இன்று டி20 கிரிக்கெட் போட்டி|சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு..!
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியை காண வரும் ரசிகர்களும், போட்டியை பார்த்துவிட்டு வீடு திரும்பும் ரசிகர்களும் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டி20 போட்டியை ஒட்டி மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் இரவு 12 மணிக்கு புறப்பட உள்ளது.
சென்டிரல் – பரங்கிமலை வரையிலான பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், சென்டிரல் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம்.
பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் (நடைமேடை 3) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்குள் வந்துவிட வேண்டும்.
கிரிக்கெட் போட்டிக்கான நுழைவுச்சீட்டை பயன்படுத்தி போட்டி நடைபெறும் நாளில் பயணிகள் எந்த மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்துக்கு இடையிலான சுற்று பயணத்தினை மேற்கொள்ளலாம் என்று மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.