இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.12.2024)
தேசிய நுகர்வோர் உரிமைகள் தினம் இன்று.
உலக நுகர்வோர் தினம் மார்ச் 15ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. என்றாலும் இந்தியாவில் ஆண்டுதோறும் நுகர்வோர் விழிப்புணர்வை வலியுறுத்தி டிசம்பர் 24ஆம் தேதி தேசிய நுகர்வோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. 1986ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இந்திய அரசால் ஏற்படுத்தப்பட்டது. சந்தையில் விற்பனையாளர்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டியை உறுதி செய்வதற்கும் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் இந்த சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டம் வர்த்தகர்கள் மற்றும் சேவை வழங்குவோர் தங்களது வணிகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யவும் வழிவகை செய்கிறது. மேலும் எந்தவொரு பொருள் வாங்கினாலும் ரசீதையும் கேட்டு வாங்க வேண்டும். அப்போதுதான் ஏதாவது பிரச்சனை என்றால் உரிமையோடு போராட முடியும் என்பதற்காக உருவாக்கப்பட்டது.
கதிரியக்க அணுக்கருவைச் செலுத்தி, கலிஃபோர்னிய மருத்துவர் ஜான் லாரன்ஸ் சிகிச்சையளித்த நாள்
1936 – லுகேமியா என்னும் ரத்தப் புற்றுநோய் முற்றிய நிலையிலிருந்த ஒரு 28 வயதுப் பெண்ணுக்கு, பாஸ்பரஸ்-32 கதிரியக்க அணுக்கருவைச் செலுத்தி, கலிஃபோர்னிய மருத்துவர் ஜான் லாரன்ஸ் சிகிச்சையளித்த நாள் மனிதர்கள்மீதான இந்த முதல் அணுக்கரு சிகிச்சையை மேற்கொண்ட அவரே அணுக்கரு சிகிச்சையின்(நியூக்ளியார் மெடிசின்) தந்தை என்று போற்றப்படுகிறார். அணுக்கரு சிகிச்சை என்ற முயற்சி, 1920களின் இடைப்பகுதியில் ஜெர்மெனியில், ஹங்கேரிய கதிரியக்க வேதியிலாளரான ஜார்ஜ்-டி-ஹெவசி என்பவரால்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது. எலிகளுக்குள் கதிரியக்க அணுக்கருவினைச் செலுத்தி, அவற்றின் உடலியக்கத்தை இவர் கண்காணித்ததே, கதிரியக்கக் கண்காணிப்புக்கான தொடக்கமாக அமைந்தது. 1934இல் ஐரீன்-ஜோலியட்-கியூரி(மேரி கியூரியின் மகள்), அவர் கணவர் ஃப்ரடரிக் ஜோலியட் கியூரி ஆகியோர் செயற்கையாக கதிரியக்க அணுக்கருவை உருவாக்கியது, இத்துறையின் வளர்ச்சியில் மிகமுக்கிய முன்னேற்றமாக அமைந்தது. இந்தக் கண்டுபிடிப்புக்காக இவர்களுக்கு 1935இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஜார்ஜ்-டி-ஹெவசி-க்கும் கதிரியக்கக் கண்காணிப்பு முறையை உருவாக்கியதற்காக 1943இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1971இல் அமெரிக்க மருத்துவக் கழகம், அணுக்கரு சிகிச்சையை ஒரு சிறப்பு மருத்துவப் பிரிவாக அங்கீகரித்தது. எக்ஸ்-ரே கதிரியக்கமே முதன்முறையாக, உயிருடன் உள்ள மனித உடலின் உள்ளுறுப்புகளை ஆய்வு செய்ய உதவியது. எக்ஸ்-ரே உள்ளிட்ட ஆய்வுகளிலும், புற்றுநோய் போன்றவற்றிற்குச் செய்யப்படும் கதிரியக்கச் சிகிச்சைகளிலும், உடலின் வெளிப்புறமிருந்து கதிரியக்கம் செலுத்தப்படுகிறது. ஆனால், அணுக்கரு சிகிச்சையில், கதிரியக்க அணுக்கரு உடலுக்குள் செலுத்தப்பட்டு, உள்ளிருந்து வெளிப்படும் கதிரியக்கம் கண்காணிக்கப்படுவதன்மூலம், பிறவகையிலான அனைத்து மேம்பட்ட (சிடி, பிஇடி, எம்ஆர்ஐ) ஆய்வு முறைகளையும்விட தெளிவான தகவல்கள் பெறப்படுகின்றன. உடலுக்குள் பெரும்பாலும் ஊசி மூலம் செலுத்தப்படும் கதிரியக்க அணுக்கரு, குறிப்பட்ட பாதை வழியாகச் செல்லும்படியோ, அல்லது குறிப்பிட்ட உறுப்பில் சேகரமாகும்படியோ செய்யப்படுகிறது. இதன்மூலம், உள்ளுறுப்புகளைப் பற்றிய தெளிவான தகவல்கள் மட்டுமின்றி, செல்களின் செயல்பாடுகள்வரை கண்காணிக்க முடிவதால், நோயின் தோற்றுவாய் குறித்தே அறிய முடிவதுடன், நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு அவரது உடல் எவ்வாறு வினையாற்றுகிறது என்பதையும்கூட அறிய முடிகிறது. பொதுவாக நோய்கள் உடலின் உட்பகுதியில் தோன்றக்கூடியவையாக இருப்பதால், தொடக்க நிலையிலேயே அறிய முடிவது, முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்கவும், தெளிவான தகவல்கள் இருப்பது பொருத்தமான சிகிச்சையைத் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறது.
