திருப்பாவை பாசுரம் 26
திருப்பாவை பாசுரம் 26
மாலே! மணிவண்ணா! மார்கழிநீ ராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை யெல்லாம் நடுங்குமுரல்வன
பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே,
சாலப்பெரும் பறையே, பல்லாண் டிசைப்பாரே,
கோல விளக்கே, கொடியே, விதானமே,
ஆலின் இலையாய்! அருளேலோ ரெம்பாவாய்.
பொருள்:
அடியவர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே!
நீலக்கல் நிறத்தினை உடையவனே !
பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி
நோன்பிற்கு, வேண்டுவதை கேட்டிடுவாய்
உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும்,
பால் சாதம்போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும்,
பெரிய முரசுகளையும்,
பல்லாண்டு பாடும் பெரியோரையும்,
மங்கள தீபங்களையும்,
கொடிகளையும் தந்து,
இந்தநோன்பை நிறைவேற்று
வதற்குரிய இடத்தையும்
அளித்து அருள் செய்ய வேண்டும்.
விளக்கம்:
கேட்டதையெல்லாம் தருகின்றவன் பரந்தாமன்.
மார்கழிமாதத்தில் அவனைப் புகழ்ந்துபாட என்னென்ன வேண்டும்?
ஒலியெழுப்ப வெண்சங்கு , அதிர்வை ஏற்படுத்த முரசு , அவன்புகழ்பாட இசை தெரிந்த பெரியவர்கள் , இருளை நீக்கி வெளிச்சம் தர தீபங்கள் , காற்றில் அசையும் கொடிகள்,
இவையெல்லாம் ஒருங்கே சேர்ந்த இடம் .
அதுதான் கோவில் .
மனதில் தோன்றும் சலனத்தை ஒருநிலைப்படுத்த சங்கின் ஒலி , முரசின் ஒலி , தீபத்தின் வெளிச்சம் உதவுகிறது.
அப்போது இசை தெரிந்த பெரியவர்கள், கொடி அசையப் பாடும்போது மனதுக்கு இதமாகி இறைவனை வணங்குவதில் கவனம் செல்லும் .
இவையெல்லாம் நடைபெறும் ஒரு இடம் கோவில் . இதனையே மார்கழி நீராடுவோர்
கேட்கின்றார்கள் .