இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 22)
‘நறுக்’… ‘சுருக்’ எழுத்தின் தந்தை: ஐசக் பிட்மன் நினைவு நாளின்று!
‘‘வளவளன்னு பேசுறவங்களை சுருக்கமா, தெளிவா பேசுப்பா… ஏன் இப்படி லொடலொடன்னு பேசிக்கிட்டு இருக்கே’’ என்பார்கள். ஆனால், ஒரு நல்ல பேச்சாளரை நாம் இப்படி கடிந்து கொள்ள முடியாது. அவரது பேச்சில் பல நல்ல விஷயங்கள் இருக்கும். அனைத்தையும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாது. அது மட்டுமல்ல… சில கல்வி நிலையங்களில் வேகமாக சொல்லப்படும் நோட்ஸ்களை, விரைவாக நம்மால் குறிப்பெடுக்க முடியாது. சில தலைவர்களின் பேச்சு, பேட்டி உள்ளிட்ட விஷயங்களை கூட இப்படித்தான். இதற்காக உருவானதே Shorthand எனப்படும் சுருக்கெழுத்து. இந்த சுருக்கெழுத்தின் தந்தைதான் ஐசக் பிட்மன். யாரந்த பிட்மன் என்கிறீர்களா? இங்கிலாந்தின் டிரவ்பிரிட்ஜ் நகரில் 1813, ஜன.4ம் தேதி பிறந்தவர் பிட்மன். பிரிட்டிஷ் அன் பாரின் ஸ்கூல் சொசைட்டியில் கல்விப்பயணத்தை துவக்கினார். பின்னர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவரது நோட்ஸ்களை வேகமாக குறிப்பெடுக்க சில மாணவர்களால் முடியவில்லை. அதே நேரம் அவர்களுக்காக தனது வேகத்தையும் பிட்மனால் குறைத்துக் கொள்ள முடியவில்லை. அப்போதுதான் இதற்கான மாற்று வழியை யோசிக்க ஆரம்பித்தார் பிட்மன். அப்போதுதான் எழுத்தின் நீண்ட வடிவங்களை சுருக்கமான வடிவத்தில் குறிப்பால் உணர்த்தினால் என்ன என்று யோசிக்கத் தொடங்கினார். பல நாட்கள் இரவு, பகலாக யோசித்து கடைசியில் சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தார். 1837ம் ஆண்டு பிட்மன் ஷார்ட்ஹேண்ட் எனப்படும் சுருக்கெழுத்து முறை அறிமுகமானது. பிட்மன் சுருக்கெழுத்துக்கு அழகான விளக்கம் தருகிறார். அதாவது, பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். ‘Steno’ என்றால் குறுகிய (அ) சுருக்கிய, ‘graphy’ என்றால் எழுதுதல் என்பது பொருளாகும். சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற ரோமானிய தத்துவ அறிஞர்களின் “Tenets and Lectures” என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன்முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ம் நூற்றாண்டில்தான் வளர்ச்சியடைந்தது. பிட்மனின் கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன. ஆங்கிலத்தில் முதலில் வந்த இந்த முறை, படிப்படியாக அனைத்து மொழிகளிலும் வரத்தொடங்கின. தமிழில் சுருக்கெழுத்து முறையை எம்.சீனிவாசராவ் உருவாக்கினார். வேலூரில் காவல் பயிற்சி நிலையத்தில் சுருக்கெழுத்து பயிற்சியாளராகப் பணியாற்றிய இவர் 1894ல் தமிழ் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இதனை பிரிட்டிஷ் அரசு 1910ல் ஏற்றுக் கொண்டது. கன்னடம், தெலுங்கிற்கு சுருக்கெழுத்து முறையையும் உருவாக்கினார். இன்று பொதுக்கூட்டங்கள், கட்டுரைகள், கருத்தரங்குகளில் பேசப்படுபவை எல்லாம் அனைவரும் குறிப்பெடுக்க பிட்மனின் கடின உழைப்பே காரணம் என்றால் அது மிகையில்லை. சுருக்கெழுத்தின் முறையை அடுத்தடுத்த உயரத்துக்கு கொண்டு சென்ற பிட்மன் 1897ல் இதே ஜனவரி22 தேதி தனது 84ம் வயதில் உயிரிழந்தார்.
பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் நினைவு தினப் பதிவு!
இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன் இதே நாளில்தான், அதாவது 22.01.1999 -ம் ஆண்டு நள்ளிரவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தனது இரண்டு மகன்களுடன் உயிரோடு எரித்துக்கொல்லப்பட்டார். ஒடிசா மாநிலத்தில் உள்ள மனோகர்பூர் என்ற சிறு கிராமத்தில், தனது மனைவி மூன்று பிள்ளைகளுடன் தங்கி குடும்பமாக ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை, அதாவது, கிறிஸ்துவ ஊழியத்தை நிறைவேற்றி வந்தார். பல வருஷங்களா அந்தக் கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிரஹாம் ஸ்டெயின்ஸும் அவரது மனைவி கிளாடிஸூம் இணைந்து தங்களுக்கு ‘யெகோவா’ வினால் நியமிக்கப்பட்ட தேவ சித்தத்தை அன்பும் பரிவுமாக நிறைவேற்றி வந்தனர். இவர்களது அன்பிலும் பரிவிலும் நெஞ்சுருகிப் போன அந்தப் பகுதி மக்கள் மேசியாவாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். இதில் அந்தப் பகுதியில் இருந்த தாரா சிங் மற்றும் அவனது கூட்டாளிகளுக்குப் பிடிக்கலை. வெளிநாட்டு பாதிரியார் தங்கள் மக்களை மதம் மாற்றுகிறார் என்று தவறாகக் கருதினர். அவர்களைக் கொல்லவும் முடிவெடுத்தனர். ஜனவரி 22-ம் தேதி இரவு அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்புக் கிடைத்தது. அன்று இரவு, தன்னுடைய ஜீப்பில் மகன்கள் பிலிப், திமோத்தியுடன் கிரஹாம் ஸ்டெயின்ஸ் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். ஜீப்பை சுற்றி வளைத்த தாரா சிங்கும் அவனது கூட்டாளிகள் 12 பேரும் தீவைத்து, மூன்று பேரையும் ஜீப்புடன் உயிருடன் கொளுத்தினர். செய்தி அறிந்து ஒட்டுமொத்த உலகமும் அதிர்ச்சி அடைந்தது. அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய தாரா சிங் உட்பட 13 நபர்களும் கைதுசெய்யப்பட்டனர். இதற்கென்று அமைக்கப்பட்ட சிறப்பு நீதி மன்றத்தில் வழக்குநடைபெற்று 2003 -ம் ஆண்டு தாராசிங்குக்கு தூக்குத் தண்டனையும் மற்ற12 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தாராசிங் தரப்பில் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, 2005-ம் ஆண்டு தாரா சிங்குக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 12 பேர்களில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர். இந்தத் தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. 2011 -ம் ஆண்டு ஒடிசா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வழக்குப் பற்றியெல்லாம் யோசிக்காமல் கிரஹாம் ஸ்டெயின்ஸின் மனைவி கிளாடிஸ் மீண்டுமாக ஆஸ்திரேலியாவுக்கே சென்று, அங்கு கிறித்தவ ஊழியத்தை நிறைவேற்றி வருகிறார். 2011-ம் வருடம் உறுதி செய்யப்பட்ட இறுதித் தீர்ப்பு வந்தபோது, கிளாடிஸிடம் அவரது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் கொன்றவர்கள் பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அப்போது கிளாடிஸ் என்ன சொன்னார் தெரியுமா. “அவர்களை நான் எப்போதோ மன்னித்து விட்டேன்”