‘தந்தை பெரியார்’ ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று.
‘பகுத்தறிவு பகலவன்’, ‘வைக்கம் வீரர்’, ‘தந்தை பெரியார்’, தென்னிந்தியாவின் சாக்ரடீஸ் என பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் ஈ.வெ ராமசாமி மறைந்த தினம் இன்று..1879 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி, ஈரோட்டில் பிறந்த இவர், தன்னுடைய சிறு வயது முதலே தன்னுடைய பகுத்தறிவால், புராணக் கதைகளில் தனக்கு தோன்றிய வினாக்களுக்கு விடை தேடத் தொடங்கினார். காங்கிரஸ் கட்சியின் கொள்கை மேல் கொண்ட ஈடுபாடு காரணமாக 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். 1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கம் ‘மூடப்பழக்க வழக்கங்களை மக்களிடத்திலிருந்து அகற்றுவதை’ நோக்கமாக கொண்டு செயல்பட்டது. பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிடர் கழகம்’ என பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகு விரைவில் மக்களிடத்தில் சென்று சேர்ந்தது. திராவிடர் கழகம், சமுகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, கடவுள்மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தி தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகவே இருந்தது. எழுச்சியூட்டும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தை பெரியார், 1973 டிசம்பர் 24, இதே நாளில்தான் காலமானார். பெரியார் மறைந்தபோது தலைவர்கள் தந்தை பெரியார் பற்றி கூறியவை சில ©கலெக்ஷன் ரிப்போர்ட் By #கட்டிங் கண்ணையா குடியரசுத் தலைவர் வி.வி.கிரி காலஞ்சென்ற திரு.ஈ.வெ.ராமசாமி நயம்மிக்கதோர் தலைவர், வீரம் மிக்கதோர் போராட்டக்காரர். அன் னாரது மறைவுச் செய்தி கேட்டு நான் மிக்க வருத்தமுறுகின்றேன். அவர் எப்பொழுதுமே சிறந்ததோர் போராட்டக்காரராக நிகழ்ந்திருக் கிறார். தேச விடுதலைக்கான போராட்டத்தில் அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் முக்கியமான பங்கினை வகித்திருக்கிறார். பின்னர், அவர் தாம் கண்ட கருத்துக்கிசைய சமூக சீர்த் திருத்தங்களுக்காகத் தம்மை அர்ப் பணித்துக் கொண்டார். அன்னாரை இழந்து துயருறுகின்றவர்களுக்குத் தயவு செய்து எனது ஆழ்ந்த அனு தாபத்தைக் கூறுங்கள். பிரதமர் இந்திராகாந்தி பெரியாரது மறைவுபற்றி அறிந்து துயருற்றேன். சர்ச்சைக்குரியனவற்றில் ஈடுபாடு கொண்டு, அதில் களிப்பெய் திய முனைப்பாற்றல் மிக்க மனிதர் அவர். ஏற்றுக் கொள்ளப்பட்ட பல கருத்துகளை எதிர்த்து அறைகூவி நின்றவர் அவர். அவருடன் சேர்ந்து பணியாற்றிய அவர் இயக்க ஊழியர் களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறேன். ஜெயப்பிரகாஷ் நாராயண் (சர்வோதயத் தலைவர்) பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஜாதி மூட நம்பிக்கை களை முழுமூச்சாக எதிர்த்த பெருந்தலைவர். இந்தியாவில் அவரைப் போன்ற ஒரு தலைவரைப் பார்க்கவே முடியாது. கொடுமைக்கு எதிராகப் பெரும் போர் தொடுத்தவர் அவர். தமிழக ஆளுநர் கே.