இன்றைய முக்கிய நிகழ்வுகள் (08.01.2025)
தட்டச்சு தினமின்று!
கணினிகள் பெருகுவதற்கு முன்பு தட்டச்சு எந்திரங்கள்தான், தகவல்களை எளிதாக காகிதத்தில் அச்சடிக்கவும், ஆவணங்களை பதிவு செய்யவும் பயன்பட்டன. தட்டச்சு எந்திரங்களில் திரைகள் கிடையாது. விசைகளை அழுத்தினால் அது மை கொண்ட பெல்ட்டில் அழுத்தம் கொடுத்து, எழுத்தை காகிதத்தில் பதிக்கும்.
இதுவே அரசு ஆவணங்கள் முதல் தனிநபர் தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது. இப்போது தட்டச்சு கருவிகள் காட்சிப் பொருளாகிவிட்டன. இருந்தாலும் கணியின் கீபோர்டுகள் எப்போதும் தட்டச்சு கருவியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும் டைப்ரைட்டர் எனப்படும் தட்டச்சு நாளின்று.
ராபர்ட் கால்ட்வெல், கிறித்தவ சமயப் பணியாற்றுவதற்காகச் சென்னை வந்த நாள்
1838 – திராவிட மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் ராபர்ட் கால்ட்வெல், கிறித்தவ சமயப் பணியாற்றுவதற்காகச் சென்னை வந்த நாள் ஜனவரி 8. அவர் வந்த அன்னை மேரி என்ற கப்பல், புயல் காரணமாக மற்றொரு கப்பலுடன் மோதி மூழ்கிப்போனது. அதிலிருந்து உயிருடன் மீண்ட ஆறு பேரில் கால்ட்வெலும் ஒருவர். 1841இல் குரு பட்டம் பெற்ற அவர், திருநெல்வேலி சென்று, இடையன்குடி என்னும் சிறிய ஊரில் தங்கி 50 ஆண்டு காலம் பணியாற்றினார். அவரது சமயப் பணிக்கு ஆங்கிலம் போதுமென்றாலும், எளிய மக்களுடன் நெருக்கத்தைப் பேணுவதற்காகத் தமிழைக் கற்றார் . சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும்போது, தமிழின் வட்டார வழக்குகளை அறிவதற்காக, திருச்சி, சிதம்பரம், நாகப்பட்டிணம், நீலகிரி என்று பல்வேறு மாவட்டங்கள், கிராமங்கள், மலைப் பகுதிகள் என்று சுற்றிக் கால்நடையாகவே பயணம் செய்தார். 15 ஆண்டுகள் ஆய்வின் முடிவில், 1856இல் இவர் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஆங்கில நூல், திராவிட மொழிக் குடும்பத்தினை விளக்கியதுடன், தமிழின் தனித்தன்மையையும் நிறுவியது. வடமொழியைத் தொன்மையானது என்று கூறிக்கொண்டிருந்த அக்காலத்தில், தமிழ்தான் தொன்மையான மொழி என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார் கால்ட்வெல். இதற்காக அவர் மேற்கொண்ட அகழாய்வு உள்ளிட்ட தேடல்களின் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு என்ற நூலையும் 1881இல் எழுதினார். அதில், கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது சகோதரர்கள் பற்றியும், ஆங்கிலேயர்களுடன் இவர்கள் புரிந்த சமர்கள் பற்றியும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதுடன், மற்ற மொழிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தமிழ்ச் சொற்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். பெயர்களை உயர்திணை, அஃறிணை என்று பிரித்துள்ள இலக்கண முறை உலகில் வேறெந்த மொழியிலும் இல்லாத சிறப்பு என்று போற்றிய கால்ட்வெல், பிற மொழிகளின் துணையின்றி உயர் தனிச் செம்மொழியாக தமிழ் நிலைபெறும் என்றார்.
