பைக் டாக்ஸிகள் இயங்கலாம்..! -ஆனால்..?

 பைக் டாக்ஸிகள் இயங்கலாம்..! -ஆனால்..?

வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

வணிக நோக்கத்திற்காக (பைக்-டாக்சி) பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்களை இன்று முதல் ஆய்வு செய்து மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மண்டல மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொண்டு மண்டலம் வாரியாக தினசரி மாலை 7 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மோட்டார் வாகன விதியை மீறி இருசக்கர வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்ட விவகாரம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “பைக் டாக்சிக்கு ஒரு புறம் வரவேற்பு, மறுபுறம் எதிரிப்பு இருந்தாலும் இதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பு கருதியே கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வாடகை அல்லாத வாகனங்களில் ஒருவர் பயணம் செய்வதை சட்டம் ஏற்றுக்கொள்ளாத சூழல் உள்ளது. இதனால் சிறு விபத்து ஏற்பட்டால் கூட நீதிமன்றத்தால் நிவாரணம் மறுக்கப்படுகிறது.

பைக் டாக்சி விவகாரத்தில் மத்திய அரசுடன் இணைந்து முடிவெடுக்க வேண்டி உள்ளது. மத்திய அரசு இந்தியா முழுவதும் பைக் டாக்சிகள் இயக்க சில விதிமுறைகளை வழங்கி உள்ளது. இதுகுறித்து குழு அமைத்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பைக் டாக்சிக்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து வருகிறோம். பைக் டாக்சி பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறது. அதே சமயம் ஆட்டோ ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவுகிறது.

தமிழ்நாட்டில் பைக் டாக்சிகள் இயங்கலாம், ஆனால் விதி மீறலில் ஈடுபடக் கூடாது. விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே தணிக்கைக்கு உத்தரவிட்டுள்ளோம். உரிய உரிமம், மூன்றாம் நபர் காப்பீடு உள்ளிட்ட ஆவணங்களுடன்தான் இயக்க வேண்டும். விதிகளின்படி பைக் டாக்சிகள் இயக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...