சென்னை திரும்பினார் சிகரம் தொட்ட பெண்
அண்டார்ட்டிகாவில் உள்ள உயரமான சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ்ச்செல்வி சென்னை திரும்பியதும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி(34). இவர் இதுவரை 5 உயரமான சிகரங்களில் ஏறி சாதனை படைத்துள்ளார். தற்போது 6வது சாதனை பயணமாக அண்டார்டிக்காவில் உள்ள மவுண்ட் வில்சன் மலையில் 4892 மீட்டர் உயரமான சிகரத்தில் 58 கிலோ எடை கொண்ட பொருட்களுடன் ஏறி சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், சாதனை படைத்துவிட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்த போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சால்வைகளை போர்த்தியும், மலர்கொத்துகளை கொடுத்தும் அவரை வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தமிழ்ச்செல்வி, “உலகின் 7 கண்டங்களில் உள்ள உயரமான சிகரங்களை அடைந்து சாதனை புரிய திட்டமிட்ட நிலையில் தற்போது 6வது சிகரத்தை அடைந்துள்ளேன். மேலும் மைனஸ் 50 டிகிரி குளிர் காற்று மற்றும் வானிலை சீராக இல்லாததால் மிகுந்த சிரமம் ஏற்பட்டது . விமானத்திற்காக 8 நாள் காத்திருந்தோம்.காலநிலை மாற்ற விழிப்புணர்வுக்காக அண்டார்ட்டிகா சென்றேன்.
இதற்காக முதலமைச்சர் நிதி உதவி செய்தார். எனவே, அவருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். 7வது சிகரம் வட அமெரிக்காவில் உள்ளது. மே மாதம் தான் செல்ல முடியும். இதை செய்தால் 7 கண்டங்களை ஏறிய சாதனையை முழுமை செய்து விடுவேன். வாழ்க்கையில் முயற்சி செய்து வெற்றி பெற்றால் தான் மகிழ்ச்சியாக இருக்கும். குறுக்கு வழியில் வெற்றி பெற கூடாது “என்று அவர் தெரிவித்துள்ளார்.