இன்று முதல் வானில் வர்ணஜாலம்..!

 இன்று முதல் வானில் வர்ணஜாலம்..!

இன்று (ஜன.,22) முதல் வரும் ஜனவரி 25ம் தேதி வரை, வானில் ஆறு கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருக்கும் நிகழ்வை காண முடியும்.

கோள்கள் சில சந்தர்ப்பங்களில், ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வம் நிகழும். இன்று முதல் வரும் 25ம் தேதி வரை, வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்கள், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இவை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை வானில் தெரியும். இவற்றில், நெப்டியூன், யுரேனஸ் ஆகியவற்றை தொலை நோக்கியால் மட்டுமே காண முடியும்.

இதுகுறித்து, அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் கூறியதாவது: கோள்கள், ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வை, ‘பிளானட்டரி பரேட்’ என்கிறோம். இவற்றை, வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழாது. கடந்த 2022 ஜூனில், ஐந்து கோள்கள் நேர்கோட்டில் வந்தன. தற்போது, ஆறு கோள்கள் வருகின்றன.

அடுத்த மாதம் 28ம் தேதி ஏழு கோள்களை பார்க்கலாம். இதையடுத்து, ஆகஸ்ட் மாத மத்தியிலும், இவ்வாறான நிகழ்வு ஏற்படும். அதைத் தொடர்ந்து, 2040ல் தான், இதுபோன்று நிகழும். இவை கிழக்கு – மேற்காக காணப்படும். நட்சத்திரங்கள் போல் மின்னாது. அளவில் சற்று பெரிதாக இருக்கும். அதிக பிரகாசத்துடன் காணப்படுவது வெள்ளி கோள். அதைத் தொடர்ந்து, செம்பழுப்பு நிறத்தில் செவ்வாய் கோள் காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி, வேலுார் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள, மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், கோள்களின் நேர்கோட்டு நிகழ்வை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தொலை நோக்கி வழியே காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 25ம் தேதி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை காணலாம்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...