ஆண்டுக்கு இவர்கள் கொடுக்கும் லஞ்சம் மட்டும் 48,000 கோடியா?

 யாருப்பா நீங்க?

  புது தில்லி: போக்குவரத்துக் காவலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லாரி ஓட்டுநர்களும் உரிமையாளர்களும் ஆண்டுக்கு ரூ.48,000 கோடியை லஞ்சமாக அளிக்கிறார்களாம்.

   போக்குவரத்து மற்றும் வரித்துறைக்கு அளிக்கும் கட்டணத் தொகைகள் தவிர்த்து, லஞ்சமாக மட்டும் நாடு முழுவதும் லாரி ஓட்டுநர்கள் கொடுக்கும் பணம் 48 ஆயிரம் கோடி என்பது சேவ்லைஃப் அறக்கட்டளை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

   லாப நோக்கற்ற அமைப்பான சேவ்லைஃப் அறக்கட்டளை நாடு முழுவதும் சுமார் ஆயிரத்து இருநூறு லாரி ஓட்டுநர்கள் மற்றும் 110 லாரி உரிமையாளர்களிடம் நடத்திய ஆய்வில், 82% பேர் சாலைப் பயணத்தின் போது ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

  அதாவது, ஒரு லாரி ஓட்டுநர் தனது ஒரு பயணத்துக்கு மட்டும் சராசரியாக ரூ.1,257ஐ லஞ்சமாக அளிக்கிறார். தில்லியில் மட்டும் சுமார் 84% லாரி ஓட்டுநர்கள் போக்குவரத்து அல்லது நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லஞ்சம் அளிப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

  தில்லி – என்சிஆர் சாலையில் பயணிக்கும் லாரி ஓட்டுநர்களில் 78% பேர் தங்களது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்காத காரணத்துக்காக லஞ்சம் அளிக்கிறார்கள்.

தில்லியில் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்காதவர்கள் அளிக்கும் சராசரி லஞ்சம் ரூ.2,025 ஆக உள்ளது.

   இதில் குவகாத்தியில்தான் 97.5% ஓட்டுநர்கள் தாங்கள் போக்குவரத்து அல்லது நெடுஞ்சாலைத்துறை காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். இது சென்னையில் 89% ஆகவும், தில்லியில் 84.4 சதவீதமாகவும் உள்ளது.

   அதுமட்டுமல்ல, சில பகுதிகளில், ஒரு போக்குவரத்துக் காவலருக்கு லஞ்சம் கொடுத்தால் போதும், அவர் ஒரு சிறப்பு துண்டுச் சீட்டைக் கொடுப்பார். அதை லாரி ஓட்டுநர் வழிநெடுகிலும் காட்டிவிட்டு எளிதாக தனது பயணத்தை மேற்கொள்ளவும் சிறப்பு வசதிகளை செய்து கொடுக்கிறார்களாம்.

   அதுமட்டுமல்ல, 47% ஓட்டுநர்கள், தங்களது ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்கவும் லஞ்சம் கொடுப்பதை ஒப்புக் கொண்டுள்ளனர். மும்பையில் இது 93% ஆக உள்ளது. ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க ஓட்டுநர்கள் அளிக்கும் லஞ்சப் பணத்தின் சராசரி ரூ.1,789 ஆக உள்ளது. இதுவே தில்லியில் ரூ.2000 ஆக உள்ளது.

லாரி உரிமையாளர்களும், வாகன உரிமையைப் புதுப்பிக்க சராசரியாக ரூ.1360ஐ லஞ்சமாகக் கொடுப்பதாக 43%பேர் ஒப்புக் கொண்டுள்ளனர்.

  அது மட்டுமல்ல, ஓட்டுநர்களிடம் கேட்கப்பட்ட இது தவிர்த்த கேள்விகளுக்கு அவர்கள் அளித்துள்ள பதிலில், பெரும்பாலான ஓட்டுநர்கள் இந்த வேலையை தங்கள் உறவினர்களுக்கு பரிந்துரைக்க மாட்டார்கள் என்றும், 50% லாரி ஓட்டுநர்கள் தூக்கக் கலக்கத்திலும், மயக்க நிலையிலும் கூட வாகனத்தை இயக்குவதை ஒப்புக் கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!