கே.ஷா ஆர்வம் மிக்க சமூகச் சீர்த் திருத்தவாதியான திரு.ஈ.வெ.ராமசாமி யின் மறைவு குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் பெரியார் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்த அந்தப் பகுத்தறிவுச் சிங்கம், கடைசி மூச்சு வரை சமுதாயப் பணியை நடத்திய சரித்திரத்தை யாரும் மறக்க முடியாது. இன்று தமிழ்நாடு தன்மான உணர் வோடு தலைதூக்கி நிற்பதற்குக் காரணமாக இருந்த மாபெரும் தலைவர் அவர். அவரால் சமுதாய அந்தஸ்து பெற்ற லட்சோப லட்சம் மக்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்கள் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது. எங் களை எல்லாம் ஆளாக்கிய எங்கள் வழிகாட்டியின் இந்தப் பிரிவு பற்றி என்ன சொல்வதென்றே புரியாமல் திண்டாடுகின்றேன். இந்தியாவின் தலைசிறந்த சீர்த்திருத்தப் புரட்சிக் காரரை இழந்துவிட்டோம். அவர் தன்னுடைய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டார்; நாம் தொடர் வோம். டாக்டர் நாவலர் (கல்வித்துறை அமைச்சர்) யாருக்கும் அஞ்சாமல், எதற்கும் அஞ்சாமல் தமிழகம் எங் கணும் வீர நடை போட்டு வந்த பகுத்தறிவுச் சிங்கம் இன்று சாய்ந்து விட்டது என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும். பெரும் துக்கத்தையும் அளிக்கின்றது.பகுத்தறிவுத் தந்தை பெரியார் அவர்கள் நாட்டு விடுதலைப் போராட்டத்திலும், சமூகச் சீர்த் திருத்தக் கிளர்ச்சிகளிலும், மொழி யுரிமைப் போராட்டத்திலும் பங்கு கொண்டு அவர் புரிந்த சாதனைகள் பலவாகும். பொதுத்தொண்டு புரிபவர்களுக் குச் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக அவர் திகழ்ந்து வந்தார். பொதுவாக, தமிழ்ப் பெருங்குடி மக்களுக்குக் குறிப்பாகத் தமிழக அரசுக்கும் அவர் பெரும் துணையாக இருந்து அருந் தொண்டு ஆற்றி வந்தார். அவரது இழப்பு திராவிட முன்னேற்றக்கழ கத்துக்கு, ஆட்சிக்கும் பேரிழப்பு ஆகும்.அவர் பரப்பிவந்த பகுத்தறிவு நெறியை, அறிவியலின் துணை கொண்டு தொடர்ந்து பரப்புவதில் ஈடுபடுவதுதான் நாம் அவருக்குக் காட்டக் கூடிய நன்றிக்கடனாகும். வளம்மிகுந்த தமிழ்நாடு, வளர வொட்டாமல் தடுத்து வருகின்ற மூடப்பழக்க வழக்கங்களையும் அவர் கூறிய அறிவுரைகளை ஏற்று, அவற்றை ஒழித்து, சிறந்த தமிழ கத்தைக் காண நாம் அனைவரும் ஈடுபடுவோமாக. வாழ்க பெரியார் புகழ்!வெல்க அவருடைய பகுத்தறிவு நெறி! கு.காமராஜர் நமது நாட்டின் லட்சோப லட்சம் மக்களால், பெரியார் என்று பாசத்துடன் அழைக்கப் பட்டு வந்த திரு. ஈ.வெ. ராமசாமி இன்று நம்மைவிட்டு மறைந்தார். அன்னாரது மறைவு பொது வாழ்க்கைக்குப் பெரிய இழப்பு.