திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீ விபத்து..!
திண்டுக்கல்லில் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுவன் உட்பட 7 பேர் பலியாகினர். திண்டுக்கல் திருச்சி ரோட்டில் சிட்டி மருத்துவமனை உள்ளது. 4 மாடிகள் கொண்ட இருந்த மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். வெளிநோயாளிகளாகவும் தினமும் பலர் வந்து செல்வர்.
நேற்று(டிச.,12) இரவு 9:30 மணிக்கு மருத்துவமனையின் முதல் தளத்தில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ மளமளவென பரவியது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் 2 லாரிகளில் வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் 100 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்தனர். தீ விபத்து ஏற்பட்டவுடன் அருகில் வசிப்போர், காந்திஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் நோயாளிகள் பலரை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இருப்பினும் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த திண்டுக்கல் பால திருப்பதி பகுதியைச் சேர்ந்த மணி முருகன் பலியானார். அவருக்கு உதவியாக வந்த அவரது தாய் மாரியம்மாள், மூன்று வயது குழந்தை உட்பட 7 பேர் தீயில் கருகி இறந்தனர். விபத்து ஏற்பட்டபோது லிப்டில் சிக்கிக்கொண்ட 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த அமைச்சர் பெரியசாமி, கலெக்டர் பூங்கொடி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியை வேகப்படுத்தினர்.
திண்டுக்கல் திருச்சி ரோடு சிட்டி ஆஸ்பத்திரியில் இரவு நேரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் உள்ளே இருந்து ஏராளமான மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். தொடர்ந்து தீ எல்லா பக்கமும் எரிந்தது. தீயணைப்புத் துறையினராலும் தீய முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் திணறும் நிலை ஏற்பட்டது. உள்ளே இருந்த நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்களும் வெளியே வர முடியாமல் கூக்குரல் இட்டனர். மருத்துவமனையில் உள்ளே இருந்த நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் நின்றபடி கதறி அழுது கொண்டிருந்தது பார்ப்பவர்கள் மனதை பாதிக்க வைத்தது.
விபத்து நடந்ததும் உள்ளே இருந்த நோயாளிகளை அதிகாரிகள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி ரோடு முழுவதும் அரை மணி நேரத்திற்கும் மேலாக நூறுக்கும் மேலான ஆம்புலன்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தது.
தீ விபத்தில் சிக்கி இருந்த நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வந்த உறவினர்கள் உட்பட 32 பேரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து இரவு முழுவதும் பொதுமக்கள் கூட்டம் அப்பகுதியில் இருந்தது.