1964 – ‘ஏழ்மையின் மீதான போர்’ என்பதை, குடியரசுத்தலைவர் உரையில், லிண்டன்-பி-ஜான்சன் அறிவித்த நாள் .
அமெரிக்காவில் அப்போது நிலவிய 19 சதவீத ஏழ்மையைச் சரிசெய்யும் நோக்கம்கொண்ட இவ்வுரையின் அடிப்படையில், பொருளாதார வாய்ப்புகள் சட்டம் என்பது நிறைவேற்றப்பட்டு, பொருளாதார வாய்ப்புகளுக்கான அலுவலகம் என்பதும் தொடங்கப்பட்டது. இதற்கு ‘மகத்தான சமுதாயம்’ என்று பெயரிட்டிருந்த ஜான்சன், ஏழ்மையின் அடையாளங்களை மறைப்பது தங்கள் நோக்கமல்ல, அதைக் குணப்படுத்துவதும், மீண்டும் வராமல் தடுப்பதுமே நோக்கம் என்றார். கல்வியிலும், சுகாதாரத்திலும் அமெரிக்கக் கூட்டரசின் பங்களிப்பை விரிவுபடுத்துவதன்மூலம்தான் ஏழ்மையை ஒழிக்க முடியும் என்று கருதிய அவர், ஏழைக் குழந்தைகளின் பள்ளிக் கல்வியையும், ஊட்டச்சத்தையும் உறுதிப்படுத்திய ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தை உருவாக்கிய, ‘தொடக்க, மேல்நிலைக் கல்விச் சட்டம்’, ஏழைகளுக்கு மருத்துவ வசதிக்கான ‘மெடிக்-எய்ட்’, முதியவர்களின் மருத்துவ வசதிக்கான ‘மெடிக்கேர்’ ஆகியவற்றை உருவாக்கிய ‘சமூகப் பாதுகாப்புச் சட்டம்’ ஆகியவற்றை இயற்றி, போதுமான நிதியும் ஒதுக்கினார். மொத்த வேலையின்மையைவிட, இளைஞர்களின் வேலையின்மை இரண்டு மடங்காக இருந்த நிலையில், ‘ஜாப் கார்ப்ஸ்’ என்ற திட்டத்தின்மூலம், பகுதிநேரப் பணியாற்றிக் கொண்டே, வேலைவாய்ப்புள்ள தொழில் நுட்பங்களைக் கற்றுத் தந்ததுடன், ‘சமூகச் செயல்திட்டம்’ உள்ளிட்டவை மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. ஏழைகளுக்கான உணவுக் கூப்பன்கள் வழங்க, ‘ஃபுட் ஸ்டாம்ப் சட்டம்’ இயற்றப்பட்டது. ‘ஹெட் ஸ்டார்ட்’ திட்டத்தின்மூலம் தொடக்கக் கல்வி பெற்றவர்களுக்கு, அடுத்தகட்ட பயிற்சிகள் அளிக்க ‘ஃபாலோ த்ரூ’ என்ற திட்டமும் தொடங்கப்பட்டது. இவற்றின்மூலம், பத்தாண்டுகளுக்குள் ஏழ்மை விகிதம் 10 சதவீதமளவுக்குக் குறைந்தது. ஆனாலும், 1950களின் இறுதியிலேயே ஏழ்மை குறையத் தொடங்கியிருந்தது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. அப்போது நடைபெற்றுக் கொண்டிருந்த வியட்னாம் போரில், ஓர் எதிரி வீரரைக் கொல்ல 5 லட்சம் டாலர் செலவிடும் அரசு, ஓர் அமெரிக்கரின் நலனுக்கு வெறும் 53 டாலர்களைச் செலவிடுகிறது என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இவையெல்லாம் உண்மையென்றாலும், ஊட்டச்சத்துள்ள உணவு, சுகாதாரமான இருப்பிடம், உடைகள் ஆகியவற்றுக்குத் தேவையான வருவாயை ஏழ்மைக்கான அளவுகோலாக நிர்ணயித்து, அதை நீக்க போதிய அளவு செலவிடப்பட்டது என்பதிலிருந்து, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் இன்றும் அப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், செலவுக்குறைப்பில் ஈடுபடுவதே வறுமையை அதிகரிக்கிறது என்பது கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்!