நாம் ஆர்வத்துடன் நம்பிய இலட்சியங்களுக்காக அவர் கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலா கத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு பணி புரிந்துவந்தார். நமது நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் சமூக விழிப்பு ஏற்பட அவர் ஆற்றிய பணி, அவர் வகித்த பாத்திரம் மிகப் பெரியது. அவர் ஒரு மாபெரும் தேச பக்தர். ஆரம்பத்தில் அவர் இந்திய தேசிய காங்கிரஸ் தீவிர உறுப்பினராக இருந்து காந்தியார் துவக்கிய இயக்கங்களில் பங்கேற்றார்; பல முறை அவர் சிறையேகினார். பின்னர், தீவிரமான சமூக சீர் திருத்தப் பிரச்சாரப் பணியைத் தமக்கென வரித்துக் கொண்டார். பெரியார் நமது சமூகத்துக்கு ஆற்றிய சேவைகள் நம் மனத்தில் நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கும். தமது கருத்துகளைப் பயம் துளியுமின்றி எடுத்துக்கூறியவர் களில் பெரியாரும் ஒருவர். கடைசி வரை அவர் விடாமுயற்சியுடன் சலி யாத கடும் பணியில் ஈடுபட்டிருந் தார். அன்னாருக்கு எனது மரியாதை கலந்த இரங்கல். சி.சுப்பிரமணியம் (மத்திய தொழிலமைச்சர்) தந்தை பெரியார் மறைவு பற்றி செய்தி அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன். தமிழ்நாடு மட்டுமல்லாமல், மனித சமுதாயம் முழுமைக்குமே இது பெரும் இழப்பாகும், பி.இராமச்சந்திரன் (த.நா.கா.க.தலைவர்) திராவிடர் கழகத்தின் தலைவர் திரு.ஈ.வெ.ராமசாமி அவர்களின் மறைவு இந்த நாட்டின் பொது வாழ்க்கையில் குறிப்பாக, தமிழ் நாட்டின் பொதுவாழ்க்கையில் மாபெரும் இழப்பாகும். அவர் தீவிர காங்கிரஸ்காரராக இருந்தார்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்; விடு தலை இயக்கத்தின் முன்னணியில் அவர் இருந்தார்; அவர் வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறைச்சாலை ஏகினார். தேசத்தின் விடுதலைக்கும், சமூகச் சீர்த்திருத்தத்துக்குமாக வேண்டி நடத்திய போராட்டங்கள் அவரது பொதுவாழ்வில் நிரம்பியிருந்தன. தாழ்த்தப்பட்ட மக்களை முன் னேற்றுவதற்காக அவர் ஆற்றிய பணிகள் மக்களால் என்றும் நினைவில் நிறுத்திக் கொள்ளப் படும்.மறைந்த தலைவருக்கு நான் எனது மரியாதை கலந்த அஞ்சலி யைச் செலுத்துகிறேன். ம.பொ.சிவஞானம் (தமிழரசுக் கழகத் தலைவர்) பெரியார் ஈ.வெ.ரா. உலகில் தோன்றிய சமுதாய சீர்திருத்தப் புரட்சியாளர்களில் தலைசிறந்த வராகத் திகழ்ந்தார். தனக்கெனப் புதிய சரித்திரம் படைத்து, உலக சரித்திர நாயகர்கள் வரிசையில் சிறப்பிடம் பெற்று விளங்கியவர் பெரியார். உயிர் விடும்வரையில் தம்மு டைய குறிக்கோள்களில் பெரியார் கொண்டிருந்த உறுதியும், எதிர்ப் புக்கு அவர் ஈடுகொடுத்த தீரமும், இன்னொருவரை இணை சொல்ல முடியாது. பெரியாரோடு தமிழக அரசியல் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. தவத்திரு. குன்றக்குடி அடிகளார் தமிழகத்தின் காவலர், புரட்சி கரமான சிந்தனையாளர் தலைவர் பெரியார் மறைந்தது இன்றைய தமிழகத்தில் ஈடுசெய்ய முடியாத இழப்பு. வாழ்நாள் பெரும் பகு தியை தலைவர் பெரியார் போல் பொதுப்பணியில் ஈடுபடுத்தியவர் அருமையிலும் அருமை. தமிழகத் தின் அரைநூற்றாண்டு வரலாற்றில் அவர் முத்திரை பதியாத துறையே இல்லை எனலாம். கலக்கமில்லாத, கருத்துப் பிடிப்பு, உண்மையான உழைப்பு அவருக்கே உரிய குண நலன்கள். தமிழன் என்ற இனஉணர்வை