் கொடூரமான வில்லனாக சிவாஜியுடன் மோதுபவராகவும் நடித்திருந்தார். இப்படி பலபடங்களில் பல்வேறு விதமான வேடங்களை ஏற்று தனது குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களைப் பெற்றார் எஸ்.வி.ரங்காராவ். இன்றுவரை இவரது குரலையும் பாவனையையும் பலகுரல் கலைஞர்களால் ‘மிமிக்ரி’ செய்ய முடியாதது ஒன்றேபோதும் இந்த மாபெரும் கலைஞனின் தனித்துவத்தைச் சொல்ல. ஒரே ஒருவர் என்ற பொருள்பட ‘ஒக்கே ஒக்கடு’ என விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருசேரப் பாராட்டும் ரங்கா ராவ், நடிப்புலகில் சாதிக்க நினைப்பவர்களுக்கு மிகச் சிறந்த பள்ளிக்கூடம். ஆறடிக்கும் மேலான தோற்றம், சரித்திர வேடங்களைத் தாங்கும் கம்பீரம், பேசும் கண்கள், யாரையும் பின்பற்றாத பாணி , நாடகத்திலிருந்தது வந்தாலும் இயல்பான நடிப்பு, நவரசங்களிலும் வெளிப்பட்ட திறமை என்பவை இவரின் சிறப்புகளை இன்று ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நினைவு கொள்கிறது.
உலகப் புகழ்பெற்ற கேரள திரைப்பட இயக்குநர் எழுத்தாளர் அடூர் கோபாலகிருஷ்ணன் (Adoor Gopalakrishnan) பிறந்தநாள் இன்று (ஜூலை 3). . திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம், அரசியல் அறிவியல், பொது நிர்வாகத்தில் பட்டம் பெற்று. அரசு அதிகாரியாக சிறிதுகாலம் பணியாற்றினார்.
திருவனந்தபுரம் சித்திரலேகா ஃபிலிம் சொசைட்டி, சித்திரலேகா ஃபிலிம் கோ-ஆபரேட்டிவ் ஆகிய அமைப்புகளை நிறுவினார். இவை கேரள திரைப்படக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தன. இவரது முதல் திரைப்படமான ‘ஸ்வயம்வரம்’ 1972-ல் வெளிவந்தது. முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். குறிப்பாக சினிமாவில் அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்தார். ‘சினிமா வெறும் கேளிக்கைக்கானது மட்டும் அல்ல; கலை, கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் முக்கிய பங்காற்ற முடியும்’ என்பதை தனது திரைப்படங்கள் மூலம் நிரூபித்தார்.
நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன் உள்ளிட்ட 11 முழு நீளப்படங்கள், கலாமண்டலம் கோபி, சோழப் பாரம்பரியம், யட்சதானம் உள்ளிட்ட ஏறக்குறைய 30 குறும்படங்கள் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார்.
‘கொடியெட்டம்’, ‘எலிப்பத்தாயம்’, ‘முகாமுகம்’, ‘மதிலுகள்’ போன்ற சிறந்த படைப்புகள் மூலம் நாட்டின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்தார். இவரது கதை சொல்லும் பாணி தனித்துவம் வாய்ந்தது. ‘சினிமாயுடே லோகம்’, ‘நிர்மால்யம்’, ‘எலிபத்தாயம்’ உட்பட பல நூல்களையும் எழுதியுள்ளார்.
பத்மஸ்ரீ, பத்மவிபூஷண், தாதாசாஹிப் பால்கே, ‘ஸ்வயம்வரம்’ படத்துக்காக தேசிய விருது, சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது 4 முறை, சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான தேசிய விருது 3 முறை, கேரள மாநில திரைப்பட விருதுகள், பிரிட்டிஷ் திரைப்பட இன்ஸ்டிடியூட் விருது, யுனிசெஃப் திரைப்பட பரிசு, ஓசிஐசி திரைப்பட பரிசு, இன்டர்ஃபிலிம் பரிசு என நீள்கிறது இவரது பரிசுப் பட்டியல்.
