இன்றைய முக்கிய நிகழ்வுகள் (மார்ச் 05)

1496 – கிழக்கு, மேற்கு, வடக்குக் கடற்பகுதிகளில் பயணித்து, கிறித்தவர்கள் அதுவரை அறிந்திராத புதிய நிலப்பகுதிகளைக் கண்டறிய அனுமதியளிக்கும் உத்தரவை, இத்தாலிய மாலுமியான ஜான் கேபாட்-டுக்கு இங்கிலாந்தின் ஏழாம் ஹென்றி அரசர் வழங்கிய நாள் அக்காலத்தில், ஹை-ப்ராசில் என்னும் தீவைக் கண்டறிய பலரும் விரும்பினர். 1325 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட நிலப்படங்களில்(மேப்) சேர்க்கப்பட்டிருந்த இது உண்மையில் ஒரு கற்பனையான தீவாகும். இவ்வாறு இடம்பெற்று, ஆனால் உண்மையில் இல்லையென்று பின்னாளில் கண்டுபிடிக்கப்பட்டவை பொய்த்தீவு(ஃபேண்ட்டம் ஐலேண்ட்) எனப்படுகின்றன. ஹை-ப்ராசில் தீவு பனிமூட்டத்தால் மூடப்பட்டே இருக்கும் என்றும், ஏழாண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு நாள் மட்டும் வெளித்தெரியும் என்றும் பண்டைய அயர்லாந்தில் நம்பிக்கை நிலவியது. ஐரிஷ் மொழியில் ப்ரஸ் என்றால் அழகிய என்றும், இல் என்றால் தீவு என்றும் பொருள். ப்ரசெய்ல் குடிகள் என்று பொருள்படும் ஐ-ப்ரசெய்ல் என்ற சொல்லிலிருந்து இப்பெயர் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால், கேபாட் வந்திறங்கிய இடம், வட-அமெரிக்காவில் தற்போது கனடாவைச் சேர்ந்ததான நியூஃபவுண்ட்லேண்ட் தீவாகும். 1492இல் கொலம்பஸ் வந்திறங்கியது இன்னும் தென்பகுதியில் உள்ள தற்போதைய பகாமாஸ் தீவாகும். கொலம்பஸ் வந்திறங்கிய நாள் அமெரிக்காவில் கொண்டாடப்படுவதுபோல, கேபோட் வந்ததன் 500ஆம் ஆண்டு, கனடா, இங்கிலாந்து அரசாங்கங்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நகைச்சுவை என்னவென்றால், இந்தியாவைத் தேடிப்போய், கொலம்பஸ் கண்டுபிடித்த இடத்திற்கும் இந்தியாவிற்கும் தொடர்பில்லை என்பதைப்போலவே, கேபோட் கண்டுபிடித்த இடத்திற்கும் பிரேசிலிற்கும் தொடர்பில்லை. பிரேசிலையும்கூட, இந்தியாவைத்தேடிவந்த போர்ச்சுகீசியத் தளபதியான பெட்ரோ காப்ரால்-தான் 1500இல் கண்டுபிடித்தார். ஆனால், இதற்கும், ஹை-ப்ராசிலுக்கும் தொடர்பில்லை! இங்கு கிடைத்த செந்நிற மரத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட சிவப்புச் சாயம் ஐரோப்பாவில் புகழ்பெற்றது. ப்ராசா என்னும் போர்ச்சுகீசியச் சொல்லுக்கு கனன்றுகொண்டிருக்கும் தீ என்று பொருள். அதைப்போன்ற சிவப்;பு என்பதற்காக இம்மரத்தைப் போர்ச்சுகீசியர்கள் பிரேசில்வுட் என்றழைத்ததால் இந்நிலப்பரப்பிற்கு பிரேசில்வுட்-டின் நிலம் என்று பெயரிட்டனர். அதுவே, பிரேசில் என்று மாறியது.

