அரசுப் பேருந்துகள் இனி சிக்னலில் நிற்காது..!
ஜிஎஸ்டி சாலையில் பஸ் சிக்னல் முன்னுரிமை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் முதற்கட்டமாக ஆலந்தூர் முதல் விமான நிலையம் வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜனவரி 2025ல் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
எம்டிசி பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணியும், முக்கிய சிக்னல் புள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. இந்த பஸ் சிக்னல் முன்னுரிமை அமைப்பு எம்டிசி பஸ்சைக் கண்டறிந்து, சிவப்பு சிக்னலின் கால அளவைக் குறைத்து, கிரீன் சிக்னலை வழங்கும். இதனால் பஸ்கள் தேவையற்ற நிறுத்தங்கள் இல்லாமல் கடந்து செல்ல முடியும். எம்டிசி பேருந்துகளுக்கு இந்த டைனமிக் மாற்றங்களால் முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
இந்த டைனமிக் மாற்றங்கள் நிகழ்நேரத் தரவை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இது ஒட்டுமொத்த போக்குவரத்து ஓட்டத்தின் செயல்திறனைப் பாதுகாக்கும் அதே வேளையில், பொதுப் போக்குவரத்து வாடிக்கையாளர்களுக்கு நன்மைகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.