சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி..!

 சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி..!

சென்ட்ரல் சதுக்கத்தில் ரூ.365 கோடியில் 27 மாடி கட்டிடம் கட்ட சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. புறநகர் ரயில்கள், நீண்ட தூர ரயில்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள் எளிதாகச் சென்று வரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த 2022ம் ஆண்டு மார்ச்சில் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இங்கு 27 மாடிக் கட்டிடம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 8 நிலைகளுடன் கூடிய பிரமாண்டமான வாகன நிறுத்தும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இங்கு 1,500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 400 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,900 வாகனங்கள் நிறுத்தும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இப்பகுதியில் 33 அடுக்குமாடி கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால் சில காரணங்களால் 31 மாடி கட்டிடமாக மாற்றப்பட்டது. இதன்பிறகு, அடுக்குமாடி கட்டிடத்துக்குப் பதிலாக ரெட்டை கோபுர கட்டிடங்களைக் கட்டலாம் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் கட்டிடம் 17 தளங்களையும், மற்றொன்று 7 தளங்களையும் கொண்டதாகவும் இருக்கும் என்று முடிவு செய்தனர்.

அதிலும் சிக்கல் இருக்கவே இறுதியில், 27 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடத்தை கட்ட முடிவு செய்துள்ளனர். சென்னை சென்ட்ரலுக்கு வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்த பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வரும் காலத்தில், வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த பிரமாண்ட கட்டிடத்தை கட்ட முடிவு செய்துள்ளனர். அதை ஒட்டி ரூ.365 கோடியில் 27 மாடி கொண்ட இந்த கட்டிடத்தை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு கட்டிடம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...