தந்தை பெரியார் “ஈ.வெ.ராமசாமி”

 தந்தை பெரியார் “ஈ.வெ.ராமசாமி”

பிறப்பு

பகுத்தறிவுப் பகலவன் எனப் போற்றப்படும் தந்தைப் பெரியார், 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் ஈரோடு மாவட்டத்தில், வெங்கட்ட நாயக்கர் – சின்னதாயம்மையாருக்கு மகனாகப் பிறந்தார். இவருடைய குடும்பம் வசதியான வணிக பின்னணியைக் கொண்டது. இளம் வயதிலேயே, தன்னியல்பாக அவருக்குள் பகுத்தறிவு துளிர்விடத் தொடங்கியது.

இதனால், சமூக ஏற்றத்தாழ்வு, தீண்டாமை, மூட நம்பிக்கை, பார்ப்பனிய ஆதிக்கம் என எல்லாவற்றுக்கும் எதிரான கேள்விகளை அவர் கேட்கத் தொடங்கினார். 1902 ஆம் ஆண்டுகளில் கலப்புத் திருமணங்களை நடத்தி வைத்தார். அனைத்து சமய, சாதியினருடனும் அமர்ந்து விருந்துண்டார். இதனால் பெரியாருக்கும், அவருடைய தந்தைக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. பின்னர், அவருடைய பகுத்தறிவுச் செயல்களை ஏற்கமுடியாத தந்தையின் கண்டனத்தால் துறவு பூண்டு காசிக்குச் சென்றார் பெரியார்.

காங்கிரஸ் ஈடுபாடு

காசியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், போலி மதச்சடங்குகள், மனிதத்தன்மையற்ற விதிமுறைகள் அவரை முழுமையாக ஓர் இறை மறுப்பாளராக மாற்றிவிட்டன. இதனிடையே அண்ணல் காந்தியாரால் கவரப்பட்டு காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு கொண்ட பெரியார், 1919 ஆம் ஆண்டு தன்னை அக்கட்சியில் இணைத்துக் கொண்டார். காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றியது மட்டுமல்லாமல் பிறருக்கும் எடுத்தும் கூறினார். கதர் அணிவதை வலியுறுத்தி, வெளிநாட்டுத் துணிகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல் போராட்டங்களையும் நடத்தினார்.

1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துவக்கத்திலிருந்தே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஆதரித்து வந்த தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்குள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காகப் பல்வேறு மாநாடுகளில் “வகுப்புவாரித் தீர்மானம்” கொண்டு வந்து நிறைவேற்ற முயற்சித்தார். இறுதிக் கட்ட முயற்சியாக 1925 காஞ்சிபுரம் மாநில மாநாட்டிலும் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற இயலாததால் அந்த மாநாட்டிலேயே காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

கள்ளுக்கடை மறியல்

1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார்.

1921-1922-ல் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.

வைக்கம் போராட்டம்

கேரளத்தில் உள்ள வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள பொதுப் பாதையில், ஈழவர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் நடந்து செல்லக் கூடாது என்கிற கொடுமை நிலவியது. பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுக்கு விடுதலை பெற்றுத் தரும்படி பெரியாருக்கு அழைப்பு விடுத்தனர். 1924-ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றிருந்த பெரியார், நேராக வைக்கம் சென்று திருவிதாங்கூர் மன்னரின் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்டார். பெரியாரை ஒழித்துக்கட்ட எண்ணிய சனாதனிகள், ‘சத்ரு சம்ஹார யாகம்’ நடத்தினர். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக யாகம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதே திருவிதாங்கூர் மன்னர் மரணமடைந்தார்.