இதே ஜனவரி 22, 1917 ‘வெற்றியின்றி அமைதி’ என்று அழைப்புவிடுத்த புகழ்பெற்ற உரையை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில், குடியரசுத்தலைவர் உட்ரோ வில்சன் நிகழ்த்திய நாள். உலகம் அதுவரை கண்டிராத (பிற்காலத்தில் உலகப்போர் என்றும், இரண்டாம் உலகப்போருக்குப்பின் முதல் உலகப்போர் என்றும் அழைக்கப்பட்ட!) பெரும் போர் நடந்துகொண்டிருந்த நிலையில், போரிட்டுக்கொண்டிருந்த நாடுகளை, போரைக் கைவிடக்கோரி, அவர் இந்த உரையை ஆற்றினார். போரிட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நாடும், போரை நிறுத்த விதிக்கும் கட்டுப்பாடுகளைத் தெரிவிக்குமாறு கேட்டிருந்த அவர், அதன்மூலம் ஒரு தீர்வை உருவாக்கவும் முயற்சித்தார். அவர் சிறுவனாக இருந்த காலத்தில், அமெரிக்க உள்நாட்டுப் போரையும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளையும் காண நேர்ந்திருந்ததால், போர்களை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. ஒரு தரப்பின் வெற்றி என்பது, மற்றொரு தரப்பிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத அவமானத்தை ஏற்படுத்திவிடுவதால், அதன்பின் ஏற்படும் அமைதி என்பது, புதைமணலின்மீது நிற்பதாகவே அமையும் என்று குறிப்பிட்ட அவர், இப்போரில் இறந்தவர்களை வீரம், தியாகம் என்பதெல்லாம் சரியல்ல, அனைத்தும் பயனற்ற பலிகளே என்றும் கூறினார். இவ்வளவும் பேசினாலும், இங்கிலாந்துக்கும், அதன் கூட்டணியான நேச நாடுகளுக்கும் அமெரிக்க வங்கிகள் கடன் தருவதையும், அமெரிக்க நிறுவனங்களின் ஆயுதங்களும், தளவாடங்களும் விற்பதையும் அவர் தடை செய்யவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. அமெரிக்க பயணிகள் கப்பலான லூசிட்டானியா ஜெர்மன் நீர்மூழ்கிகளால்(யு-போட்) மூழ்கடிக்கப்பட்டு, 1,198 பேர் பலியானபோதுகூட நடுநிலையைத் தொடர்ந்த அமெரிக்கா, (இங்கிலாந்துக்குப் பொருட்கள் கிடைப்பதைத் தடுக்கும் நோக்கத்துடன்) அமெரிக்க வணிகக் கப்பல்களை ஜெர்மெனி தாக்கத் தொடங்கியதும், ‘அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டுவர ஒரு போர்’ என்ற அறிவிப்புடன், ஜெர்மெனிமீது போரை அறிவித்து, உலகப்போரில் குதித்தது. ஐரோப்பிய மண்ணில் அதுவரை போரிட்டதில்லை என்பதால், அமெரிக்கப் படைகளால் தாக்குப்பிடிக்க முடியுமா என்ற ஐயமும், ஒரு தரப்பிற்கு ஆதரவளித்தால், மறுதரப்புடனான வணிகம் பாதிக்கும் என்பதுமே அமெரிக்கா அதுவரை நடுநிலை வகித்ததற்கான உண்மையான காரணங்கள். ஆயுத வணிகத்தை எச்சூழலிலும் நிறுத்தவில்லையென்பதையும், வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதும் போரில் குதித்ததையும் மட்டுமின்றி, இன்றுவரை அமெரிக்கா தொடுக்கும் போர்களையும் கவனித்தால், வணிக நோக்கமே முதன்மையாக இருப்பது தெளிவாகப் புரியும்.
