இஸ்ரோவின் புதிய செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ‘வி.நாராயணன்’ நியமனம்..!
இந்திய விண்வெளித் துறையின் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளநிலையில், புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜன.14 முதல் இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இவரை விண்வெளித் துறையின் செயலாளராக நியமித்து அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இஸ்ரோவில் புகழ்பெற்ற விஞ்ஞானியான நாராயணன், இத்துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மேலும் இந்திய விண்வெளித்துறையில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர் GSLV Mk Ill ஏவுகணையின் C25 Cryogenic Project திட்ட இயக்குநராக இருந்தவர். இஸ்ரோவின் சந்திரயான் 2 மற்றும் சந்திரயான் 3 ஆகிய திட்டங்களிலும் முக்கிய பங்காற்றினார்.
இஸ்ரோ தலைவராக மீண்டும் தமிழர்
கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இஸ்ரோவின் தலைவராக கன்னியாகுமரியைச் சேர்ந்த சிவன் பணியாற்றினார். இவரைத்தொடர்ந்து தற்போது கேரளாவைச் சேர்ந்த சோமநாத் பணியாற்றி வருகிறார். சோமநாத் விண்வெளித் துறையின் செயலாளராக ஜனவரி 14, 2022 பொறுப்பேற்றார். இவரின் பதவிக்காலம் ஜன.14 முடிவடைய உள்ளது. இவரைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரும் கன்னியாகுமரியை சேர்ந்தவராவார்.