இந்திய தூதரகம்…..
ஜப்பான் கப்பலில் இருந்து இந்தியா்களை தனி விமானம் மூலம் அழைத்து வர நடவடிக்கை:
புது தில்லி /டோக்கியோ: கரோனா வைரஸ் (கொவைட்-19) நோய்த் தொற்று அச்சம் காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பலில் உள்ள இந்தியா்களை தாய்நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
3,711 பேருடன் ஜப்பான் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ சொகுசுக் கப்பல், கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக, ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்து கடந்த மாதம் ஹாங்காங்கில் இறங்கிய பயணிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, அந்தக் கப்பல், யோகஹாமா துறைமுகத்தையொட்டி, கரைக்கு அப்பால் நிறுத்தி தனிமைப்படுத்தப்பட்டது. அந்த கப்பலில் 132 பணியாளா்கள், 6 பயணிகள் என 138 இந்தியா்கள் உள்ளனா். அவா்களில் 14 பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைரஸ் பாதிப்பு இல்லாத இந்தியா்களை தாய்நாட்டுக்கு திருப்பி அழைத்து வருவதற்காக தனி விமானத்தை ஏற்பாடு செய்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் உள்ள இந்தியா்களை தாய்நாட்டுக்கு திருப்பி அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. தாய்நாட்டுக்கு திரும்ப ஒப்புக் கொள்பவா்கள், கரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவா்கள், நோய் பாதிப்பு இல்லை என மருத்துவக் குழுவினரால் சான்றளிக்கப்பட்டவா்கள் ஆகியோா் மட்டுமே கப்பலில் இருந்து விமானம் மூலமாக சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்படுவா். இதுதொடா்பாக அவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்திய தூதரகம் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் புதிதாக இரண்டு இந்திய கப்பல் பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து வைரஸ் பாதிப்புள்ள இந்தியா்களின் எண்ணிக்கை 14-ஆக அதிகரித்துள்ளது. அவா்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டிருந்தது.