இதே ஜனவரி 22, 1905 அக்டோபர் புரட்சியின் முன்னோட்டம் என்று லெனினால் வருணிக்கப்பட்ட 1905 புரட்சியின் தொடக்க நிகழ்வான, இரத்த ஞாயிறு என்று அழைக்கப்படும் படுகொலைகள் நிகழ்ந்த நாள்
செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கின் குளிர்கால அரண்மனையில் தங்கியிருந்த ஜார் இரண்டாம் நிக்கோலஸ் மன்னரிடம், ஒன்றரை லட்சம்பேர் கையெழுத்திட்ட மனுவை, அமைதியான முறையில் அளிப்பதற்காக, ஜியோர்ஜி கேப்போன் பாதிரியார் தலைமையில் ஊர்வமாகச் சென்ற, ஆயுதமற்ற பொதுமக்களின்மீது, ராணுவம் தாக்குதல் நடத்தியது. 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொண்ட கூட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானாலும், 91 பேர் மட்டுமே பலியானதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது. 1904இல் தொடங்கி நடந்துகொண்டிருந்த ஜப்பானுடனான போரில், ரஷ்யா தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்துக்கொண்டிருந்தது. போரை முடித்துக்கொள்ள ஜப்பான் தயாராக இருந்தாலும் ரஷ்யா தயாராக இல்லை. பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கிக்கொண்டிருந்த போரைக் கைவிடுவது, அனைவருக்கும் வாக்குரிமை முதலான கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்தன. 1800களின் பிற்பகுதியில்தான் புதிதாக உருவாகியிருந்த தொழில்துறைகளில் பணியாற்றுவதற்காக விவசாயத் துறையிலிருந்து வந்திருந்த தொழிலாளர்கள் மிக மோசமான பணி நிலை, மிகக்குறைந்த ஊதியம், ஒரு நாளுக்கு 15 மணிநேர வேலை முதலானவற்றால் பாதிக்கப்பட்டிருந்ததால், தொழிற்சங்கங்கள் உருவாகி, ஏராளமான வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. தொழிலாளர்கள், அடித்தட்டு மக்கள் ஆகியோரின்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த கேப்போன் பாதிரியார் அவர்களைத் திரட்டும் பணியைச் செய்தார். வேலை நிறுத்தம் என்பதைக் குறிக்கும் ரஷ்ய மொழிச்சொல்லான ஸ்டாச்கா என்பது, குற்றத்திற்குத் திட்டமிடும் சதியைக் குறிக்கிற ஸ்டாகாட்ஷியா என்ற சொல்லிலிருந்து உருவானது என்பதிலிருந்து வேலைநிறுத்தத்தின்மீதான ரஷ்ய அரசின் அணுமுறையைப் புரிந்துகொள்ளலாம். டிசம்பர் 1904இல், தொழிற்சங்கத்தில் சேர்ந்ததற்காகவே, புட்டிலோவ் இரும்பு ஆலை ஊழியர்கள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட போராட்டம், 382 தொழிற்சாலைகளின் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்ற வேலைநிறுத்தமாக வளர்ந்து, மனு அளிக்கச் சென்றவர்கள் கொல்லப்பட்டதையடுத்து வெடித்த புரட்சி, 1907 ஜூன்வரை தொடர்ந்தாலும், அரசால் ஒடுக்கப்பட்டது.
இதே ஜனவரி 22, 1973 கருச்சிதைவு செய்து கொள்வதில் பெண்ணுக்குள்ள உரிமையை வலியுறுத்தும் மிகமுக்கியமான தீர்ப்பை அமெரிக்க உச்சநீதிமன்றம் அளித்த நாள்