முன்னிலைப்படுத்தி, அயராது உழைத்த பெரியவர்; பழகுவதற்கு இனிய பண்பாளர்; கடுமையான கருத்து வேற்றுமை உடையவர் இருந்தும் கூட, அவர் காட்டிய கண்ணியம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு எடுத்துக் காட்டாகும். தமிழர் என்ற இன உணர்வைத் தூண்டி வளர்த்து, அது செழித்து வளர்ந்து, பூத்துக் காய்க்கின்ற போது அவர் நம்மைவிட்டுப் பிரிந்து விட்டார். ஆயிரம் கருத்து வேற்றுமை இருந்தாலும் அவர் மனித குலத்தின் மீது கங்கு கரை யற்ற அன்புடையவர் என்பதை யாராலும் மறுக்கமுடியாது ஜாதி வேறு பாடற்ற சமுதாய அமைப்பு. தமிழர் இனத்தின் முன்னேற்றம் ஆகியவை அவர் நமக்கு வீட்டுச் சென்றிருக்கிற பணிகள். அந்தப் பணிகளைச் செய்து நிறைவேற்று வது தலைவர் பெரியாருக்குச் செய்யும் கடமையாகும். தமிழினத்தின் பகையைக் கண்டு, சிம்ம முழக்கம் செய்த ஒரு ஆன்மா ஓய்ந்துவிட்டது. ஆனால், அவர் ஏற்றி வைத்த விளக்கு, எடுத்துத் தந்த லட்சியம் ஓயாது பயணம் செய்யும். பி.இராமமூர்த்தி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்) பெரியார் ஈ.வெ.ரா. தமிழ் நாட்டில் மட்டுமின்றி, இந்தியா பூராவிலும் தனித்தன்மை கொண்ட தலைவராகத் திகழ்ந்தார். அரசியலைப் பொறுத்த வரை யில் ஒருவருக்கு, அவருடன் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால், அவர் நாட்டின் வைதிகத்தின் காழ்ப்பையும், வெறுப்பையும் தீரத் துடன் எதிர்த்து நின்று மக்களை ஒடுக்கிக் கேவல நிலையில் வைத் திருந்த ஜாதிக் கொடுமை, மூடநம் பிக்கை ஆகியவற்றையும் மக்களை நிரந்தரமாக அடிமைத்தளையில் வைத்திருக்க மக்களிடம் ஊட்டப் பட்ட கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து சமூக நீதிக்காக 50 ஆண்டு களுக்கும் மேலாக அயராது போரா டியவர். இது இந்நாட்டின் வர லாற்றில் என்றென்றும் சிறப்பான அத்தியாய மாகத் திகழ்ந்துவரும், பிறப்பில் தாங்கள் உயர்ந்த குலத் தைச் சேர்ந்தவர்கள் என்று பிரா மண சமூகத்தினர் கருதிக் கொண் டதை பெரியார் எதிர்த்துப் போரா டினார். ஆனாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியது கிடையாது. சமூக ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள், பெரியாரின் மறைவின் மூலம் சமூகக் கொடுமைக்கு எதி ராகப் போரிட்டு வந்த ஒரு மாபெரும் வீரரை இழந்து விட்டனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் கடந்த 50 ஆண்டு களாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சமூகச் சீர்த்திருத்த இயக்கம் துவக்கி நடத்திய பெரியார் மறைவு அதிர்ச்சி தரும் செய்தியாக உள்ளது. எம்.ஜி.இராமச்சந்திரன் (அ.தி.மு.க.