பாஸ்டன் கலவரம் போராட்டம் நடைபெற்ற நாள் (1770) 1700-களில், ஐரோப்பிய கண்டத்தில், காலணி நாடுகளைப் பிடிக்க ஏற்பட்ட போட்டி, நாடுகளுக்கிடையே போர்கள் ஏற்பட முக்கிய காரணமாயிற்று. அத்தகைய சூழலில், பிரான்ஸ் நாட்டுடன் ஏற்பட்ட போர் உள்ளிட்ட காரணங்களால், ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்க எண்ணியது பிரிட்டன். இந்த காலகட்டத்தில், அமெரிக்காவிலும் பல புதிய குடியேற்றங்களை அமைத்திருந்தது பிரிட்டன். நிதித் தேவையைச் சமாளிக்க, புதிய காலணி நாடுகளுக்கு பல்வேறு புதிய வரிகளைச் சுமத்தியது. இதனை விரும்பாத அமெரிக்க மக்கள், பிரிட்டனுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தினர். குறிப்பாக, அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், பெரிய போராட்டம் நடைபெற்றது. பல்வேறு மக்கள் கூட்டமாக வந்து படையினர்கள் மீது பனி உருண்டைகளை எறிந்தனர். இதனை ஒடுக்க, பிரிட்டன் தனது படையை அங்கு அனுப்பியது. அப்படைகளுடன் ஏற்பட்ட சண்டையில், 5 அமெரிக்கர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்நிகழ்வு, அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்து, அமெரிக்க சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது

வோல்ட்டா இறந்த தினம் அலெசான்றோ வோல்ட்டா அல்லது அலிசாண்ட்ரோ வோல்ட்டா(Alessandro Volta: 1745-1827)இத்தாலிய இயற்பியலாளர்.[மின்துறை என்று ஒரு துறை உண்டாவதற்கே வழிகோலிய முன்னோடி அறிவியல் அறிஞர்களில் ஒருவர். 1800 களில் முதல் மின்கலத்தை உருவாக்கியவர். மீத்தேன் வாயுவைக் கண்டறிந்தவர்.[3] இவர் இத்தாலி நாட்டில் லொம்பார்டி என்னும் மாவட்டத்திலே உள்ள கோமோ என்னும் ஊரில் பிப்ரவரி 18, 1745ல் பிறந்தார். மின் ஆற்றல் மற்றும் மின் விசையைப்பற்றி ஆய்வு செய்ய மிகவும் ஆர்வமுடன் இருந்தார். இவ்வார்வத்தின் காரணமாகவே இவர் இலத்தீன் மொழியில் தம் மின் கண்டுபிடிப்பைப்பற்றி ஒரு கவிதையே எழுதிவிட்டார். இன்று அன்றாடம் பேச்சு வழக்கில் கூறப்படும் 110 வோல்ட்டு மின் அழுத்தம், 230 வோல்ட்டு மின் அழுத்தம், என்பதில் உள்ள வோல்ட்டு என்னும் மின் அழுத்த அலகானது இவருடைய பங்களிப்பைப் பெருமை செய்யவும், நினைவு கூறவுமே அமைக்கப்பட்டது. இதனாலேயே மின் அழுத்தத்தை அளக்கும் கருவியை வோல்ட்டளவி(Voltmeter) என்று அழைக்கின்றோம். மின்னழுத்தத்தை வோல்ட்டழுத்தம் என்றும் குறிக்கப்பெறும்.

