வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ்..!
திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை சொர்க்க வாசல் வழியாக ஏழுமலையானை காண பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானம் ரிலீஸ் செய்தது. மொத்தம் 1.40 லட்சம் டிக்கெட்டுகளும் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தன.
ஜனவரி 10ஆம் தேதி முதல் ஜனவரி 19ம் தேதி வரை சொர்க்கவாசல் தரிசனத்தை பக்தர்கள் கண்டு களிக்கலாம். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சொர்க்க வாசல் தரிசனத்திற்கான டோக்கன்களை பெற்றுள்ள பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதமாக முதியோர், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர், மாற்றுத் திறனாளிகள், ராணுவ வீரர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
மேலும் ரூ 300 சிறப்பு தரிசனமும் இருக்காது. அனைத்து பக்தர்களும் சர்வ தரிசனம் மூலமாகவே ஏழுமலையானை தரிசிப்பார்கள். டோக்கனில் குறிப்பிட்ட நேரத்தில மட்டுமே திருமலைக்கு பக்தர்கள் வர வேண்டும்.
அப்படி வந்தால் அவர்களுக்கான காத்திருக்கும் நேரம் குறையும். முன்னாள் தேவஸ்தான அறங்காவலர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் யாருமே வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஜனவரி 10 ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விஐபி பிரேக் தரிசனங்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்காக 10 நாட்கள் வரை 3000 ஸ்ரீவாரி தன்னார்வ தொண்டு சேவகர்கள் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சேவை செய்ய நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
வைகுண்ட ஏகாதசி ஜனவரி 10ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து வைணவ தலங்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாசன் கோயில் உள்ளிட்ட இடங்களில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெறும்.
மார்கழி மாதத்தில் நடக்கும் இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடத்தப்படும். இந்த 10 நாட்களும் வைகுண்ட துவாரம் எனப்படும் சொர்க்கவாசல் திறந்திருக்கும். அதன்வழியாக சென்று ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அனைத்து கோயில்களிலும் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடப்படும். இந்த நேரத்தில் பெருமாள் மகிழ்ச்சியாக இருப்பார். அதனால் அவரிடம் என்ன வேண்டினாலும் அது கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த சொர்க்க வாசல் துவாரம் வழியாக ஏழுமலையானை தரிசிக்க இன்று காலை 11 மணிக்கு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் டிக்கெட்டுகள் ரிலீஸானது. மொத்தம் இந்த 10 நாட்களுக்கு அதாவது ஜனவரி 10-ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை 1.40 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸாகின. அவற்றிள் மொத்த டிக்கெட்டுகளும் 5 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்துவிட்டன. ரூ 300 ஒரு டிக்கெட் என விற்பனை செய்யப்பட்டது.