ஒரு கட்டத்தில், வைக்கம் போராட்டத்தில் நடுநிலை வகிக்கக் காந்தியடிகள் நேரில் வர நேரிட்டது. அவரிடம், “நாங்கள் வீதிகளைத் திறந்துவிடத் தயார். ஆனால், ஈ.வெ.ரா இதைப் பயன்படுத்தி கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்று கேட்பாரே” என்று அச்சப்பட்டார் திருவிதாங்கூர் மகாராணி. ராணியின் எண்ணத்தைப் பெரியாரிடம் காந்தியடிகள் கூறியபோது, “எல்லா மக்களும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்பதுதான் எனது லட்சியம். அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்க இயலாது. இப்போதைக்கு வேண்டுமானால் பேசாமல் இருப்போம்” என்று தெளிவாக எடுத்துரைத்தார். இதையடுத்து, தெருவில் நடக்கவிருந்த தடைகள் அகற்றப்பட்டன. பெரியாருக்கு ‘வைக்கம் வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.

குருகுலத்தில் தீண்டாமை

சேரன் மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறி முறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் குழு ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள், இந்தக் குருகுலத்தில் தங்கிப் படித்து வந்தனர். அவர்களில், முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மகனும் ஒருவர்.

இந்தக் குருகுலத்தில் பிராமண மாணவர்களுக்கு அறுசுவை உணவும், பிராமணரல்லாத மாணவர்களுக்குச் சாதாரண உணவும் வழங்கப்பட்டது. தண்ணீர்ப் பானையும் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒருநாள், ஓமந்தூராரின் மகன் பிராமணர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பானையில் தண்ணீர் அருந்தியதைக் கண்ட வ.வே.சு ஐயர், அவனை ஓங்கி அறைந்துவிட்டார். இதை அவன் ஓமந்தூராரிடம் கூற, அவர் அவனை ஈரோட்டிற்குச் சென்று முறையிடச் சொன்னார்.

தீண்டாமை கண்டு கடும் கோபமுற்ற பெரியார், இதுகுறித்து விசாரிக்க 1925-ம் ஆண்டு ஜனவரி 17-ம் நாள், காங்கிரஸ் செயற்குழுவைக் கூட்டினார். குருகுலத்தில் அனைவருக்கும் சமமான உணவு வழங்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்துவிட்ட வ.வே.சு ஐயர், “இங்கு இப்படித்தான் நடக்கும்” என்று சாதி ஆணவத்துடன் பதிலளித்தார். தகவல் காந்தியடிகள் வரை கொண்டு செல்லப்பட்டது. அவர், வழவழ கொழகொழ என்று சப்பைக் கட்டுக் கட்டினார். “குருகுலத்தை உருவாக்குவது கடினம். அதன் நிர்வாகத்தில் நாம் தலையிடக் கூடாது” என்றார் இராஜாஜி.

இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பெரியார் அணி வெற்றிபெற்றது. சமபந்தி கோரிக்கை ஏற்கப்படாததால், நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதன் பிறகு ஒருநாள், மகளை அழைத்துக்கொண்டு பாபநாசம் சென்ற வ.வே.சு ஐயர், அருவியில் தவறி விழுந்த மகளைக் காப்பாற்ற முயன்று, இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். குருகுலம் மூடப்பட்டது.

சேரன் மாதேவியில் நடைபெற்ற நிகழ்வு பெரியாரின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

காங்கிரசை விட்டு வெளியேறுதல்

சட்டமன்றத் தேர்தலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அடிப்படையில் உறுப்பினர்களை நிறுத்த வேண்டும் என்று கூறி வந்த பெரியார், 1920-ம் ஆண்டு, திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாகாண அரசியல் மாநாட்டில், “அரசுப் பணிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப வகுப்புவாரி இட ஒதுக்கீடு வேண்டும். பள்ளிகளில் சமஸ்கிருத கல்விக்கு உரிய மரியாதையைத் தமிழுக்கும் தர வேண்டும்” என்று தீர்மானம் இயற்றினார். ஆனால், சீனிவாசன் ஐயங்கார் இந்த இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை நிராகரித்தார்.