1835 – வரலாற்றில் முதன்முறையாக (கடைசிமுறையாகவும்!) அமெரிக்க அரசு கடனே இல்லாமல் இருந்த நாள்
அமெரிக்கா உருவானபோதே, விடுதலைப்போர் செலவுகளால் 7.5 கோடி டாலர் கடன் ஏற்பட்டிருந்தது. நெப்போலியப் போர்களின்போது, இங்கிலாந்துடன் ஏற்பட்ட போரைத் தொடர்ந்து, இந்தக் கடன் 12.7 கோடி டாலராக வளர்ச்சியடைந்தது. ஜனநாயகக் கட்சியைத் தொடங்கியவரான ஆண்ட்ரூ ஜாக்சன், அரசின் கடனை “நாட்டின் சாபம்” என்று குறிப்பிட்டதுடன், முழுமையாக அடைப்பதாகவும் கூறினார். 1829இல் கடன் 5.8 கோடி டாலர்களாகக் குறைந்திருந்த சூழலில், அவர் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், தொழில்கள் வளர்ந்து வரி வருவாயும் அதிகரித்ததால், 1835 ஜனவரி 1இல் கடன் வெறும் 33,733 டாலர்களாகக் குறைந்தது. ஜனவரி 8இல், அனைத்துக் கடன்களும் செலுத்தப்பட்டுவிட்டதாகவும், அமெரிக்க அரசு கடனற்ற அரசு என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தக் கடனற்ற நிலை, ஓராண்டுகூட நீடிக்கவில்லையென்றாலும், அதுவே, உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் ஒன்று எவ்வித கடனுமின்றி இருந்த ஒரே நிகழ்வாகும். மீண்டும் 1836 ஜனவரி 1இல், 37,000 டாலராக உயர்ந்த கடன், 1837இன் பதட்டத்தைத் தொடர்ந்து 2 கோடியாகவும், உள்நாட்டுப் போருக்குப்பின் 260 கோடியாகவும், முதல் உலகப் போருக்குப்பின் 2,700 கோடியாகவும், இரண்டாம் உலகப் போருக்குப்பின் 26,000 கோடியாகவும் உயர்ந்தது. இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் 21.92 லட்சம் கோடி (சராசரியாக ஒவ்வொரு அமெரிக்கக் குடிமகனுக்கும் 66,770) டாலராக இருக்கும் அமெரிக்க அரசின் கடன், 2028இல் 33.85 லட்சம் கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொகை மதிப்பில் உலகின் மிகப்பெரிய கடன் அமெரிக்காவுடையதுதான் என்றாலும், அது அந்நாட்டின் ஜிடிபியில் சுமார் 70 சதவீதம்தான். ஆனால், ஜப்பானின் கடன் அந்நாட்டின் ஜிடிபியில் சுமார் 250 சதவீதம் (ஒவ்வொரு குடிமகனுக்கும் 92,710 டாலர்) என்பதும், ஜிடிபி விகிதப்படி அமெரிக்காவைவிட அதிகக் கடனுடன் 40க்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கவை.