தலைவர்) தமிழர் சமுதாயம் தனது பாது காவலனை இன, மொழி உயர் வுகளுக் காக அரசி யல், பொரு ளாதார விடு தலைக்காகப் போராடி, போராட்டத் திலேயே தனது வாழ் நாளின் பெரும் பகுதியைக் கழித்த விடுதலை வீரரை இன்றைக்கு இழந்து விட்டது. இந்தியத் துணைக்கண்டம் ஒரு நூற்றாண்டு வரலாறு படைத்த பேராண்மையும், பேராற்றலும் மிக்க மாவீரர்களின் வரிசையிலே கடைசிச் சின்னத்தை இழந்துவிட்டது. திராவிடர் இயக்கத்திலே தங்களை ஒப்படைத்துக் கொண்ட லட்சோப லட்சம் குடும்பங்கள் தங்களது தந்தையை இழந்து தவித்து நிற்கிறது. உலகம் ஓர் ஆற்றல் மிக்க சிந்தனையாளரை, மக்கள் சமுதாய வழி காட்டிகளில் ஒருவரை இழந்து விட்டது. பரூக் மரைக்காயர் (புதுவை முதல்வர்) தந்தை என்று உரிமையோடு அழைக்கப்பட்டு வந்த தனிப்பெருந் தமிழகத் தலைவர் தந்தை பெரியாரின் மறைவுச் செய்தி கேட்டு மீளாத் துயருற்றேன். தமிழ்ச் சமுதாயத்தின் அறிவுக் கண்ணைத் திறந்து மக்களிடையே மலிந்து கிடந்த மூடப்பழக்கவழக் கங்களையும், அர்த்தமற்ற வழிமுறை களையும் தூக்கி எறிந்து பகுத்தறிவு உணர்ச்சியைத் தோற்றுவித்த பெருமை பெரியாரையே சாரும்.எண்ணற்ற இளம் தலைவர்களை உருவாக்கியும், சமுதாயத்தில் புதிய தோர் விழிப்புணர்ச்சியைத் தோற்று வித்தும், ஜாதியின் பெயரால் கொடு மைகளுக்கு ஆளான சமுதாயத்தின ருக்குப் புதுவாழ்வு தந்தும் பெரியார் என்ற தனி மனிதர் தமிழரின் வர லாற்றில் ஈடற்ற ஓர் சகாப்தமாகத் திகழ்கின்றார். வாழ்நாள் முழுமையும் சமுதாய சீர்த்திருத்தங்களுக்காகவே அர்ப்பணித்து, இறுதி வரையில் தான் நிறுவிய திராவிடர் கழகம் அரசிய லில் ஈடுபடாமல், சமுதாய முன் னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் நிகழ்ச்சி, இந்திய வரலாற்றிலேயே போற்றுதற்குரியதாகும்.தந்தைபெரியாரின் மறைவு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு ஆகும். அவரது சீர்திருத்தக்கருத்துகளையும், சுயமரியாதை எண்ணங்களையும் மக்களிடையே பரப்புகின்ற நற்பணி யில் நம்மை மேலும் ஈடுபடுத்தி, பெரியாரின் அரிய நினைவுக்கு அஞ்சலி செலுத்துவோம். தந்தை பெரியாரின் இறப்பினால் வருந்துகின்ற எண்ணற்ற தமிழ் நெஞ் சங்களோடு நானும், என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். பக்தவத்சலம் (தமிழக முன்னாள் முதல்வர்) யாரைப்பற்றியும், எதைப்பற்றி யும் என்ன நினைக்கிறாரோ அதை ஒளிக்காமல் சொல்லக்கூடிய அஞ்சா நெஞ்சம் படைத்தவர் ஈ.வெ.ரா. பெரியார் ஒரு தனி மனிதரல்ல; அவர் ஒரு பெரிய ஸ்தாபனம்.ஆரம்பகாலத்தில் பெரியார் காங் கிரசின் தீவிர தலைவராக இருந்தார். ராஜாஜியின் நெருங்கிய நண்பராக வும் இருந்துவந்தார். பெரியாரின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும். தேவராஜ் அர்ஸ் (கருநாடக முதல்வர்) தமிழ்நாட்டு அரசியலில் பல்லாண்டு காலம் புரட்சிப் புயலாய் விளங்கியவர் பெரியார். அவர் பிரச் சாரம் செய்த எல்லாக் கொள்கை களையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம்; அவர் கையாண்ட வழி முறைகளையும் நாம் ஏற்கமுடியாமல் இருக்கலாம். என்றபோதிலும் ஏழை, எளியவர்களுக்காகவும், தாழ்த்தப் பட்ட மக்களுக்காகவும் அவர்காட் டிய இரக்க உணர்ச்சியைப் பாராட் டாமல் இருக்க முடியாது. இம் மக்களின் பொருளாதார, சமூக நிலை மேம்பாடடைய அவர் நடத்திய மாபெரும் போராட்டங்களைப் பாராட்டாமல் இருக்கமுடியாது.
எம்.ஜி.ஆர் காலமான தினமின்று:!