1921-ம் ஆண்டு, தஞ்சாவூரில் நடைபெற்ற தமிழ் மாகாண 27-வது அரசியல் மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை, இராஜாஜி குறுக்கிட்டுத் தடை செய்தார். 1923-ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற 29-வது மாகாண மாநாட்டில் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தையும் இராஜாஜி தடுத்து நிறுத்தினார்.

1925-ம் ஆண்டு, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுத் தீர்மானத்தை மாநாட்டுத் தலைவராக இருந்த திரு.வி.க தோற்கடித்தார். இது, ஈ.வெ.ரா.வுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இராஜாஜி செய்து வந்த துரோகத்தை இவரும் செய்துவிட்டாரே என்றெண்ணி மிகவும் வேதனையடைந்தார். “தேசியவாதிகளின் உள்ளத்தில் வர்ணாசிரமக் கொள்கைகள் இருக்கும்வரை என் போன்றவர்கள் போராடிக்கொண்டே இருப்போம்” எனக்கூறி, காங்கிரசை விட்டு வெளியேறினார்.

சுயமரியாதை இயக்கம்

1925 ஆம் ஆண்டு பெரியாரால் சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் முக்கிய கொள்கையே ‘மூடப் பழக்க வழக்கங்களைச் சமூகத்தில் மக்களிடமிருந்து அகற்றுவதை’ நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்தார். தென்னிந்தியாவில் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள், பார்ப்பனரல்லாதவர் என்ற காரணத்தால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர் வாழ்வு சுரண்டப்படுவதையும், பெரியார் எதிர்த்தார். கைம்பெண் மறுமணம் போன்ற புரட்சித் திருமணங்களை நடத்திக் காட்டியது மட்டுமல்லாமல் கலப்பு திருமண முறையையும் இந்த இயக்கம் ஆதரித்தது. கோயில்களில் சட்டத்திற்குப் புறம்பாகப் பின்பற்றப்படும் தேவதாசி முறையையும், குழந்தைகள் திருமணத்தையும் தடைசெய்தது.

அரசு நிர்வாகப் பணி மற்றும் கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு முறையைக் கடைப்பிடிக்க இந்த இயக்கம் வலியுறுத்தியது. பின்னர், 1925 ஆம் ஆண்டு தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்புவதற்கு “குடியரசு நாளிதழை” தொடங்கினார். சுயமரியாதை இயக்கம், வெகுவேகமாக வளர்ந்தது மட்டுமல்லாமல், மக்களின் ஆதரவையும் பெற்றது.

குடியரசு வார இதழ்

பார்ப்பனரல்லாதவர்களின் பிரச்சனைகளையும் பெரியாரின் போராட்டங்களையும் பெரும்பாலான ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்ததால், 1925-ம் ஆண்டு ‘குடியரசு’ என்ற வார இதழைத் தொடங்கினார். 1927-ம் ஆண்டு ‘திராவிடன்’ என்ற நாளிதழுக்கு ஆசிரியர் பொறுப்பேற்று பணியாற்றத் தொடங்கினார். தமது கருத்தை மேல்நாட்டினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்பதற்காக, ரிவோல்ட் (Revolt) என்கிற ஆங்கில இதழையும் தொடங்கினார்.

திராவிட நாடு

இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்புப் பெரியாருக்கு வழங்கப்பட்டது. அதே நேரத்தில், 1939-ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. இந்தப் போரில் இந்தியாவும் பங்கு பெறுவதாக இந்தியர்களைக் கேட்காமலேயே இந்திய வைஸ்ராய் அறிவித்ததால், பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தியர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க மாகாண காங்கிரஸ் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததால், இராஜாஜி பதவி விலகினார். நீதிக்கட்சியோ, வைஸ்ராயின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்தது. இதனிடையே, இஸ்லாமியர்களுக்குத் தனிநாடு வேண்டும் என ஜின்னா கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து, தமிழ்நாடு தமிழருக்கேயெனக் கூறி வந்த பெரியார், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் பகுதிகளைச் சேர்த்து, ‘திராவிட நாடு’ கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினார்.