ஹேப்பி பர்த் டே ஸ்டீபன் ஹாக்கிங்
பிரிட்டனில் 1942ம் வருடம் பிறந்த ஸ்டீபன் படிப்பில் படு சுட்டியாக இருந்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டு இருந்தபோது, தன் உடல் தளர்ந்திருப்பதை உணர்ந்தார். காரணமின்றி அடிக்கடி கீழே விழுந்தார். 21ம் வயதில் உடலெங்கும் தசை மாதிரிகளை வெட்டி எடுத்துப் பரிசோதித்தும் மருத்துவர்களால் தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. ஆனால், இரண்டு அல்லது மூன்று வருடத்துக்கு மேல் உயிர் வாழ முடியாது என்பதை மட்டும் தீர்மானமாகச் சொன்னார்கள். துயரத்திலிருந்த ஸ்டீபனுக்கு எதிர்வார்டில் ஒரு சிறுவன் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டான். சில நாள்களிலேயே எதிர்பாராமல் நிகழ்ந்த அந்தச் சிறுவனின் மரணம், பயம் தருவதற்குப் பதிலாக தைரியம் கொடுத்தது. அந்தச் சிறுவனைவிட நான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்பதை உணர்ந்தார். உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் மூளையும் சிந்தனையும் முழுஉற்சாகத்துடன் இருப்பதை உணர்ந்தார். சக்கர நாற்காலியில் இருந்தபடியே பல்கலைக்கழக ஆய்வினை முடித்து, பேராசிரியர் ஆனார். திருமணம் முடிந்தது. மூன்று குழந்தைகளும் பிறந்தன. ஏ.எல்.எஸ் எனக் கண்டறியப்பட்ட நரம்பு நோய் முற்றியதால், 1985ம் வருடம் அவரது உடல் முழுமையாக செயலிழந்தது. ஆனாலும் நம்பிக்கை இழக்காமல் வலக் கண்ணை மட்டுமே அசைத்து எழுத்துக்களை அடையாளம் காட்டிப் பாடம் நடத்தியதுடன், வரலாற்றுத் திருப்புமுனையான புத்தகம் ஒன்றும் எழுதினார். ‘A Brief History of Time’ என்கிற அந்தப் புத்தகம் ஸ்டீபனின் புகழை உச்சிக்கு உயர்த்தியது. கலிபோர்னியாவைச் சேர்ந்த கணிணி நிபுணர் ஒருவர் ஸ்டீபனின் கண்ணசைவுக்கு இயங்கும் கணிப்பொறி மென்பொருள் கண்டுபிடித்து சக்கர நாற்காலியில் பொருத்தித் தர சிரமம் குறைந்து. அதிகமாகச் சிந்தித்து நிறயை எழுதிக் குவித்தார் ஸ்டீபன். ‘காலம் எப்போது துவங்கியது? எப்போது முடியும்? காலத்தை பின்னோக்கிச் சென்று காண முடியுமா? விண்வெளிக்கு எல்லை உண்டா?’ என எல்லோர் மனதிலும் இருக்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் சொல்லி மலைக்க வைத்த ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்வு, மருத்துவர்களுக்கு இன்றும் ஒரு புதிர்தான். உடல்நிலை மோசமான காலகட்டத்தில் மனைவியும், குழந்தைகளும் அவரை விட்டுப் பரிந்தனர். ஸ்டீபன் அப்போதும் மனமம் தளராமல் தன்னை அன்புடன் கவனித்துக் கொண்ட செவிலியை இரண்டாவதாகத் திருமணம் முடித்தார். இவரது மந்திரச் சொல், “எதை இழந்தீர்கள்.
மூதறிஞர் அடிகளாசிரியரின் நினைவு தினம்
ஜனவரி 8.. அடிகளாசிரியர் என்று பரவலாக அறியப்படும் குருசாமி (ஏப்ரல் 17, 1910 (பிறப்பு தமிழ் நாட்காட்டியில்: 1910 சாதாரண ஆண்டு சித்திரை 5 ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை) – சனவரி 8, 2012) தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழறிஞரும் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார். 2011ஆம் ஆண்டு தில்லியில் குடியரசுத் தலைவரிடமிருந்து செம்மொழி உயராய்வு விருதுகளில் இவரது சிறந்த தமிழ் பணிக்காக 2005 – 2006 ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது பெற்றவர்.