பால் அருந்துவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருமா?
பால் அருந்துவதனால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கும் பால் பொருட்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அமெரிக்காவின் லோமா லிண்டா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு, சர்வதேச தொற்றுநோயியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு ஒரு கப்-க்கும் குறைவாக பால் குடிக்கும் பெண்களுக்கு 30% மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.
அதேபோன்று, நாள் ஒன்றுக்கு ஒரு கப் பால் குடிப்பதன் மூலமாக 50 சதவீதம் வரையிலும், இரண்டு முதல் மூன்று கப் குடிப்பவர்களுக்கு, 70 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
கிட்டத்தட்ட 53,000 வட அமெரிக்க பெண்களை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்களின் உடல் பிரச்னை, மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாறு, ஆல்கஹால் நுகர்வு, ஹார்மோன் மற்றும் பிற மருந்து பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் புள்ளி விவரங்களாக எடுக்கப்பட்டன. ஆய்வு காலத்தின் முடிவில் 1,057 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டிருந்தது.
இறுதியாக, அதிக அளவு பால் உட்கொள்ளும்போது மார்பக புற்றுநோய் தாக்கத்திற்கான வாய்ப்பு அதிகம் என இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொழுப்பு முழுதும் நீக்கப்பட்ட பால் அல்லது கொழுப்பு குறைவான பாலை உட்கொள்ளும்போது அதன் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.