தமிழ்த்திரை உலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்து, பின்னர் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக 10 ஆண்டுகள் பதவி வகித்த எம்.ஜி.ஆர். இதே டிசம்ப 24 (1987_திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போது கத்திபாரா நேரு சிலை திறப்பு விழா நடந்து முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, (அதாவது 24.12.1987 மாலை 5 மணிக்கு) சென்னை நேரு விளையாட்டு அரங்கில் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக தொடக்க விழா நடைபெறுவதாக இருந்தது.கவர்னர் குரானா தலைமையில் ஜனாதிபதி ஆர்.வெங்கடராமன் “எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக”த்தை தொடங்கி வைக்க இருந்தார். இந்நிலையில் 23ந்தேதி இரவில் ராமாவரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் எம்.ஜி.ஆர். படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். இரவு 12.30 மணிக்கு “பாத்ரூம்” சென்று வந்தார். சிறிது நேரத்தில் “நெஞ்சு வலிக்கிறது” என்று கூறினார். அவருக்கு தண்ணீர் கொடுத்தார்கள்.அதை வாங்கிக் குடித்ததும் மயக்கம் அடைந்தார். உடனே டாக்டர்கள் விரைந்து வந்து சிகிச்சை அளித்தனர். மீண்டும் இதயத்துடிப்பு வருவதற்கு உரிய சிகிச்சைகள் செய்தார்கள்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்கவில்லை. அதிகாலை 3 மணிக்கு உயிர் பிரிந்தது. “திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தனர். எம்.ஜி.ஆருக்கு மாரடைப்பு ஏற்பட்ட செய்தி கிடைத்ததும், அமைச்சர்கள் ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர். வீட்டுக்கு விரைந்து சென்று அங்கேயே இருந்தனர். “எம்.ஜி.ஆர். மறைந்து விட்டார்” என்று டாக்டர்கள் அறிவித்தபோது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். எம்.ஜி.ஆர். அருகிலேயே அழுதபடி இருந்த ஜானகி அம்மாள், மயக்கம் அடைந்தார். எம்.ஜி.ஆர். மறைவுச் செய்தியை அறிந்ததும், ஜெயலலிதா உடனடியாக ராமாவரம் தோட்டத்துக்கு விரைந்தார். கோவை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து விட்டு காலை 5.45 மணிக்கு ரெயில் மூலம் சென்னை வந்து சேர்ந்த தி.மு.கழகத் தலைவர் கருணாநிதிக்கு, எம். ஜி.ஆர். மரணச்செய்தி தெரிவிக்கப்பட்டது. துயரம் அடைந்த அவர், உடனே சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து நேராக ராமாவரம் தோட்டத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.( அதெல்லாம் இல்லை . ராமாவரம் வந்தவரை உள்ளே விடவில்லை என்போருமுண்டு?) ஆனால் பாரதிராஜாதான் வேகமாகப் போய் எம் ஜி ஆருக்கு எம் ஜி ஆர் மேக் அப் செய்தார் என்றும் சேதியுண்டு. இதையடுத்தே அமைச்சர்கள், பிரமுகர்கள், நடிகர், நடிகைகள் ராமாவரம் தோட்டத்துக்கு சென்று இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர் எம்.ஜி.ஆர். உடல், காலை 8.40 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் இருந்து பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்த ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு போகப்பட்டது.அங்கு 6 அடி உயரத்தில் மேடை அமைக்கப்பட்டு அதில் எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டது. ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். எம்.ஜி.ஆர். உடலைக் கண்டு அவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். எம்.ஜி.ஆர். மரணம் அடைந்ததை அடுத்து நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல் அமைச்சராக பதவி ஏற்றார்.அவருக்கு கவர்னர் குரானா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். எம்.ஜி.ஆரின் மறைவு அவரது மனைவி ஜானகி அம்மாளை வெகுவாகப் பாதித்தது.அதனால் அவர் ராஜாஜி மண்டபத்துக்கு செல்ல டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. ஜானகி அம்மாளை ராமாவரம் வீட்டில் தங்க வைத்து டாக்டர்கள் அவரது உடல் நிலையை கண்காணித்து வந்தனர். எம்.