ஜனவரி 22. ஏற்கெனவே இரு குழந்தைகள் இருந்ததால் 1969இல் நோர்மா மெக்-கார்வி என்ற பெண் கருச்சிதைவு செய்துகொள்ள விரும்பினார்.ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் சட்டங்கள் வேறுபடும் அமெரிக்காவில், அவர் இருந்த டெக்சாஸ் மாநிலம் வன்புணர்வால் உருவான கருவை மட்டுமே கருச்சிதைவு செய்ய அனுமதித்தது. அதனால், வன்புணர்வு செய்யப்பட்டதாக அவர் கருச்சிதைவுக்கு முயற்சித்தபோது, அது பொய் என்பது வெளிப்பட்டது. அவர் கருச்சிதைவு செய்துகொள்ள தன்னுடைய உரிமையைக்கோரி வழக்குத் தொடர்ந்தார்.இதற்கிடையில் அவருக்குக் குழந்தையே பிறந்துவிட்டாலும், வழக்கு மேல்முறையீட்டில் அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோதுதான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அது, கருச்சிதைவை பெண்ணின் அந்தரங்கமான ஒன்றாகவும், தனிப்பட்ட உரிமையாகவும் உறுதிசெய்தது. ஆனாலும், தாயின் உடல்நலம், உயிர்ப்பாதுகாப்பு உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பதில் அரசுக்கு உள்ள அக்கறைக்கு மதிப்பளித்த நீதிபதிகள், முதல் 3 மாதகாலத்தில் தாயின் விருப்பப்படி கருச்சிதைவு மேற்கொள்ளலாம் என்றும், இரண்டாவது 3 மாதகாலத்தில் தாயின் பாதுகாப்புக்காக அரசு மறுக்கலாம் என்றும், மூன்றாவது 3 மாத காலத்தில் கருப்பைக்கு வெளியே, மருத்துவ வசதிகளின் துணையுடன் உயிர்வாழுமளவுக்குக் கரு வளர்ந்திருந்தால் அந்த உயிரின் பாதுகாப்புக்காக மறுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தனர். 1992இல் மற்றொரு வழக்கில், தற்போதைய அறிவியல் முன்னேற்றங்களால் 23-24 வாரங்களிலேயே கரு தனியாக வாழும் வசதியேற்பட்டுவிட்டதால், அதைக்காட்டி பெண்ணின் உரிமையை மறுக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கரு எப்படி உருவாகியிருந்தாலும், அதன் தொடர்விளைவுகளைப் பெண் மட்டுமே சுமக்கிறாள் என்பதை உணர்ந்த அமெரிக்காவின் கருச்சிதைவுச் சட்டங்கள் உலகின் மிக இலகுவான சட்டங்களில் ஒன்றாக உள்ளன. கருச்சிதைவு குறித்து உலகம் முழுவதும் பலவிதமான சட்டங்கள் இருந்தாலும், இன்றும் எந்தச் சூழ்நிலையிலும் கருச்சிதைவை அனுமதிக்காத 5 நாடுகள் உலகில் உள்ளன.
தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடி சேலம் பகடால நரசிம்மலு நாயுடு நினைவு தினம் இன்று
(ஜனவரி 22, 1922). சேலம் பகடால நரசிம்மலு நாயுடு ஏப்ரல் 12, 1854ல் அரங்கசாமி நாயுடுவுக்கும் இலக்குமி அம்மையாருக்கும் பிறந்தவர். சேலம் கல்லூரியில் கல்வி பயின்றார். பள்ளிப் படிப்புக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நல்ல புலமை பெற்றார். படிக்கும் பருவத்திலேயே “யாப்பிலக்கண வினா விடை“ என்ற நூலை எழுதி, தமது தமிழாசிரியர் அமிர்தம்பிள்ளையின் உதவியோடு வெளியிட்டார். ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலே மாணவர்கள் பயன்பெறும் வகையில் சிறந்த கணிதம் என்ற ஒரு நூலை எழுதி வெளியிட்டார். நாயுடு தென்னகத்தின் பல இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, பல சுவடிகளையும் கல்வெட்டுகளையும் ஆய்ந்து ”தட்சண இந்திய சரித்திரம்” என்னும் நூலை சுமார் ஆயிரம் பக்கங்களில் வெளியிட்டார். இந்த நூலில் “விசயசூசிகை“ என்ற தலைப்பில் 34 பக்கங்களில் பொருளடக்கம் தந்துள்ளார். இந்து சமய தத்துவம், சமயத் தலைவர்களின் வரலாறு, இறைவன் இலக்கணம், ஆன்ம இலக்கணம், பக்தியியல்பு, வேதம், புராணம், ஆகமம், இதிகாசம் ஆகியவை பற்றி விரிவாக கூறும் ”ஆர்ய சத்திய வேதம்” என்ற நூலையும் எழுதினார். வங்க வேதியர் ராஜாராம் மோகன்ராய் தோற்றுவித்த பிரம்ம சமாசத்தில் பங்கேற்றுப் பணியாற்றினார். பெண்களுக்கு எனத் தனிப் பள்ளியை நிறுவினார். இதன் கொள்கைகளை வலியுறுத்தி “நீதிக் கும்மி“ என்ற நூலை எழுதினார். சுதேசாபிமானி, கோவை அபிமானி, கோவை கலாநிதி ஆகிய பத்திரிகைகளை இருபதாண்டுகளுக்குமேல் நடத்தினார். கோவையில் முதல் நூற்பாலை தோன்ற இவரே தன் நிலத்தின் ஒரு பகுதியை தந்தார். கோவை மாநகராட்சி மன்றம் நடைபெறுகின்ற விக்டோரிய மண்டபம் விக்டோரிய மகாராணியின் 50ம் ஆண்டு பொன்விழா நினைவாக இவர் கட்டினார். ஆங்கில அரசு இவரது பொதுப்பணியை பாரட்டி இவருக்கு “ராவ்பகதூர்“ பட்டம் அளிக்க முன்வந்தது. ஆனால் அதை மறுத்துவிட்டார். ஏழை பால்ய விதவைப் பெண்களுக்கு கல்வியளித்து அவர்களுக்கு புனர்விவாகம் செய்விக்க அறக்கட்டளை ஒன்றை அமைத்தார். தென்னிந்திய சரிதம், பலிஜவாரு புராணம், தலவரலாறுகள், ஆரிய தருமம் முதலிய உரைநடை நூல்கள் உட்பட 94 நூல்களை தமிழில் எழுதிப் பதிப்பித்தவர். தெலுங்கிலும் நூல்களைப் பதிப்பித்தவர். தமிழில் பயண இலக்கியங்களை எழுதிய முன்னோடிகளில் ஒருவர். கோயம்புத்தூரில் ஆரம்பகால தொழிற்துறைகளைக் கட்டி எழுப்பியவர்களில் ஒருவர். பல பொதுத் துறைகளை நிறுவியவர். இப்பேர்பட்ட சேலம் பகடால நரசிம்மலு நாயுடு இதே ஜனவரி 22, 1922ல் தனது 67வது அகவையில் காலமானார்.
இந்தியாவின் முகலாய பேரரசர் ஷாஜகான் காலமான நாள்
ஜனவரி 22 நம் நாட்டில் உள்ள தாஜ்மஹால் தேசங்கள் கடந்து போற்றப்படும் காதலின் சின்னம். தன் காதல் மனைவிக்காக ஒரு அரசன் எழுப்பிய நினைவு இல்லம் உலகப் புகழ்பெற்றது விந்தையான ஒன்றுதான். அதையொட்டி அந்த மன்னனும், அவன் வாழ்வும் குறித்த கலவையான பார்வைகள் உலகில் வேறெங்கும் நடக்காத ஒன்று. பளிங்குளால் யமுனை நதிக்கரையில் எழுப்பப்பட்டிற்கும் அந்த அதிசயம் ஷாஜகான் – மும்தாஜ் என்ற முகம் அறியப்படாத இரு ஜீவன்களின் காதலையும் தாங்கி நிற்கிறது. அந்த ஷாஜகானின் நினைவு நாள் இன்று. காதல் எப்படியான அனுபவம் என விவரிக்க முடியாத பதத்தில் உள்ளதோ ஷாஜகானின் வாழ்வும் அப்படியான ஒன்றுதான். முரண்களின் மீதான ஒரு வாழ்வுதான் ஷாஜகானுடையதும். ஷாஜகான் பல அருமையான நினைவுச்சின்னங்களை எழுப்பினார், அவற்றில் மிகப் பிரபலமாக இருப்பது, ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் தான். ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, தில்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. புகழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது , இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. இவர் கட்டிய தில்லி அரண்மனைதான் கிழக்கு நாடுகளில் இருப்பதிலேயே மிகச் சிறப்பான ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது. தான் இறந்தால் அடக்கம் செய்வதற்காக கருப்பு தாஜ்மஹால் ஒன்றை கட்டத் திட்டமிட்டார். ஆனால் அதற்கு காலம் வழிசெய்யவில்லை. 30 ஆண்டுகள் ஷாஜகான் ஆட்சி புரிந்தார். 1658-ல் ஷாஜகானின் மகனான ஔரங்கசீப் தன் தந்தையை சிறையில் அடைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். பின் தன் வாழ்நாள் முழுவதையும் தன் காதல் மனைவியின் நினைவுகளுடன் ஆக்ரா கோட்டை யின் சிறையிலேயே கழித்தார் ஷாஜகான்.பின்னர், 1666 இதே ஜனவரி 22 -ம் நாள் உடல்நலம் குன்றி சிறையிலேயே மரணமடைந்தார். அவருடைய உடல் தாஜ்மஹாலில் மும்தாஜின் உடல் அருகே அடக்கம் செய்யப்பட்டது. இரு காதலர்களும் இருந்தும் இறந்தும் ஒன்றாயினர்.