நீதிக்கட்சி

இராஜாஜி பதவி விலகியிருந்ததால் நீதிக்கட்சி அமைச்சரவை பொறுப்பேற்கும்படி சென்னை மாகாண ஆளுநர் கேட்டுக்கொண்டார். மேலும், பெரியாரைச் சந்தித்த இராஜாஜி, அவரை முதலமைச்சர் பொறுப்பேற்கும்படியும் அதற்குத் தானும் தமது அமைச்சர்களும் ஆதரவு தருவதாகவும் கூறினார். ஆனால், தனக்குப் பதவிமேல் ஆசையில்லை என்று பதிலுரைத்தப் பெரியார், 1939-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் நாள், நீதிக்கட்சியின் நிர்வாகக் குழுவைக் கூட்டி, நீதிக்கட்சி எந்தப் பதவியையும் ஏற்காது என அறிவித்தார்.

நீதிக்கட்சியில் பெரியார்

1926-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், நீதிக்கட்சி தோல்வியடைந்து, காங்கிரஸ் வெற்றியடைந்தது. அந்தத் தேர்தலில் பெரியார் நடுநிலை வகித்தார். பின்னர் அவர், சுயமரியாதைப் பரப்புரையில் மிகத் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். தோல்வி தந்த அதிர்ச்சியால் நீதிக்கட்சி சிதறிப்போகும் என்ற நிலை இருந்ததால், அக்கட்சித் தலைவர்கள் பெரியாரைத் தங்கள் கட்சியில் சேருமாறு அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, 1926-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 25, 26 தேதிகளில் நீதிக்கட்சி சார்பில் மதுரையில் நடைபெற்ற பிராமணரல்லாதார் மாநாட்டில் பெரியார் தலைமையேற்றுப் பேசினார். பெரியார் நீதிக்கட்சியில் இணைந்ததும் அக்கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகியது.

சமூகப்பணி

பொருளாதார ஏற்றத் தாழ்வற்ற பொதுவுடைமைச் சமுதாயம், ஆண் – பெண் யாரும் தாழ்ந்தவர்கள் அல்ல, சாதி – மதம் – வர்ணம் – கடவுள் இல்லாத அறிவிற்சிறந்த சமுதாயம், பெண்களுக்கு இளம் வயதில் திருமணம் செய்யாதிருத்தல், கணவனுடன் மனம் ஒன்றி வாழ முடியாத நிலையில் விவாகரத்து, கைம்பெண் மறுமணம், பார்ப்பனர் அல்லாத திருமணம் போன்றவற்றை எடுத்துக்கூறி, தமிழ்நாடெங்கும் பெரியார் பரப்புரையில் ஈடுபட்டார். இதனால், தமிழர்கள் ஓரளவு விழிப்புணர்வு பெற்றனர். இளைஞர்கள் புத்துணர்வு பெற்றனர். சாதி மறுப்புத் திருமணங்களை ஆர்வமுடன் வரவேற்றனர். சாதியைக் குறிக்கும் பிள்ளை, முதலியார், செட்டியார், நாயக்கர் போன்றவற்றைப் பெயருக்குப் பின்னால் சேர்க்கக் கூடாது என்கிற பெரியார் கோரிக்கையை, பெரும்பாலான தமிழர்கள் பின்பற்றத் தொடங்கினர். இதன் பிறகு, மலேசியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.