இசைமேதை டி.ஆர்.பாப்பா பிறந்த நாளின்று. தஞ்சாவூர் ராதாகிருஷ்ண பிள்ளை என்ற இயற்பெயர் கொண்ட டி.ஆர்.பாப்பா, 1923ம் ஆண்டு பிறந்தவர். தனதுதந்தை ராதாகிருஷ்ண பிள்ளை மற்றும் கும்பகோணம் வடிவேல் பிள்ளை ஆகியோரிடம் இசை கற்ற பாப்பா1965ம் ஆண்டு திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார். சுமார் 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர்இசையமைத்துள்ளார். சிந்துபைரவி ராகத்தில் அவர் இசையமைத்த சின்னஞ்சிறு பெண் போலே, சித்தாடை உடை உடுத்தி என்ற பாடல்தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் இன்றும் கூட ஒலித்துக் கொண்டுள்ளது. இவரது இரவும் பகலும் படம் மூலம்தான் தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்ட் என்று புகழப்பட்ட ஜெய்சங்கர்திரையுலகில் காலடி எடுத்து வைத்தார். டி.ஆர்.பாப்பாவும், சீர்காழி கோவிந்தராஜனும் சேர்ந்து புகழ் பெற்ற பலமெல்லிசைப் பாடல்களை கொடுத்துள்ளனர். சீர்காழி கோவிந்தராஜனின் குரலில், டி.ஆர்.பாப்பாவின் இசையில் உருவான அபிராமி அந்தாதி பாடல் கேசட் மிகப்பெரிய அளவில் பிரபலமானது. திமுக தலைவர் கருணாநிதியின் வசனத்தில் உருவான பல படங்களுக்குஇசையமைத்துள்ளார் பாப்பா.கலைஞர் மு.கருணாநிதிக்கும் இவருக்கும் நீண்டகால நட்பு உண்டு. எத்தனையோ தடவை அவர் இவருக்கு உதவி புரிந்து வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார். 1989-இல் முதலமைச்சராக ஆனதும் இவரை அரசு இசைக் கல்லூரியில் கௌரவ இயக்குநராக நியமித்தார். பிறகு அவரது ஆட்சி கலைக்கப்பட்ட போது முதன்முதலாக ராஜினாமா செய்தது இவர்தான். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முதல்வரான போது கலைஞர் பழையனவற்றை மறக்காமல் இவரை மீண்டும் தமிழ்நாடு இசைக் கல்லூரி இயக்குநராக பதவியேற்க வைத்தார். கலைமாமணி, இசைச்செல்வம், கலைச் செல்வம், இசைப் பேரறிஞர் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். தேவாரம், திவ்ய பிரபந்தம், அபிராமி அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவெம்பாவை, வேல் விருத்தம் உள்பட பல காவியங்களுக்கு இசையமைத்த பெருமை இவருக்கு உண்டு. நல்லவன் வாழ்வான், மல்லிகா, குமார ராஜா, அருணகிரி நாதர், எதையும் தாங்கும் இதயம், அன்பு, தாய் மகளுக்குக் கட்டிய தாலி, ஆசை, விளக்கேற்றியவள், டீச்சரம்மா, ஏன், விஜயபுரி வீரன், பிறந்த நாள், காதல் படுத்தும் பாடு, அவரே என் தெய்வம், யார் ஜம்புலிங்கம், மறு பிறவி, ரங்கோன் ராதா, வைரம், குறவஞ்சி, அவசர கல்யாணம், ராஜா ராணி, இரவும் பகலும், மாப்பிள்ளை, மகனே நீ வாழ்க போன்ற படங்கள் உட்பட அறுபது படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழில் மட்டுமல்லாது சில சிங்கள, மலையாளப் படங்களுக்கும் இசையமத்துள்ளார். 15.10.2004-ஆம் ஆண்டு தனது 81-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