1891 – தற்போதைய தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டியின் வடிவம் உருவாவதிலும், பரவுவதிலும் மிகமுக்கிப் பங்காற்றிய ‘நேஷனல் ஸ்போர்ட்டிங் க்ளப் (என்எஸ்சி)’, லண்டனில் தொடங்கப்பட்ட நாள் மார்ச் 5. மனிதகுலத்தின் மிகப் பழைமையான விளையாட்டுகளில் குத்துச்சண்டையும் இருந்திருக்கிறது. கி.மு.3000க்கு முந்தைய சுமேரிய நாகரிகத்தில் (தற்போதைய இராக்), குத்துச்சண்டை பற்றிய சித்தரிப்புகள் கிடைத்துள்ளன. பண்டைய மத்தியக்கிழக்கு, எகிப்து ஆகிய பகுதிகளில், கி.மு.2000களில் குத்துச்சண்டையின்போது, கையில் பட்டைகளை அணிந்திருப்பது சித்தரிக்கப்பட்டுள்ளது. ஏஜியான் தீவுகளின் மினோவான் நாகரிகத்தில் கி.மு.1500களின் குத்துச்சண்டையில் கையுறை காணப்பட்டுள்ளது. கி.மு.1350 கால எகிப்திய சிற்பங்களில், குத்துச்சண்டை வீரர்களும், பார்வையாளர்களும் காணப்படுகின்றனர். சங்ககாலத்தில்(கிறித்துவுக்கு முன்பு) புகார் நகரின் போட்டி விளையாட்டு மன்றத்தில், கையால் தாக்கி விளையாடப்பட்ட விளையாட்டு பற்றிய குறிப்புகள் உள்ளன. கி.மு.688இல் நடைபெற்ற 23ஆம் ஒலிம்ப்பிக் போட்டிகளில், குத்துச்சண்டை இடம்பெற்றது. பண்டைய ரோமில் புகழ்பெற்றிருந்த குத்துச்சண்டை, வாள் முதலான ஆயுதங்களை தரித்துக்கொள்ளும் பழக்கம் வந்தபின், முக்கியத்துவம் இழந்தது. ஆங்காங்கே எஞ்சியிருந்த இது, 15ஆம் நூற்றாண்டுக்குப்பின், வாள் தரித்துக்கொள்வது வழக்கொழியத் தொடங்கியபோது, மீண்டும் பரவத் தொடங்கியது. 1600களின் இறுதியில் இங்கிலாந்தில் நடைபெற்ற வெறும் (கையுறையற்ற) கை முட்டிகளால் சண்டையிடும் போட்டிகளின்போது உருவான பாக்சிங் என்ற பெயரின் தோற்றத்திற்கான தெளிவான காரணங்கள் தெரியவில்லை. 1838இல் உருவாக்கப்பட்ட லண்டன் பரிசு வளைய விதிகளில் பல இன்றும் நடைமுறையிலுள்ளன. இதன் மேம்படுத்தப்பட்ட விதிகள், 1865இல் ஜான் சேம்பர்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டாலும், அதை 1867இல் உத்தரவாகப் பிறப்பித்த க்வீன்ஸ்பெரியின் மார்க்கஸ் பெயரிலேயே க்வீன்ஸ்பெரியின் மார்க்கஸ் விதிகள் என்று அழைக்கப்படுபவைதான், நவீன குத்துச்சண்டை விதிகளாக உள்ளன. 1891இல் உருவாக்கப்பட்ட, என்எஸ்சி இந்த விதிகளை விரிவுபடுத்தி, பரிசுத் தொகையுடன்கூடிய தொழில்முறை குத்துச்சண்டைப் போட்டி பரவக் காரணமாகியது. 1929இல் பிரிட்டிஷ் பாக்சிங் கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டபோது, அதன் பெரும்பாலான உறுப்பினர்கள், என்எஸ்சியில் இருந்தவர்களாகவே இருந்தனர். உலக பாக்சிங் சங்கம்(டபிள்யூபிஏ), உலக பாக்சிங் கவுன்சில்(டபிள்யூபிசி), பன்னாட்டு பாக்சிங் கூட்டமைப்பு(ஐபிஎஃப்), உலக பாக்சிங் அமைப்பு(டபிள்யூபிஓ) ஆகிய நான்கும் தற்போதைய முக்கிய உலக சாம்ப்பியன்ஷிப்களை தொழில்முறை குத்துச்சண்டைக்கு நடத்துகின்றன. ஒலிம்பிக்கில் இடம்பெறும், தலைக்கு பாதுகாப்புக் கவசம் அணிந்த குத்துச்சண்டை, தொழில்முறைக் குத்துச்சண்டை அல்ல!

ஜோசப் ஸ்டாலின் நினைவு நாள் செருப்புத் தைக்கும் தொழிலாளி தந்தை, சலவை செய்வதும் வீட்டு வேலைகள் செய்வதுமான தாய் இவ்விருவருக்கும் நான்காவது மகனாகப் பிறந்து லெனின் மறைவுக்குப் பின் சோவியத் ஒன்றிய பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் (பதவியில் – ஏப்ரல் 3, 1922 – மார்ச் 5, 1953), ஒருங்கிணைந்த சோசலிச சோவியத் ரஷ்ய அமைச்சரவையின் தலைவராக விளங்கிய ஜோசப் ஸ்டாலின் அவர்களின் நினைவு நாள் இன்று (5 மார்ச், 1953). இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் நாஜிப் படைகளைத் தோற்கடித்தார் . சோவியத் ரஷ்யாவை ஒரு உலக வல்லரசாக உருவாக்கிய இரும்பு மனிதர்,இவருடைய திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கை, புதிய பொருளாதார கொள்கையுன் கூடிய ஐந்தாண்டுத் திட்டங்களால் ரஷ்யா மிகப்பெரிய தொழில்புரட்சியை கண்டது.