இந்தி எதிர்ப்புப் போர்

1937-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் நாள், சோமசுந்தர பாரதியார் தலைமையில், திருச்சியில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் ‘தமிழ்நாட்டைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கிருந்து இந்தியை அடியோடு அகற்ற வேண்டும் எனக்கூறி இளைஞர் படை ஒன்று சென்னை நோக்கிப் புறப்பட்டது. சென்னை கடற்கரையில் தனது தலைமையில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசிய பெரியார், “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முதல் முழக்கமிட்டு இந்தி எதிர்ப்புப் போரைத் தொடங்கி வைத்தார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். 1938 டிசம்பர் 6-ம் நாள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் பெரியாருக்கு, இரண்டு குற்றங்களுக்கெனத் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்படுவதற்கு முன்னதாக நீதிமன்றத்தில் பெரியார் அளித்த வாக்குமூலம், உலக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது.

“இந்த நீதிமன்றம் காங்கிரஸ் அரசாங்கத்தின், அவர்களது அமைச்சர்களின் நிர்வாகத்துக்கு உட்பட்டது. நீதிபதியும் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர். இவை தவிர, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்பதில், காங்கிரஸ் அமைச்சர்கள் அதிதீவிரம் கொண்டிருந்தார்கள். இந்த விஷயத்தில் நியாய, அநியாயம் பார்க்க வேண்டியதில்லை என்றும், இந்தக் கிளர்ச்சியைத் திடீரென்று புகுந்துவிட்ட திருடர்களுடன் ஒப்பிட்டுக் கனம் முதன் மந்திரியார் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே, இந்தி எதிர்ப்பு விஷயமாக மந்திரிகள் எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகள், அடக்குமுறையே என்பது எனது கருத்து.

அடக்குமுறை காலத்தில் இம்மாதிரி நீதிமன்றங்களில் நியாயத்தை எதிர்பார்ப்பது, பைத்தியக்காரத்தனமாகும். ஆதலால், இந்த நீதிமன்றத்தின் நியாயத்தில் – இந்த வழக்கில் எனக்கு நம்பிக்கை இல்லை. எனவே, நீங்கள் திருப்தி அடையும் வகையில், தங்களால் எவ்வளவு அதிகத் தண்டனையைக் கொடுக்க முடியுமோ அவ்வளவு தண்டனையும், பழிவாங்கும் உணர்ச்சி திருப்தி அடையும் வரைக்கும் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு கொடுக்க இடமுண்டோ அதையும் கொடுத்து, இவ்வழக்கு விசாரணை நாடகத்தை முடித்துவிடும்படி வணக்கமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

எவ்வளவு நியாயமான இலட்சியத்தை அடைய வேண்டுமானாலும், அதற்காகக் கஷ்ட நஷ்டங்களை அடைதல் எனும் விலையைக் கொடுத்தே ஆக வேண்டும். ஆதலால், அவ்வாறே வேண்டிக்கொள்கிறேன்.” என நீதிமன்றத்தில் தனக்காக வழக்காட மறுத்து, பெரியார் அவர்கள் எடுத்து வைத்த வாதம் இதுதான். தலா ஓராண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டாலும், உடல்நிலை காரணமாக மூன்றரை மாதங்களில் பெரியார் விடுதலை செய்யப்பட்டார்.

1937-ம் ஆண்டு தலைகாட்டிய இந்தி, அதன் பிறகு 1948-ம் ஆண்டிலும் 1966ம் ஆண்டிலும் மோதிப் பார்த்தது. அப்போதெல்லாம் அண்ணாவும் பெரியாரும் அரணாக நின்று அதை முறியடித்தார்கள். அண்ணா முதலமைச்சரானதும் இந்தித் திணிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

திராவிடர் கழகம்

தந்தை பெரியார் அவர்கள், நீதிக்கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ‘நீதிக்கட்சி’ என்ற பெயரை 1944-ல் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றினார். திராவிட கழகத்தின் கொள்கைகள் வெகுவிரைவில் மக்களிடத்தில் சேர்ந்தது. திராவிடர் கழகம், சமூகத்தில் பரவிக் கிடந்த தீண்டாமையை ஒழிப்பதிலும், சுயமரியாதை, சாதி எதிர்ப்பு, பகுத்தறிவு, இறை மறுப்பு, பெண் உரிமை மற்றும் பெண்கல்வி போன்றவற்றையும் வலியுறுத்தித் தொடங்கப்பட்ட ஒரு சமூக இயக்கமாகும். ‘கருப்பு சதுரத்தின் நடுவே சிவப்பு வட்டம்’ என்பதே திராவிட கழகத்தின் கொடியாக இருந்தது.

