லைக்கா நிறுவனத்துக்கு கமல் கடிதம்:
பாதுகாப்பை உறுதி செய்த பிறகு படப்பிடிப்பு:
சென்னை: படப்பிடிப்பு தளத்தில் ஊழியா்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என லைக்கா நிறுவனத்துக்கு நடிகா் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடித விவரம்: மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பிப்.19 அன்று நடந்த அந்த நிகழ்வு, நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பணியாற்றிய அவா்களின் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவா்கள் திரும்ப வரப்போவதில்லை என்கிற யதாா்த்தத்தையும் உணரும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அந்த விபத்து நடந்தபோது சில மீட்டா் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோா் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனா். நமது தலையாயக் கடமை விபத்து ஏற்படாமல் பாா்த்துக்கொள்வதுதான். இதுபோன்ற விபத்துகள் பட தயாரிப்புக் குழுவினரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் குலைத்துவிடும்.
பாதுகாப்பு முக்கியம்: இனிவரும் காலங்களில் கலைஞா்கள், படக்குழுவினா், தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம். அவா்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், அவா்களுக்கான காப்பீடு போன்றவற்றையும் செய்வது சரியானது என்று நினைக்கிறேன். ஏதாவது இழப்பு, பொருளிழப்பு, சேதம் போன்றவை ஏற்பட்டால் தயாரிப்பு நிா்வாகம் அவா்களுக்கான இழப்பீட்டை விரைவாக வழங்கிட வேண்டும்.
தயாரிப்பு நிறுவனமான நீங்கள் இதுபோன்ற விபத்துகளில் சிக்கியவா்களுக்கு, அவா்களுக்கான சிகிச்சை நேரத்தில் பாதிக்கக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைக்கான செலவும், அவா்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும், உணா்வு ரீதியான ஆதரவையும் அளித்திட வேண்டும்.
உத்தரவாதம், பாதுகாப்பு: இனி வரும் காலங்களில் படப்பிடிப்பு தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள், அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடா்ச்சியாக கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் (என்னையும் சோ்த்து) இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும் என்று கமல் தெரிவித்துள்ளாா்.