இதே – மார்ச் 5, (1931)ல்தான் – காந்தி இர்வின் உடன்படிக்கை கையெழுத்தானது ! காந்தி-இர்வின் ஒப்பந்தம் (Gandhi–Irwin Pact) என்பது 1931ல் மகாத்மா காந்திக்கும் இந்திய வைஸ்ராய் இர்வின் பிரபுவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்ததைக் குறிக்கிறது. 1930 சட்டமறுப்பு இயக்கத்துக்குப் பின்னர் இது ஆங்கிலேய அரசுக்கும் இந்திய விடுதலைக்குப் போராடிய இந்திய தேசிய காங்கிரசுக்கும் இடையிலான ஒப்பந்தமாகும். மூன்று வாரகால பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தின் விளைவாக இந்தியர்களுக்கு அதுவரை மறுக்கப்பட்ட பல உரிமைகள் திரும்ப அளிக்கப்பட்டன. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டு இரண்டாவது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டது.

அணு ஆயுத தடை சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் இன்று (மார்ச் 5, 1970). அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும். 1968 இயற்றப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் 189 நாடுகள் கையொப்பமிட்டுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், இசுரேல், வட கொரியா, தெற்கு சூடான்ஆகிய ஐந்து நாடுகள் மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. தொடக்கத்தில் வட கொரியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, பிறகு அதை மீறியது. இறுதியாக 2003ல் இந்த அமைப்பில் இருந்து விலகிக்கொண்டது. இந்த ஒப்பந்தம் அணுக்கரு உலைகள் கட்டவும் அணுவாற்றலை அமைதியான நோக்கங்களுக்குப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கங்கள்

  1. அணு ஆயுதப் பரவலைத் தடைசெய்வது
  2. அமைதி நோக்கங்களுக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு வழங்குவது,
  3. முற்றிலுமாக அணு ஆயுதங்களை ஒழிப்பது.

இந்த ஒப்பந்தத்தின்படி சீனா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள் மற்றும் இரசியா என்ற ஐந்து நாடுகள் மட்டுமே அணுக்கரு ஆயுதங்களை வைத்திருக்க அதிகாரபூர்வமாக அனுமதிக்கப்படுகின்றன. சனவரி 1 1967 ஆம் நாளிற்கு முன்னால் அணுவாயுதம் தயாரித்த நாடுகள் மட்டுமே அனுமதிக்கப் படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுத நாடுகள் என்று அதிகாரபூர்வமாக அழைக்கப்படுகின்றன. இந்த நாடுகள் அணுக்கரு ஆயுதங்களை தயாரிக்க மற்றநாடுகளுக்கு உதவ மாட்டோம் என உறுதியளித்து ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. பிற நாடுகள் தாங்கள் அணுக்கரு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என்றும் மற்றவர்கள் தயாரிக்க உதவ மாட்டோம் என்றும் கையொப்பமிட்டுள்ளன. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமாவிலும், 9ம் தேதி நாகசாகியிலும் அணுகுண்டுகள் போடப்பட்டன. அணுகுண்டு தாக்குதல்களால், 2 இலட்சத்து 10 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அச்சமயத்தில் உயிர் பிழைத்தவர்கள், தற்போது 82 வயது என்ற விகிதத்தில் ஏறத்தாழ 1 இலட்சத்து 55 ஆயிரம் பேர் உள்ளனர். உலகில் தற்போது 14 ஆயிரத்துக்கு மேற்பட்ட அணு ஆயுதங்கள் சேமிப்பில் உள்ளன என, செய்திகள் கூறுகின்றன. ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா தவிர இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய நாடுகளும் தற்போது அணு ஆயுதம் வைத்திருப்பதாகக் கருதப்படுகிறது. 2003-ல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருப்பது வெளிப்படையாகத் தெரிந்த விஷயம். 1970-ல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த பிறகுதான் வட கொரியா, இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அணு ஆயுத நாடுகளாயின. இவற்றில் தென் ஆப்பிரிக்கா நிறவெறி அரசு நீக்கப்பட்டதும் அணு ஆயுதங்களைக் கைகழுவிவிட்டது. இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பது உலகத்துக்கே தெரிந்தாலும் அதிகாரபூர்வமாக அந்நாடு இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அமைதிக்கான அணு ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு என்பது நடைமுறையில் எப்படி இருக்கிறது? மேற்கத்திய நாடுகள் வளரும் நாடுகளுக்கு அணு உலைகளை விற்கத் தங்களது பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றன. அந்த அளவில்தான் ஒப்பந்தத்தின் இரண்டாவது நோக்கம் இருக்கிறது. கடைசியாக – முழுமையான அணு ஆயுத ஒழிப்பு. இது எந்த அளவில் சாத்தியம் என்று பார்ப்போம். அதிக எண்ணிக்கையில் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகள்தான் இதனை முதலில் ஒழிக்க வேண்டும். ஆனால், அந்நாடுகள் அதற்குத் தயாராக இல்லை. சொல்லப்போனால், இந்த ஐந்து நாடுகள்தான் பிற நாடுகளுக்குப் பெரிய அளவில் ஆயுத உற்பத்தியும் ஏற்றுமதியும் செய்கின்றன. NASA — How Humans Change Space Itself ஆயுத ஏற்றுமதிக்காக உலகையே பதற்றத்தில் வைத்திருக்கும் வகையில் போட்டி போட்டுக்கொண்டு ஆயுத விற்பனை செய்வதால், பல நாடுகள் தங்கள் அண்டை நாடுகளுக்கு இணையாக ஆயுதங்களுக்குச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் வேறு. பாதுகாப்பு விஷயத்தில் அதிக நிதியை ஒதுக்குவதால், வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்க முடியாமல் அந்நாடுகள் திணறுகின்றன. தென் கொரியாவில் அமெரிக்கா அளித்துவரும் ராணுவரீதியான ஒத்துழைப்பால், அச்சமடைந்த வட கொரியா, ஏவுகணைகளையும் அணு ஆயுதத்தையும் உற்பத்திசெய்தது. சமீப காலமாக, அணு ஆயுத சோதனைகள், ஏவுகணை சோதனைகள் மூலம், தென் கொரியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நேரடியாக மிரட்டல் விடுத்தது வட கொரியா. ஆனால், வட கொரியா மீது அமெரிக்காவால் ராணுவ நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. மாறாக, வட கொரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. காரணம், தென் கொரியா மீதும் ஜப்பான் மீதும் அணு ஆயுதங்களை வீசப்போவதாக வட கொரியா மிரட்டினாலே அமெரிக்கா பணிந்துவிடும். பாகிஸ்தான் விஷயத்திலும் இதே நிலைதான்.வளர்ந்த நாடுகளின் அச்சுறுத்தலின் காரணமாக, அணு ஆயுதங்களைத் தங்கள் தற்காப்புக்காக உருவாக்கும் நிலைக்குச் சில நாடுகள் தள்ளப்பட்டன என்பதை மறுக்க முடியாது. இந்தச் சூழலில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் முயற்சிகள் தொடர்ந்து பின்னடைவையே சந்தித்துவருகின்றன!