ஜி.ஆர். உடல் வைக்கப்பட்டு இருந்த ராஜாஜி மண்டபத்திலேயே இடைக்கால முதல் அமைச்சர் நெடுஞ்செழியன் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. “அண்ணா சமாதிக்கு தென்புறத்தில், எம்.ஜி.ஆர். உடலை சந்தனப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. எம்.ஜி.ஆர். இறுதி ஊர்வலம் ராணுவ மரியாதையுடன் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் பத்மநாபன் கூறினார். எம்.ஜி.ஆர். உடல் மீது தேசிய கொடி போர்த்தப்பட்டு இருந்தது. உடல் அருகே அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் கண்களில் கண்ணீருடன் அமர்ந்து இருந்தனர்.ராஜாஜி மண்டபத்துக்கு வெளியே கண்ணுக்கெட்டிய தூரம் வரை மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் நீண்ட “கியூ” வரிசையில் நின்றனர். அவர்களில் பலர் அழுதபடி இருந்தனர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. பொதுமக்கள் விடிய விடிய எம்.ஜி.ஆர். உடலுக்கு மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆண்கள், பெண்கள் தனித்தனி நீண்ட கியூ வரிசைகளில் நின்ற னர்.ஒவ்வொரு `கியூ’ வரிசையும் 4 மைல் நீளத்துக்கு நீண்டிருந்தது. தமிழ்நாடு முழுவதும் வாகன போக்குவரத்து ஸ்தம்பித்தது. ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. சினிமா ஸ்டூடியோக்கள் மூடப்பட்டன. எம்.ஜி.ஆர். மறைவையொட்டி தமிழ்நாட்டில் ஒரு வாரம் துக்கம் கடைபிடிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.எம்.ஜி.ஆருக்கு மரியாதை தெரிவிக்கும் வகையில் மத்திய அரசு தேசிய அளவில் ஒரு நாள் துக்கம் அனுஷ்டிக்க உத்தரவிட்டது. எம்.ஜி.ஆர். மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் அனுதாப செய்தி அனுப்பினார். அதில்,””தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மறைவு அறிந்து நாம் அதிர்ச்சியும், வேதனையும் அடைகின்றோம். தமிழீழப் போராட்டத்தில் அவர் காட்டிய அக்கறையும், குறிப்பாக அவர் என் மீது கொண்டிருந்த அன்பையும், எமது இயக்கத்தின் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும் எம்மால் மறக்க முடியாது. தமிழீழப் போராட்டத்தின் வெற்றிக்காக எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் தமிழீழ மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும். ”என பிரபாகரன் தனது அறிக்கையில் கூறி இருந்தாராக்கும்.
நேபாளம் காட்மாண்டு விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை ( பிளைட் நம்பர் IC 814) ஆயுத முனையில் ஆஃப்கானிஸ்தான் நாட்டு காந்தஹாருக்கு பயங்கரவாதிகள் கடத்திய தினம் இன்று(1999). ஒரு வாரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த கடத்தல் விவகாரத்தில் பயங்கரவாதிகள் கேட்ட (இந்திய சிறையில் இருந்த) அவர்கள் தோழர்களை இந்திய அரசு விடுதலை செய்து பயணிகள் மீட்கப்பட்டனர்.
வாஸ்கொடகாமா இறந்த தினம்
வாஸ்கொடகாமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 டிசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய ஆளுமைக்கு உட்பட்ட இந்தியாவின் ஆளுநர் ஆனார். வாஸ்கோ ட காமா 1460இலோ[1] அல்லது 1469இலோ[2] போர்ச்சுக்கலின் தென்மேற்குக் கடற்கரையிலுள்ள சைன்ஸ் என்ற இடத்தில் நோசா சென்கோரா டாஸ் சலாஸ் என்ற தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீட்டில் பிறந்திருக்கக்கூடும். அலென்டெஜோ கடற்கரையிலுள்ள ஒரு சில துறைமுகங்களுள் சைன்சும் ஒன்றாகும்.
வாஸ்கோ ட காமாவின் ஆரம்ப கால வரலாறு மிகவும் குறைவாக மட்டுமே தெரிந்திருக்கிறது. போர்ச்சுக்கீசிய வரலாற்றறிஞர் டெய்க்செய்ரா டி அரகாவோவின் கூற்றுப்படி வாஸ்கோ ட காமா உள்ளூர் நகரான எவோராவில் கணிதவியலும் பயணவியலும் படித்ததாகக் கூறுகிறார். இது காமாவிற்கு வானியல் நன்றாகத் தெரிந்திருக்கும் என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. எனவே வானியலாளர் ஆபிரகாம் சாகுட்டோவிடம் வாஸ்கோ ட காமா வானியல் பயின்றிருக்ககூடும்.