பரந்தூர் செல்கிறார் த.வெ.க தலைவர் விஜய்..!

 பரந்தூர் செல்கிறார் த.வெ.க தலைவர் விஜய்..!

பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவை த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது.

காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முடிவு செய்த நிலையில் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் தமிழக வெற்றில் கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.

இதனைத்தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினரை சந்திப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாநில பொருளாளர் உள்ளிட்டோர் நேரடியாக மனு அளித்தனர்.

இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவை சந்திக்க தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதன்படி வரும் 20-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய், போராட்ட குழுவினரை சந்திக்க உள்ளார். இதன் மூலம் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு முதல் முறையாக மக்களை நேரடியாக களத்திற்கு சென்று சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பொதுமக்களை சந்திப்பதற்கான முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அந்த ஏற்பாடுகளை தமிழ் வெற்றிகழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பார்வையிட்டு அதற்கான முன்னேற்பாடுகள் நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். போராட்ட குழு நிர்வாகிகளை சந்தித்து ஏற்பாடுகள் குறித்தும் அப்பகுதியில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இதனிடையே பரந்தூரில் இரண்டாவது பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...