செருமானிய நிலப்படவரைவியலாளர், புவியியலாளர் மற்றும் அண்ட அமைப்பியலாளர் கிரார்துசு மெர்காதோர் (Gerardus Mercator) பிறந்த தினம். Ø 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செருமானிய நிலப்படவரைவியலாளர், புவியியலாளர் மற்றும் அண்ட அமைப்பியலாளர். Ø 1569இல் உலக நிலப்படத்தை உருவாக்கியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். Ø இவரது மெர்காதோர் வீழல் என்ற கருதுகோளைப் பயன்படுத்தி இந்த நிலப்படத்தை உருவாக்கினார். கடலில் செல்லும்போது ஒரே திசையளவு கொண்ட வழிகளை நேர்கோடுகளாக காட்டுதலே மெர்காதோர் வீழல் ஆகும். இந்த கருதுகோள் இன்றளவிலும் கடல் வழிகாட்டுதல் படங்களில் பின்பற்றப்படுகின்றது. Ø நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமாக அக்காலகட்டத்தில் (ஏறத்தாழ 1570கள்–1670கள்) இருந்தது. தனது வாழ்நாளில் இவரே உலகின் மிகவும் புகழ்பெற்ற நிலப்படவியலாளராக விளங்கினார். Ø நிலப்படவரைவியலைத் தவிர இவருக்கு சமயவியல், மெய்யியல், வரலாறு, கணிதம், புவியின் காந்தப்புலம் ஆகிய துறைகளிலும் ஆர்வம் இருந்தது. செதுக்குதல், வனப்பெழுத்து உலக உருண்டைகளையும் அறிவியல் கருவிகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார். Ø அவரது காலகட்டத்தைச் சேர்ந்த மற்ற அறிவியலாளர்களைப் போலன்றி மெர்காதோர் அதிகம் பயணிக்கவில்லை. அவரது புவியியல் அறிவை நூல்களைப் படித்தே வளர்த்துக் கொண்டார். Ø அவரது சொந்த நூலகத்தில் 1000 நூல்களையும் நிலப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தார். இவற்றை தன்னைக் காணவந்தோர் மூலமாகவும் ஆறு மொழிகளில் மற்ற அறிவியலாளர்கள், பயணிகள், வணிகர்கள், மாலுமிகளுடன் நிகழ்த்திய கடிதப் போக்குவரத்தாலும் சேகரித்தார். Ø மெர்காதோரின் துவக்க கால நிலப்படங்கள் அளவில் பெரிய வடிவங்களாக சுவற்றில் தொங்குவிடுமாறே இருந்தன. ஆனால் வாழ்நாளின் பிற்பகுதியில் நூற்றுக்கும் கூடுதலான வட்டார நிலப்படங்களை சிறிய வடிவங்களில் வெளியிட்டார். Ø இவற்றை எளிதாக நூல் வடிவில் தொகுக்க முடிந்தது. 1595இல் இத்தகைய முதல் நிலப்படத் தொகுப்பை வெளியிட்டார். இதற்கு முதன்முதலாக அட்லசு என்று பெயரிட்டார். Ø இச்சொல்லை நிலப்படத் தொகுப்பிற்கு மட்டுமன்றி இகலுலகின் உருவாக்கம், வரலாறு என அனைத்தையும் குறிப்பிடுவதற்காக உருவாக்கினார். முதல் பெரும் புவியியலாளராக விளங்கிய மாரிதானியாவின் அரசர் அட்லசு நினைவாகவே இப்பெயரை உருவாக்கினார். இந்த அரசர் டைட்டன் அட்லசின் மகனாவார்; எனினும் இவ்விரு தொன்மக் கதைகளும் விரைவிலேயே ஒருங்கிணைந்தன. Ø மெர்காதோருக்கு தமது நிலப்படங்களையும் பூகோளங்களையும் விற்றே வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டினார். Ø அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவை உலகின் சிறந்தவையாகக் கருதப்பட்டன. அப்போது விற்கப்பட்டவற்றில் சில இன்னமும் கிடைக்கின்றன. கோளங்களை உருவாக்கவும் அவற்றில் நிலப்படங்களை அச்சிடவும் தாங்கிகளை வடிவமைக்கவும் பொதிந்து ஐரோப்பா முழுமையும் அனுப்பவும் சிறந்த வணிக முனைவு தேவைப்பட்டது. Ø தவிரவும் மெர்காதோர் அவரது அறிவியல் கருவிகளுக்காகவும் அறியப்பட்டார்; குறிப்பாக சோதிடம். வானியல் வடிவவியலை ஆராயத் தேவையான கருவிகளை உருவாக்கினார். Ø கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த மெர்காதோர் ஆழ்ந்த கிறிஸ்தவர். மார்ட்டின் லூதரின் சீர்திருத்தத் திருச்சபை பரவி வந்தபோது தம்மை சீர்த்திருத்தச் சபையினராக காட்டிக்கொள்ளாதபோதும் ஆதரவாளராக இருந்தார். Ø இதற்காக ஆறு மாதங்கள் சிறைக்குச் சென்றார். இந்த மத ஒறுப்பே இவரை கத்தோலிக்க இலியூவனிலிருந்து குடிபெயரச் செய்தது. சமயச் சகிப்பு கொண்டிருந்த துயிசுபர்கிற்கு குடியேறினார். இங்கு தமது வாழ்நாளின் கடைசி 30 ஆண்டுகளைக் கழித்தார்.