பகுத்தறிவு, இறை மறுப்பு, சுயமரியாதை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, தீண்டாமை எதிர்ப்பு, பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்குக் கல்வி உள்ளிட்ட தீவிரமான கொள்கைகளை வலியுறுத்தும் இயக்கமாகத் திராவிடர் கழகத்தின் பெருமை நடைபோட்டது.

பேரறிஞர் அண்ணா, முத்தமிழர் கலைஞரெனப் பல தலைவர்கள் திராவிடர் கழகத்தில் இணைந்து தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காகச் சீரிய அரசியல் பணியாற்றினர்.

சமுதாய சீர்திருத்தப் பணிகள்

தந்தை பெரியார் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு கைம்பெண்கள் திருமணம்குறித்துப் பேசியபோது, கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. “விதவைக்கு மறுமணமா? எவ்வளவு பெரிய அக்கிரமம், அநியாயம்” என்றெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரே எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இது மட்டுமல்லாமல் பெண்களுக்குச் சொத்துரிமை, பெண்களுக்குக் கட்டாயக் கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காகப் பெரியார் குரல் கொடுத்து வந்த நிலையில், 1938-ம் ஆண்டு நவம்பர் 13-ம் நாள், சென்னை ஒற்றைவாடை திரையரங்கில் ‘தமிழ்நாடு பெண்கள் மாநாடு’ கூடிற்று. தங்களுக்காகப் போராடிய ஈ.வெ.ரா.வை இனிமேல் ‘பெரியார்’ என்றே அழைக்க வேண்டும் என்று அந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இறுதிக்காலம் ஆற்றிய பணிகள்

இந்து மத மூடநம்பிக்கைகளை அறவே எதிர்த்த பெரியார், 1952-ல் பிள்ளையார் உருவ பொம்மைகளை உடைத்தது மட்டுமல்லாமல், 1956 ஆம் ஆண்டு இந்துக்களின் கடவுளாகக் கருதப்பட்ட ராமரின் உருவப்படம் எரிப்புப் போராட்டத்தையும் நடத்தி, கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 1962 –ல் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளராகக் கி. வீரமணியை நியமித்தார். மக்களுக்குள் சுயமரியாதை, சமத்துவம், சகோதரத்துவம் ஓங்கி வளர வேண்டும் என்று கடைசிவரை போராடிய பெரியாரின் கடைசி கூட்டம் 1973 டிசம்பர் 19 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் ‘சாதி முறையையும், இழிவு நிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும்’ என்று முழக்கமிட்டு தன்னுடைய கடைசி உரையை முடித்துக்கொண்டார்.

‘பகுத்தறிவின் சிற்பி’, ‘அறிவு பூட்டின் திறவுகோல்’, எதையும் ‘ஏன்? எதற்கு? எப்படி?’ என்று கேட்கவைத்தவர், மூட நம்பிக்கையை ஒழித்துத் தன்னம்பிக்கையை விதைத்தவர், உலகின் மாபெரும் சுய சிந்தனையாளரும், அழியாத வரலாற்றின் அறிஞருமான தந்தைப் பெரியார், தன் இறுதி மூச்சு வரை, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு போன்றவற்றில் உறுதியாகவும், சமூகநீதி உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளுக்காக அயராது போராடியும் வந்தார். 1973-ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி தனது 94-ஆம் வயதில் அந்த அறிவுச் சுடர் அணைந்தது. அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர், பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டு, அதன் படியே தந்தைப் பெரியார் அவர்களுக்குத் திராவிட இயக்கத்தின் மரியாதையைச் செலுத்தினார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...