இரும்புத்திரை என்ற சொல்லை, அமெரிக்காவிலுள்ள வெஸ்ட்மின்ஸ்ட்டர் கல்லூரியில் ஆற்றிய, அமைதிக்கான இழைகள் என்ற உரையில், சர்ச்சில் குறிப்பிட்ட நாள் சோவியத் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் என்ன நடக்கிறது என்று தெரியாத நிலையிருக்கிறது என்ற பொருளில், முதன்முதலாக அப்போதுதான் இரும்புத்திரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. உண்மையில், சர்ச்சில் மட்டுமின்றி பலரும் இச்சொல்லை இதற்குமுன்பே பயன்படுத்தியிருந்தாலும், பனிப்போர்க்கால அடையாளமாக இச்சொல் மாறியது இந்த உரைக்குப் பின்னர்தான். யூத மதச் சட்டங்களுக்கு அடிப்படையாகக் குறிப்பிடப்படும், கி.பி.3-5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, பாபிலோனிய தல்மூத் என்ற நூலில்தான், இரும்புத்திரை என்ற சொல் முதன்முதலாக இடம்பெற்றது. இரும்பாலான தடைகூட, இஸ்ரேலை அதன் தெய்வீகத் தந்தையிடமிருந்து பிரிக்க முடியாது என்று அந்நூல் குறிப்பிடுகிறது. 1700களில் நாடக அரங்குகளில் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட உலோகத்தாலான திரைகளும், கடைகளில் அமைக்கப்பட்ட சுருள் கதவுகளும்(ரோலிங் ஷட்டர்) இரும்புத்திரை என்றழைக்கப்பட்டன. ஆங்கிலேய எழுத்தாளர் ஆர்த்தர் மேக்கன், இரும்புத்திரை விழுந்து வாழ்வின் ஒரு குறிப்பிட்ட காலகட்டம் முடிந்தது என்று 1895இல் ஒரு புதினத்தில் குறிப்பிட்டிருந்ததைத் தொடர்ந்து, ஒரு காலகட்டத்தின் முடிவு என்ற பொருளிலும் இரும்புத்திரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. ஜெர்மெனிக்கும் பெல்ஜியத்துக்குமான உறவில், முதல் உலகப்போரின்போது இருந்த இடைவெளியை, இரும்புத்திரை என்று பெல்ஜியத்தின் அரசி எலிசபெத் 1914இல் குறிப்பிட்டார். புரட்சிக்குப்பின் இரும்புத்திரை மூடியதாக, ஒரு காலகட்டத்தின் முடிவு என்ற பொருளில் ரஷ்ய எழுத்தாளர் வசிலி ரோஸனோவ் 1918இல் குறிப்பிட்டதே, இந்தச் சொல் சோவித்தோடு தொடர்புபடுத்திக் குறிப்பிடப்பட்ட முதல் நிகழ்வு. துளைக்க முடியாத தடை என்ற பொருளில், ஆங்கில பெண் எழுத்தாளர் ஈதல் ஸ்னோடென் 1920இல் தன் நூலில் குறிப்பிட்டபோதுதான், சோவியத்தின் எல்லையைக் குறிக்க இரும்புத்திரை ஆங்கிலத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னும் வேறு பல பொருள்களிலும் இரும்புத்திரை என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் முடிவில், ஒரே அணியில் நின்று போரிட்டிருந்த சோவியத்தை, தங்கள் கூட்டாளியாகவே மேற்கத்திய நாடுகள் கருதிக்கொண்டிருந்த சூழலிலும், தங்கள் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் சோவியத் பாணி நிர்வாகத்தை சோவியத் உறுதியாக நடைமுறைப்படுத்தியதால், 1945இல் அமெரிக்கக் குழுடியரசுத்தலைவருக்கு அனுப்பிய தந்தியில்தான் சர்ச்சில் முதன்முறையாக, இரும்புத்திரை மூடியிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். 1946இல் அவர் ஆற்றிய உரைக்குப் பின்னர், இரும்புத்திரை என்பது சோவியத்தைக் குறிக்கும் அடையாளமாகவே மாறிப்போனது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!